Thursday, 9 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 08 பெப்ரவரி 2012

1. ரியோ டி ஜெனீரோ பேராயருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி

2. ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருக்க திருஅவை முயலும் - இந்திய கத்தோலிக்க ஆயர்கள் உறுதிமொழி

3. இந்தியத் திருஅவை வன்முறைகளைச் சந்தித்தாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து பின் வாங்காது - கர்தினால் கிரேசியஸ்

4. கொலம்பியாவின் FARC வன்முறையான தீவிரவாதக் குழு - கொலம்பிய ஆயர் பேரவை கண்டனம்

5. பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களுக்குச் செவிமடுப்பதற்கு திருத்தந்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

6. கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளால் ஈர்க்கப்பட்டு திருமறையைத் தழுவிய இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி

7. கிழக்கு Timorஐச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்

8. புகழ்பெற்ற எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவர்களின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம்


------------------------------------------------------------------------------------------------------

1. ரியோ டி ஜெனீரோ பேராயருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபச் செய்தி

பிப்.08,2012. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அண்மையில் இடிந்து விழுந்த மூன்று கட்டிடங்களில் சிக்குண்டு இறந்தவர்களுக்காகவும், இறந்தோரின் குடும்பங்களுக்காகவும் தான் செபிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிர் இழந்தோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் மனதில் வைத்து, ரியோ டி ஜெனீரோவின் பேராயர் Orani João (John) Tempestaவுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய தந்தியை திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.


2. ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருக்க திருஅவை முயலும் - இந்திய கத்தோலிக்க ஆயர்கள் உறுதிமொழி

பிப்.08,2012. குரல் எழுப்ப முடியாமல் ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருக்க திருஅவை முயலும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து பெங்களூருவில் கூடியிருந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்கூட்டம் இப்புதனன்று நிறைவுற்றபோது, அங்கு கூடியிருந்த ஆயர்கள் விடுத்த இறுதி அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகமயாக்கல் வழியாக இந்தியா பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் வெகுவாக முன்னேறியிருப்பதாகத் தோன்றினாலும்வளமான எதிர்காலம் என்பது, பெரும்பாலான மக்களின் ஏக்கமாகவே இன்னும் விளங்குகிறது என்று ஆயர்களின் இறுதி அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வாழும் வறியோரின் அவல நிலைக்கு திருஅவை தகுந்த அளவில் கவனம் செலுத்தும் என்றும், அளவுக்கு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனித வாழ்வு சீர்குலைவதைத் தடுக்க எளிமையான வாழ்வை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியத் திரு அவையில் காணப்படும் பாகுபாடுகளையும் ஊழல் முறைகளையும் முற்றிலும் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆயர்களின் உறுதிமொழி எடுத்துரைக்கிறது.
கத்தோலிக்கர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது மட்டும் குரல் எழுப்பாது, எங்கெங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் திருஅவை ஈடுபட்டு அவ்வுரிமைகளுக்காகப் போராடும் என்றும் ஆயர்களின் இவ்விறுதி அறிக்கை கூறுகிறது.
இந்தியத் திருஅவையின் பணியாளர்களும், நிறுவனங்களும் வன்முறைகளுக்கு உள்ளானபோதிலும், ஏழைகள் மத்தியில் தொடர்ந்து உழைப்பதில் திருஅவை உறுதியாக இருக்கும் என்று பெங்களூருவில் கூடியிருந்த 161 ஆயர்களும், 20 ஆயர் பேரவை அதிகாரிகளும் இணைந்து விடுத்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


3. இந்தியத் திருஅவை வன்முறைகளைச் சந்தித்தாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து பின் வாங்காது - கர்தினால் கிரேசியஸ்

பிப்.08,2012. இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சமுதாய அநீதிகளைக் களையும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியத் திருஅவையின் மீது, அடிப்படைவாதக் குழுக்கள் வன்முறைகளை மேற்கொண்டாலும், வறியோரின் துயர் துடைக்கும் பணியில் இருந்து திருஅவை பின் வாங்காது என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ், ‘சிறந்ததொரு இந்தியாவை உருவாக்குவதில் திருஅவையின் பங்குஎன்ற தலைப்பில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ள பொதுக் கூட்டத்தைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
சமுதாய அநீதிகளைக் களைய திருஅவை மேற்கொள்ளும் பல்வேறு பணிகள் பல சுயநல அமைப்புக்களைப் பாதிப்பதால், அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மதமாற்றம் என்ற வீண் பழியைத் திருஅவையின் மீது சுமத்தி, வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இந்திய மக்கள் தொகையில் 3 விழுக்காடு அளவே எண்ணிக்கை கொண்ட திருஅவை உறுப்பினர்கள், இந்திய சமுதாயத்தைச் சிறந்ததொரு எதிர்காலம் நோக்கி வழி நடத்துவதில் தொடர்ந்து சளைக்காமல் உழைப்பார்கள் என்று கர்தினால் கிரேசியஸ் வலியுறுத்திக் கூறினார்.


4. கொலம்பியாவின் FARC வன்முறையான தீவிரவாதக் குழு - கொலம்பிய ஆயர் பேரவை கண்டனம்

பிப்.08,2012. கொலம்பியா நாட்டில் FARC என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய புரட்சிப் படைகள் என்ற குழு அரசியல் குழு அல்ல, மாறாக அது வன்முறையான தீவிரவாதக் குழு என்று கொலம்பியா ஆயர் பேரவை கூறியுள்ளது.
கொலம்பியாவில் இத்திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற்று வரும் கொலம்பிய ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயர்கள், FARC என்ற குழுவினர் அந்நாட்டில் விளைவித்து வரும் வன்முறைகளைக் கண்டித்து, தங்கள் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
பல்வேறு வகைகளிலும் பாகுபாடுகள் மலிந்துள்ள கொலம்பிய நாட்டின் சமுதாயத்தில் மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் FARC போன்ற அமைப்புக்கள் கண்டனத்திற்குரியது என்று ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Ruben Salazar Gomez கூறினார்.
சமுதாயத்தில் உள்ள அநீதிகளைக் களைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், கண்மூடித்தனமான வன்முறைகளில் ஈடுபடும் FARC போன்ற அமைப்புக்கள் சமுதாய அநீதிகளுக்குத் தகுந்த தீர்வு அல்லவென்றும் ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.


5. பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களுக்குச் செவிமடுப்பதற்கு திருத்தந்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

பிப்.08,2012. திருஅவைப் பணியாளர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களுக்கு தகுந்த முறையில் செவிமடுப்பதற்கு திருத்தந்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று Marie Collins என்ற பெண்மணி கூறினார்.
'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற மையக்கருத்துடன் கடந்த திங்கள் முதல் இவ்வியாழன் வரை உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இக்கருத்தரங்கில் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் சார்பில் உரையாற்றிய Marie Collins, திருப்பணியாளர் ஒருவரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்.
இவர் இக்கருத்தரங்கின் அமர்வில் உரையாற்றிய பின், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
2005ம் ஆண்டு திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மால்டா என்று பல்வேறு நாடுகளுக்குத் திருப்பயணங்கள் மேற்கொண்ட பொது, அந்தந்த நாட்டில் இவ்வன்முறைகளுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து அக்கறையுடன் அவர்களுடன் உரையாடியது தனக்குப் பெரிதும் ஆறுதலைத் தந்தது என்று Marie Collins கூறினார்.
திருஅவையின் அனைத்து ஆயர்களும் திருத்தந்தையின் இந்த வழியைப் பின்பற்றினால் வன்முறைகளுக்கு ஆளானவர்கள் திருஅவையில் தொடர்ந்து வாழும் சக்தி பெறுவார்கள் என்று Marie Collins வலியுறுத்திக் கூறினார்.
உலகின் 110 ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள்  மற்றும் 30 துறவு சபைகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கருத்தரங்கு இவ்வியாழனன்று நிறை பெறுகிறது.


6. கத்தோலிக்கத் திருஅவையின் பணிகளால் ஈர்க்கப்பட்டு திருமறையைத் தழுவிய இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி

பிப்.08,2012. கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் உயர்ந்த பணிகளால் ஈர்க்கப்பட்டதால்தான் கத்தோலிக்கத் திருமறையைத் தான் தழுவியதாக இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கத்தோலிக்க அருள் பணியாளர்களும், அருள் சகோதரிகளும் செய்து வரும் பல்வேறு பணிகள், முக்கியமாக HIV நோயால் பாதிக்கப்பட்டோர் நடுவில் அவர்கள் செய்து வரும் பணிகள், யாரும் செல்ல முடியாத கிராமங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆற்றும் கல்விப் பணிகள் ஆகியவைத் தன்னைப் பெரிதும் ஈர்த்ததேன்று ஆந்திர மாநில சிறப்புக் காவல்துறையின் இணை இயக்குனர் Aruna Bahaguna கூறினார்.
தான் ஒரு கத்தோலிக்கராக மாறியபின், உலகைக் நோக்குவதிலும், தனது பணிகளைச் செய்வதிலும் புதிய கண்ணோட்டம் தனக்கு உருவாகியிருப்பதாக Bahaguna தெரிவித்தார்.
குற்றவாளிகளை இரக்கக் கண்ணோட்டத்துடன் தன்னால் பார்க்க முடிவதாகவும், அவர்களது நிலையில் தன்னை இருத்திப் பார்ப்பதால், அவர்கள் திருந்தி வாழும் வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்த முடிகிறது என்றும் காவல்துறை உயர் அதிகாரி Aruna Bahaguna மேலும் கூறினார்.


7. கிழக்கு Timorஐச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்

பிப்.08,2012. கிழக்கு Timor நாட்டைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, இந்தோனேசியாவில் இஸ்லாமிய வழியில் கல்வி பயில்வதற்கு நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்று இந்தோனேசியாவில் இருந்து வெளியான திருஅவை செய்திகள் கூறுகின்றன.
1999ம் ஆண்டு கிழக்கு Timor தனது சுதந்திரத்திற்காக போராடியபோது, அந்த வன்முறைகளில் இருந்து தப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரம் மக்களில் 4000 குழந்தைகளும் அடங்குவர். இக்குழந்தைகளில் 1000க்கும் அதிகமானோர் தற்போது மேற்கு ஜாவாவில் இஸ்லாமிய கல்விக் கூடங்களில் உள்ளனர் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தற்போது இளம் பருவத்தை அடைந்துள்ள இவர்களை மீண்டும் அவரவர் குடும்பங்களுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளும் இஸ்லாமிய அமைப்புக்களால் தடுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை Benny Susetyo, Fides நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இவ்விளையோரை விடுவிக்க அரசுசாரா அமைப்புக்களும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவும் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் தரவில்லை என்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


8. புகழ்பெற்ற எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவர்களின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பிப்.08,2012. 1812ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவர்களின் 200வது பிறந்தநாள் இச்செவ்வாயன்று இங்கிலாந்தின் Westminster Abbey கோவிலில் கொண்டாடப்பட்டது.
Walesன் இளவரசர் சார்ல்ஸ், மற்றும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிதிகள், சார்ல்ஸ் டிக்கன்ஸ் குடும்பத்தைச் சார்ந்த 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் Canterbury பேராயர் Rowan Williams தலைமை உரையாற்றினார்.
தனது எழுத்துக்களால் உலகில் பல ஆயிரம் மனங்களை இன்றும் கவர்ந்து வரும் சார்ல்ஸ் டிக்கன்ஸ், இங்கிலாந்தில் பிறந்தது இந்நாட்டினருக்குப் பெருமை தரும் ஓர் அம்சம் என்று Westminster கோவிலின் நிர்வாகி உயர்திரு John Hall கூறினார்.
1870ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மறைந்த சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஜூன் மாதம் 14ம் தேதி Westminster Abbey கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.
 

No comments:

Post a Comment