1. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசத்திற்கும் பிறரன்புக்கும் இடையேயான நெருங்கியத் தொடர்பை வலியுறுத்துகிறார் திருத்தந்தை
2. திருத்தந்தை : கிறிஸ்தவம் இவ்வுலகின் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டதல்ல
3. அருள்பணியாளர்கள் வறியோர் சார்பாகத் தங்கள் விருப்பத் தேர்வுகளை எடுக்க வேண்டும் - கர்தினால் கிரேசியஸ்
4. அருள்பணியாளர்களின் சேவையை உலக சக்திகள் கட்டுப்படுத்த முடியாது - கத்தோலிக்கத் தலைவர் ஜான் தயாள்
5. ஜப்பானில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் ஆண்டு நினைவாக ஆயர்களின் கூட்டுத் திருப்பலி
6. எகிப்தில் தீக்கிரையான கிறிஸ்தவ ஆலயமும் கிறிஸ்தவர்களின் வீடுகளும்
7. பாகிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் சேர விழையும் கிறிஸ்தவ மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்
8. மேகாலயாப் பகுதி மக்களின் 'அன்னைத் தெரேசா'வாக விளங்கிய அருள் சகோதரி Amalia இறையடிச் சேர்ந்தார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசத்திற்கும் பிறரன்புக்கும் இடையேயான நெருங்கியத் தொடர்பை வலியுறுத்துகிறார் திருத்தந்தை
பிப்.16,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் விசுவாசத்திற்கும் பிறரன்புக்கும் இடையேயான நெருங்கியத் தொடர்பை உணர்ந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒருவர் ஒருவரிடையேயான ஒன்றிப்பிலும், மேய்ப்புப்பணி ஒத்துழைப்பிலும் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து, அவ்விரு கண்டங்களிலும் புதிய நற்செய்தி அறிவிப்பு குறித்து ஆலோசித்த உரோமைக் கூட்டத்திற்கு பின் அந்த ஆயர் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 2004ம் ஆண்டு இடம்பெற்ற முதல் கூட்டத்திற்குப் பின், கடந்த ஏழு ஆண்டுகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தன் பாராட்டுக்களையும் நன்றியையும் வெளியிட்டார்.
இன்றைய நவீன உலகில் காணப்படும் மதம் குறித்த பாராமுகம், மேலோட்டமான பக்தி முறைகள், உண்மைகளை எதிர்கொள்ளும் தயக்கம், கிறிஸ்தவ விரோதப் போக்கு, உலக சிற்றின்பங்களே பெரிதென எண்ணும் மனநிலை, குடும்ப அமைப்புகளில் மதிப்பீடுகள் குறித்த நெருக்கடி, கீழ்த்தரமான பாலின இலக்கியங்கள் மற்றும் பரத்தமை போன்ற சமூக பதட்டநிலைகளின் அடையாளங்கள் குறித்து தன் உரையில் கவலையை வெளியிட்ட பாப்பிறை, இத்தகைய போக்குகள் மனந்தளர்ச்சிக்கு வித்திடாமல், நம்பிக்கையுடன் கூடிய பணிக்கான அர்ப்பணத்தை புதுப்பிப்பதற்கு காரணமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குடும்பங்கள், கலாச்சாரங்கள் போன்றவைகளில் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார் அவர்.
விசுவாசத்தால் ஊட்டம்பெறும் கலாச்சாரத்தினால் மனித குலத்திற்கு உண்மையான சேவையாற்ற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி, தேவஅழைத்தல்களை ஊக்குவிப்பதிலும் புதிய நற்செய்தி அறிவிப்பை எடுத்துச் செல்வதிலும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. திருத்தந்தை : கிறிஸ்தவம் இவ்வுலகின் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டதல்ல
பிப்.16,2012. இக்காலத்திய உணர்வுகளிலும் சமுதாயத்தின் பொதுவான கருத்துக்களிலும் தங்களை முடக்கிவிடாமல் தங்களது வாழ்க்கையில் இறைவனின் விருப்பத்தை நேர்மையாகத் தேர்ந்து தெளிந்து வாழுமாறு உரோம் குருத்துவ மாணவர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“நம்பிக்கையின் அன்னைமரி” விழாவை முன்னிட்டு, அவ்வன்னைக்கு அர்ப்பணிக்கப்ப்டடுள்ள உரோம் குருத்துவக் கல்லூரிக்கு இப்புதன் மாலை சென்று, குருத்துவ மாணவர்களுடன் lectio divina என்ற இறைவார்த்தை விளக்கம் மற்றும் திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
“சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு” (உரோ.12:1) என்று புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் திருச்சொற்களை மையமாக வைத்து இம்மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
புனித பவுலின் இவ்வார்த்தைகள், எல்லாக் காலத்திலும் வாழ்கின்ற உரோமையர்களிடம் பேசுவதாக இருக்கின்றன என்ற திருத்தந்தை, இன்று திருஅவை பற்றி, இத்திருஅவை எப்படி இருக்கின்றது என்பது பற்றி இப்போது சிந்திப்போம் என்றும் கூறினார்.
புனித பவுலின் இவ்வார்த்தைகள், அறநெறி வாழ்வுக்கான வெறும் அழைப்பாக இல்லாமல், அவ்வாழ்வுக்கான நல்அறிவுரையாகவும் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
பணம் மற்றும் ஊடகத்தின் வல்லமை பயனுள்ளவை, ஆனால் அவை எளிதில் மனிதனுக்கு எதிரானவையாக மாறக்கூடும், பணஉலகம், மனிதன்மீது அதிகாரம் செலுத்தக் கூடும் என்று எச்சரித்த திருத்தந்தை, இவ்வுலகின் போக்கின்படிச் செல்லாமல் இருக்கக் கேட்டுக் கொண்டார்.
நம்மை இறைவன் உண்மையிலேயே புதிய மனிதர்களாக்குவதற்கு நாம் அவரை நம் வாழ்வில் அனுமதிப்பதற்கு நம்பிக்கையின் அன்னைமரி நமக்கு உதவுவாராக என்றும் கூறி இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
நம்பிக்கையின் அன்னைமரி விழாவன்று உரோம் குருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பாலைப் பின்பற்றி, திருத்தந்தை 16ம் பெனடிக்டும் அவ்விழா நாளில் அங்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
3. அருள்பணியாளர்கள் வறியோர் சார்பாகத் தங்கள் விருப்பத் தேர்வுகளை எடுக்க வேண்டும் - கர்தினால் கிரேசியஸ்
பிப்.16,2012. இருவேறுபட்ட இந்தியாக்கள் உள்ளன, அவைகளுக்கு இடையே உறவு பாலத்தை உருவாக்குவது அருள்பணியாளர்களின் கடமை என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இச்செவ்வாய் முதல் வியாழன் வரை மும்பையில் நடைபெற்ற CDPI என்று அழைக்கப்படும் மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவையின் பத்தாவது ஆண்டு கூட்டத்தில் திருப்பலியாற்றிய மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், வறியோர் சார்பாகத் தங்கள் விருப்பத் தேர்வுகளை எடுப்பதற்கு அருள்பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்தியா அடைந்துள்ள பல முன்னேற்றங்கள் பெரும்பாலும் செல்வந்தரையே செழிக்கச் செய்துள்ளது என்றும், ஏழைகளோ அடிப்படைத் தேவைகளுக்கும் போராட வேண்டியுள்ளதென்றும் கர்தினால் கிரேசியஸ் தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.
"இந்தியச் சூழலுக்கு ஏற்ப புதிய நற்செய்திப் பணியின் பொருளும், செயல்பாடும்" என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இந்த மூன்று நாள் ஆண்டுகூட்டத்தில் கலந்து கொண்ட அருள்பணியாளர்கள், இக்கூட்டத்தில் இருந்து செல்லும்போது, புதிய எண்ணங்களுடனும், புதிய அர்ப்பனத்துடனும் செல்ல வேண்டும் என்று கர்தினால் வேண்டுகோள் விடுத்தார்.
திருஅவையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் பொது நிலையினரை பிரச்சனைகளாகப் பார்க்காமல், வாய்ப்புக்களாகக் கருதி, அவர்களுடன் இணைந்து இறையரசை கட்டியெழுப்ப வேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அருள்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
4. அருள்பணியாளர்களின் சேவையை உலக சக்திகள் கட்டுப்படுத்த முடியாது - கத்தோலிக்கத் தலைவர் ஜான் தயாள்
பிப்.16,2012. தான் கத்தோலிக்கத் திருஅவைக்குத் திரும்பி வருவதற்கு, நல்ல மனமும், பணிவும் கொண்ட புனிதமான அருள்பணியாளர்களே காரணமாக இருந்தனர் என்று இந்திய கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கூறினார்.
கடந்த மூன்று நாட்களாக மும்பையில் நடைபெற்ற மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவையின் ஆண்டுக் கூட்டத்தில் அருள்பணியாளர்களுக்கு உரை வழங்கிய அனுபவம் மிக்கச் செய்தியாளரும், அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலருமான ஜான் தயாள் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையில் காணப்படும் அருள்பணியாளர்கள் என்ற அமைப்பு, கடவுளுக்கும், மனிதர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி புரிவதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனித்துவம் மிக்கதொரு அமைப்பு என்று கத்தோலிக்கத் தலைவர் ஜான் தயாள் கூறினார்.
அருள்பணியாளர்கள் தாங்களாகவே முன்வந்து இந்தப் பணியை மேற்கொள்வதால், அவர்களது தனிப்பட்டச் சேவையை உலக சக்திகள் கட்டுப்படுத்த முடியாது என்று ஜான் தயாள் எடுத்துரைத்தார்.
இந்தியத் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும், பங்குத் தளமும் புதிய நற்செய்திப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர் ஜான் தயாள் கேட்டுக் கொண்டார்.
5. ஜப்பானில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் ஆண்டு நினைவாக ஆயர்களின் கூட்டுத் திருப்பலி
பிப்.16,2012. கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களின் ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் வகையில் இப்புதனன்று டோக்கியோவின் Sekiguchi பேராலயத்தில் ஆயர்களின் கூட்டுத் திருப்பலி ஒன்று நடைபெற்றது.
ஜப்பான் தலத் திருஅவையில் தற்போது பணியாற்றிவரும் 17 ஆயர்களும் இணைந்து ஆற்றிய இத்திருப்பலியில், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியிருந்த செய்தியை ஜப்பான் திருப்பீடத் தூதர் பேராயர் ஜோசப் சென்னோத் வாசித்தார்.
ஜப்பானில் இப்பேரழிவுகள் நடைபெற்றது மார்ச் 11ம் தேதியே என்றாலும், ஜப்பான் ஆயர் பேரவை இத்திங்கள் முதல் வெள்ளி வரை மேற்கொண்டுள்ள ஆண்டுக் கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இத்திருப்பலியில் பல்வேறு நாடுகளின் தூதர்களும் அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டனர். திருப்பலிக்கு முன்னர், இப்பேரழிவுகளுக்குப் பின்னர் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பல்வேறு பணிகளை விளக்கும் டிஜிட்டல் புகைப்படங்கள் திரையில் காட்டப்பட்டன.
6. எகிப்தில் தீக்கிரையான கிறிஸ்தவ ஆலயமும் கிறிஸ்தவர்களின் வீடுகளும்
பிப்.16,2012. எகிப்தில் Sharqia மாநிலத்தில் ஞாயிறு முதல் உருவாகியிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மோதல்களால் இத்திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும், பல கிறிஸ்தவர்களின் வீடுகளும் தீக்கிரையாயின.
Salafi என்று அழைக்கப்படும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் Meet Bashar என்ற கிராமத்தில் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில், புனித மரியா மற்றும் புனித ஆப்ராம் என்ற ஆலயமும், பல கிறிஸ்தவ வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் அடைந்த ஒருவரது மகள் Rania Khalil என்ற இளம்பெண் ஞாயிறு முதல் காணவில்லை என்பதால், அவரது மதமாற்றத்தைத் தடுக்க கிறிஸ்தவர்கள் அவரை கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்ற தவறான வதந்தியால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே மோதல்கள் உருவாகி வன்முறையாக வெடித்தன.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களிடையே மேற்கொள்ளப்பட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இப்புதன் முதல் அப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
7. பாகிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் சேர விழையும் கிறிஸ்தவ மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்
பிப்.16,2012. பாகிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் சேர விழையும் கிறிஸ்தவ மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு கூறியுள்ளது.
உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வுகளுக்குச் செல்லும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு குரான் பற்றிய தகவல்கள் தெரியாததால், அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்றனர் என்றும், உயர்கல்வி படிப்பதற்கு குரான் பற்றிய அறிவு தேவை என்று வற்புறுத்துவது நீதியல்ல என்றும் இப்பணிக் குழு லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
Aroon Arif என்ற கிறிஸ்தவ மாணவர் மருத்துவப் படிப்பிற்கென எழுதிய நுழைவுத் தேர்வில் அதிக அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தார் எனினும், மற்ற இஸ்லாமிய மாணவர்கள் குரான் நூலைப் பற்றிய பகுதியில் கூடுதலாக 20 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதால் கிறிஸ்தவ மாணவருக்கு படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.
ஒரு குழந்தையை மத நம்பிக்கையில் வளர்ப்பது ஒவ்வொரு குடும்பத்தையும், மத நிறுவனங்களையும் சார்ந்த கடமை என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் மத அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவது சரியல்ல என்றும் லாகூர் கிறிஸ்தவ சபையின் ஆயர் Alexander John Malik, கூறினார்.
அரசின் கல்வித் துறையில் மத அடிப்படையில் பாகுபாடுகள் நீக்கப்பட்டு, மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதி மற்றும் அமைதிக் குழு தன் வழக்கைப் பதிவு செய்துள்ளது.
8. மேகாலயாப் பகுதி மக்களின் 'அன்னைத் தெரேசா'வாக விளங்கிய அருள் சகோதரி Amalia இறையடிச் சேர்ந்தார்
பிப்.16,2012. இந்தியாவில் மேகாலயாப் பகுதி மக்களின் 'அன்னைத் தெரேசா' என்று அழைக்கப்பட்ட அருள் சகோதரி Amalia Pereda Ortiz de Zarate இத்திங்களன்று தனது 84வது வயதில் இறையடிச் சேர்ந்தார். இச்செவ்வாயன்று அவர் Shillongல் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
Shillongல் தலை சிறந்த மருத்துவப் பணிகள் ஆற்றிவரும் நாசரேத் மருத்துவமனையை நிறுவி 25 ஆண்டுகளாகப் பணி புரிந்துவந்த அருள்சகோதரி Amalia, இஸ்பானிய நாட்டை சார்ந்தவர். கிறிஸ்து இயேசு மறைபரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி, 1946ம் ஆண்டு துறவு வாழ்வை மேற்கொண்டு, 15 ஆண்டுகள் பயிற்சிகளுக்குப் பின் இந்தியா வந்தடைந்தார்.
1965ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாய் இவர் இந்தியா வந்தடையும் பங்களாதேஷ் அகதிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
வறியோருக்கு மருந்துகள் கொடுப்பது மட்டுமல்லாது, அவர்கள் நலமாக, சுத்தமாக வாழும் வழிகளையும் அருள்சகோதரி சொல்லித் தந்தார் என்று அவரது துறவுச் சபையைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment