Friday, 24 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 22 பெப்ரவரி 2012

 
1. திருத்தந்தை: உடல்நலம், மீட்பு என்ற இரு எண்ணங்களுக்கும் இலத்தீன் மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது

2. இந்தியர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் நீதியும் உண்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் - கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி

3. இந்தியர்கள் இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையில் அமைதியைக் கொணர திருஅவை முயற்சிக்க வேண்டும்

4. பாகிஸ்தான் அமைச்சர் கொலை வழக்கில் தொடர்புள்ள இளைஞர் குற்றவாளி என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை - காவல் துறை

5. "மக்கள் சக்தி" என்றழைக்கப்படும் புரட்சி நாளை அரசியல் விவகாரமாக மாற்ற வேண்டாம் - பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்

6. தென்கொரியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் மேற்கொள்ளவிருக்கும் இராணுவப் பயிற்சிகளைக் கைவிட வேண்டும் - கொரியத் திருச்சபைகளின் தேசிய அவை

7. மெக்சிகோவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது

8. இந்தியா : இரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: உடல்நலம், மீட்பு என்ற இரு எண்ணங்களுக்கும் இலத்தீன் மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது

பிப்.22,2012. கிறிஸ்தவர்களாகிய நமக்கு, நலவாழ்வு என்பது, வெறும் உடல் நலத்தை மட்டும் குறிப்பிடாமல், அதையும் கடந்து, முழு மனித மீட்பையும் உள்ளடக்கியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின் துவக்கமான இத்திருநீற்றுப் புதனன்று பிரேசில் ஆயர் பேரவை, சகோதர நேயமும், பொதுநலனும் என்ற மையக்கருத்தில் துவக்கியுள்ள ஒரு முயற்சியைப் பாராட்டி, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Raymundo Damasceno Assisக்கு அனுப்பிய ஒரு செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
உடல்நலம், மீட்பு என்ற இரு எண்ணங்களையும் குறிப்பதற்கு இலத்தீன் மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுவதைத் தன் செய்தியில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கியபோது, அவரது பாவங்களை மன்னிப்பதாகக் கூறியதை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
தவக்காலத்தின் ஓர் அங்கமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பிறரன்பு முயற்சிகளில் உடல் நலம் குன்றியோரையும், தனிமை, சமுதாயப் பிரிவுகள் போன்ற பிரச்சனைகளால் உள்ள நலம் குன்றியோரையும் பிரேசில் மக்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
"ஆண்டவரிடமிருந்தே உடல்நலம் உலகெல்லாம் நிலவுகிறது" என்று சீராக் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை மையமாகக் கொண்டு துவக்கப்பட்டுள்ள பிரேசில் ஆயர்களின் இந்த முயற்சிக்கு தன் முழுமையான ஆசீர் உண்டு என்றும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.


2. இந்தியர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் நீதியும் உண்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் - கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி

பிப்.22,2012. இந்தியக் கடல் பகுதியில் இந்தியர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்ட வழக்கு தீர விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறினார்.
பிப்ரவரி 15ம் தேதி, கடந்த புதனன்று கேரளக் கடல் பகுதியில் மீன்பிடிப் படகில் இருந்த இரு இந்தியர்கள் மீது, அப்பகுதியில் பயணம் செய்த இத்தாலியக் கப்பல் ஒன்றில் காவல் பணியில் இருந்தவர்கள் சுட்டதால், அவர்கள் இருவரும் மரணமடைந்தனர்.
இவ்விருவரின் மரணத்தை அடுத்து, அவர்கள் மீது சுட்ட இரு இத்தாலியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கர்தினாலாக பொறுப்பேற்ற சீரோ மலபார் திருஅவைத் தலைவர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, இப்பிரச்சனையில் ஈடுபட்டு, சமரசம் செய்துவைக்க தயாராக இருப்பதாக இச்செவ்வாயன்று Fides நிறுவனத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
இச்செய்தியை மறுத்து, இப்புதனன்று தன் கருத்தை வெளியிட்ட கர்தினால் ஆலஞ்சேரி, நீதியும் உண்மையும் நிலைநாட்டப்படுவதையே தான் விரும்புவதாகவும், சமரசம் செய்வது தன் எண்ணம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.


3. இந்தியர்கள் இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையில் அமைதியைக் கொணர திருஅவை முயற்சிக்க வேண்டும்

பிப்.22,2012. இதற்கிடையே, இரு இந்தியர்கள் இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனை இந்தியாவைப் பெருமளவில் பாதித்துள்ள ஒரு நிகழ்வு என்றாலும், இப்பிரச்சனையை நீதியோடும் உண்மையோடும் அணுகுவதே முக்கியமான செயல் என்று கேரளாவில் உள்ள ஒரு துறவுச் சபைத் தலைவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 15ம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த இருவரும் கத்தோலிக்கர்கள் என்பதால், இந்த நிகழ்வை மத அடிப்படையிலோ, நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள பிரச்சனையாகவோ காண்பதைத் தவிர்த்து, உண்மையைக் கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று, கப்பூச்சின் சபையின் மாநிலத் தலைவர் அருள் சகோதரர் Raphael Paliakkara, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நாட்டுப் பிரச்சனையாக, மற்றும் மதப் பிரச்சனையாக ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்திவரும் வேளையில், அமைதியைக் கொணரும் முயற்சியில் திருஅவை முழுமூச்சுடன் ஈடுபடவேண்டும் என்று அருள்சகோதரர் Paliakkara எடுத்துரைத்தார்.


4. பாகிஸ்தான் அமைச்சர் கொலை வழக்கில் தொடர்புள்ள இளைஞர் குற்றவாளி என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை - காவல் துறை

பிப்.22,2012. பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் கொலையைக் குறித்து அரசு எடுத்து வரும் தாமதமான செயல்பாடுகள், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க வைக்கின்றன என்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி பாகிஸ்தான் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் Bhatti 30 முறை சுடப்பட்டு இறந்தார்.
இராவல்பிண்டி நீதி மன்றத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதுஇக்கொலையுடன் தொடர்புள்ளதாகக் கருதப்பட்ட அபித் மாலிக் என்ற இளைஞர் கொலை செய்தார் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று காவல் துறை கூறியது.
இவ்வழக்கு விசாரணையைக் குறித்து தன் கருத்தை ஆசிய செய்தி நிறுவனத்திற்கு வெளியிட்ட ஆயர் Anthony, காவல்துறையின் இந்த வாக்கு  மூலம் இத்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைக்கும்படி அமைந்துள்ளது என்று கூறினார்.
தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி, தொடர்பற்ற நபர்களை கைது செய்து வரும் காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்றும், அபித் மாலிக்கை இக்குற்றத்திலிருந்து எளிதாக விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நீதிக்குப் புறம்பானது என்றும் ஆயர் Anthony எடுத்துரைத்தார்.


5. "மக்கள் சக்தி" என்றழைக்கப்படும் புரட்சி நாளை அரசியல் விவகாரமாக மாற்ற வேண்டாம் - பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர்

பிப்.22,2012. பிலிப்பின்ஸ் நாட்டில், "மக்கள் சக்தி" என்றழைக்கப்படும் புரட்சி நாளை அரசியல் விவகாரமாக மாற்றாமல், பொதுநலனை வளர்க்கும் நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கும் ஒரு நாளாக மக்கள் கொண்டாட வேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1986ம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் 25 வரை பிலிப்பின்ஸ் நாட்டில் Ferdinand Marcosன் சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராக எழுந்த 'மக்கள் சக்தி' என்ற புரட்சியின் ஆண்டு நிறைவு ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிலிப்பின்ஸ் நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக எழுந்த குற்றச் சாட்டுகளின் பேரில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவி நீக்கம் அரசியல் ஆதாயங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கத்தோலிக்கத் திருஅவையும், பிற மத குழக்களும் கூறி வருகின்றன.
இச்சூழலில், 'மக்கள் சக்தி' என்ற இந்தப் புரட்சியின் 26ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அரசு விடுத்துள்ள அழைப்பும், ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Palma விடுத்துள்ள வேண்டுகோளும் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. தென்கொரியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் மேற்கொள்ளவிருக்கும் இராணுவப் பயிற்சிகளைக் கைவிட வேண்டும் - கொரியத் திருச்சபைகளின் தேசிய அவை

பிப்.22,2012. தங்களிடம் உள்ள இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் தென் கொரிய அரசும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும் வெகு விரைவில் மேற்கொள்ளவிருக்கும் இராணுவப் பயிற்சிகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என்று கொரியத் திருச்சபைகளின் தேசிய அவை தென் கொரிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
இம்மாதம் 27 முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரையிலும், பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்படவிருக்கும் இராணுவப் பயிற்சிகள் வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே உருவாகியுள்ள பதட்ட நிலையை மேலும் மோசமாக்கும் என்று இந்தத் தேசிய அவை வலியுறுத்தியுள்ளது.
வட கொரியத் தலைவர் Kim Jong-il மரணத்தை அடுத்து, அந்நாட்டில் மார்ச் மாதம் இறுதி வரை நாடு தழுவிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் தவறானது என்று இந்த அவையின் உறுப்பினரான Kim Chang-hyun கூறினார்.
நடைபெறவிருக்கும் இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையில் போரை உருவாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது என்று கொரியத் திருச்சபைகளின் தேசிய அவையின் பொதுச் செயலர் Kim Young-ju கூறினார்.


7. மெக்சிகோவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது

பிப்.22,2012. மெக்சிகோ நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.
சமுதாய முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் CEIDAS என்ற நிறுவனம் 2001 முதல் 2010 ஆண்டு வரையிலான ஆய்வை மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தப் பத்து ஆண்டுகளில் மெக்சிகோவில் உணவு பற்றாக்குறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85,343 என்றும், இதே கால அளவில் போதைப் பொருள் வன்முறைகளால் இறந்தோரின் எண்ணிக்கை 49,804 என்றும் கூறப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வாழும் மக்களில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் அடிப்படை உணவுப் பொருட்களை வாங்கும் வசதியில்லாமல் உள்ளனர் என்று CEIDAS நிறுவனத்தின் இயக்குனர் Mario Luis Fuentes, இவ்வறிக்கையை வெளியிட்டபோது கூறினார்.
சமுதாய முன்னேற்றம் என்பது சமத்துவத்தை நிலை நாட்டும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று Fuentes வலியுறுத்திக் கூறினார்.


8. இந்தியா : இரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசம்

பிப்.22,2012. இந்தியாவில் இரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மோசமாக இருப்பதாலேயே ஆண்டொன்றுக்கு ஆயிரக்கானவர்கள் இரயில் விபத்துகளில் பலியாக நேருகிறது என்றும், இந்த விபத்துகளை தடுக்க இரயில்வே நிர்வாகம் தவறிவிட்டது என்றும், இந்திய அரசின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இருப்புப் பாதைகளைச் சுற்றி சரியான வேலிகள் போடப்படாததால், ஒவ்வோர் ஆண்டும், 15,000 பேர் இரயில்களில் அடிப்பட்டு இறந்து போக நேரிடுகிறது என்று இரயில்வே பாதுகாப்பு குறித்த அந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இத்தகைய இறப்புக்களில் பாதி மும்பையில் ஏற்படுகின்றன என்றும், அங்கு பொதுமக்கள் இரயில் பாதைகளைக் கடந்து செல்ல போதிய வழிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்திய இரயில்வேத்துறைக்கு முன்னர் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இவ்வறிக்கை விமர்சித்துள்ளது.
பெருமளவிலான மக்களின் உயிர்களைப் பாதுகாக்க, கூடுதலான முதலீடுகள் தேவை எனவும் அது தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment