Thursday, 2 June 2011

Catholic News - hottest and latest - 30 May 2011


1.     இறை வார்த்தையை எடுத்துரைப்பது ஆயருக்குரிய தலையாயக் கடமை - இந்திய ஆயர்களுக்குத் திருத்தந்தையின் உரை

2.     புதிய நற்செய்தி அறிவித்தலின் தேவையை வலியுறுத்தினார் திருத்தந்தை

3.      திருத்தந்தையின் மூவேளைச் செப உரை

4.   ஒற்றுமைக்கானப் புதிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர்

5.   மத்தியப் பிரதேசக் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு எதிராக‌ நீதி மன்றத்தை அணுக உள்ளன

6.   தபால் தலைகள் மூலம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலைக் கௌரவித்துள்ளது பிலிப்பீன்ஸ் அரசு

7.   அகதிகள் குறித்த ஆஸ்திரேலியக் கொள்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் கண்டனம்

----------------------------------------------------------------------------------------------------------------

1.  இறை வார்த்தையை எடுத்துரைப்பது ஆயருக்குரிய தலையாயக் கடமை - இந்திய ஆயர்களுக்குத் திருத்தந்தையின் உரை

மே 30,2011. இரண்டாம் வத்திக்கான் பொது அவை கூறியுள்ளதுபோல், ஆயருக்குரிய பல்வேறு கடமைகளில், இறை வார்த்தையை எடுத்துரைப்பதே அவரது தலையாயக் கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி தற்போது ஆந்திராவிலிருந்தும், கேரளாவிலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள 22 ஆயர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு உரையாற்றுகையில், ஆயர்களின் கடமைகளை இவ்விதம் எடுத்துரைத்தார்.
தங்களிடம் பணியாற்றும் குருக்கள் மற்றும் தகுதியுள்ள பொதுநிலையினர் ஆகியோரின் உதவியுடன், விவிலியம் மற்றும் திருச்சபையின் பாரம்பரியத்தில் வெளியாகியுள்ள இறை வார்த்தையை மக்களுக்குப் பறைசாற்றும் பணியில் ஆயர்கள் ஈடுபட வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் குருக்களும் துறவியரும் ஆர்வமாய் ஈடுபட்டிருக்கும் சமுதாயப் பணிகள் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டத் திருத்தந்தை, கடவுள் உலகிற்கு அளித்திருக்கும் மிகப்பெரும் கொடையான அவரது அன்பை இப்பணிகளின் மூலம் திருச்சபை தொடர்ந்து ஆற்றி வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோருக்கான இல்லங்கள் வழியே திருச்சபை ஆற்றி வரும் பல்வேறு சேவைகளையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, சிறு சேமிப்புத் திட்டங்கள் (Microcredit) மூலம் ஏழைகள் தங்களுக்கே உதவிகள் செய்து கொள்ளும் வழிகளைத் திருச்சபை வறியவர்களுக்குச் சொல்லித் தருவதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் உள்ள குடும்பங்கள் 'குட்டித் திருச்சபைகள்' (Domestic Churches) என்று கூறியத் திருத்தந்தை, மறைகல்வி, செபங்கள் வழியே இறையன்பைப் பறைசாற்றும் சாட்சிகளாக கிறிஸ்தவ குடும்பங்கள் திகழ்வதற்கு ஆயர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிறப்பாகக் கேட்டுக் கொண்டார்.
இறையன்னை, புனித பேதுரு, பவுல் ஆகியோரின் பரிந்துரைகளின் வழியே ஆயர்கள் தங்கள் மந்தைகளைத் திறம்பட நடத்துவதற்கு, திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறினார்.

2.    புதிய நற்செய்தி அறிவித்தலின் தேவையை வலியுறுத்தினார் திருத்தந்தை

மே 30,2011. நவீன கால நெருக்கடிகள், மற்றும் வாழ்க்கையிலிருந்து இறைவனை ஒதுக்கி வைக்கும் நிலைகளை எதிர்நோக்கியிருக்கும் இன்றையச் சமுதாயத்தில் மறைபோதகத் துடிப்புக்கு மீண்டும் புத்துயிர் வழங்கவேண்டிய தேவை உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவிப்புக்கென கடந்த ஜூன் மாதம் துவக்கப்பட்ட புதியதொரு திருப்பீட அவையின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, தொன்மை கலாச்சாரங்களைக் கொண்டுள்ள பாரம்பரிய கிறிஸ்தவ நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள இவ்வவை தன்னை தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மக்களின் வாழ்விலிருந்து கடவுளை வெளியேற்ற முயல்தல், கிறிஸ்தவ விசுவாசம் குறித்த பாராமுகம், பொதுவாழ்வில் கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்தல் போன்ற இன்றையப் போக்குகள் குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது, நவீன போக்குகளுடன் சிரமமான ஓர் உறவைக்கொண்டிருக்கும் விசுவாசிகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மறைபோதக உணர்வுகளுக்குப் புத்துயிர் வழங்குதல், மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கைமுறை மற்றவர்களின் நம்பகத்தன்மைக்கு உதவுவதாய் இருத்தல் என்பவைகளை தன் உரையின்போது வலியுறுத்திக் கூறினார் பாப்பிறை.

3.    திருத்தந்தையின் மூவேளைச் செப உரை

மே 30,2011. உண்மையான மகிழ்வைக் கண்டு கொள்ள ஒவ்வொரு மனிதனாலும் இயலும் என்பதை மையக்கருத்தாகக் கொண்டு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பிலிப்புவின் வருகையையும் உயிர்த்த இயேசு குறித்த நற்செய்தி அறிவிப்பையும் பற்றி பேசும் திருத்தூதர் பணி நூலின் எட்டாம் அதிகாரம், 'அதனால் அந்நகரில் மகிழ்ச்சி உண்டாயிற்று' என்றுரைக்கும் இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி உரையாற்றிய பாப்பிறை, நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளாக இவை உள்ளன என்றார்.
மனிதனால் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ள முடியும், ஏனெனில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்வு மலர்கின்றது என்றார் திருத்தந்தை.
நற்செய்தியின் குணப்படுத்தும் சக்தியானது ஒரு பயனுள்ள ஆறு போல் கடந்த நூற்றாண்டுகளில் ஓடி மனித குலத்தை வளப்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நகர்களுக்கு அமைதியையும் நம்பிக்கையும் எடுத்துச் சென்றவர்கள் வரிசையில் மிலானின் புனிதர் சார்ல்ஸ் பொரோமேயோவையும் கல்கத்தாவின் அருளாளர் அன்னை தெரேசாவையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைத்தார்.
புதிய அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒரு மிகப்பெரும் மறைபோதகராக இருந்தார் என மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

4.  ஒற்றுமைக்கானப் புதிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர்

மே 30,2011. இந்தியாவின் மூன்று ரீதி கத்தோலிக்கர்களும் தங்களின் கடந்த கால முரண்பாடுகளை மறந்து, ஒற்றுமைக்கானப் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கடந்த காலங்களில் நம் கருத்து வேறுபாடுகளால் பல்வேறு முரண்பாடுகளைச் சந்தித்திருக்கலாம், ஆனால் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து வருங்காலத்தை  நோக்க வேண்டிய காலம் இது என்றார் பேராயர் ஆலஞ்சேரி.
சீரோ மலபார் ரீதியின் தலைவராக இஞ்ஞாயிறன்று கொச்சியின் புனித மேரி பசிலிக்காவில் பொறுப்பேற்ற வைபவத்தில் உரையாற்றிய பேராயர், வழிபாடு மற்றும் நிர்வாகம் தொடர்புடைய காரணங்களால் தங்களுக்குள்ளேயே பிரிந்திருக்கும் மலபார் ரீதி கத்தோலிக்கர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பை முன்வைப்பதாக தெரிவித்தார்.
'அன்பு மற்றும் உண்மையின் கலந்துரையாடல் வழி பணி' என்பதைத் தன் விருது வாக்காக எடுத்துள்ள பேராயர் ஆலஞ்சேரி, மக்கள் மற்றும் சமுதாய நலனுக்காக இணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சிரோ மலபார் ரீதியின் புதியத் தலைவராக பதவியேற்ற மற்றும் பேராயராக உயர்த்தப்பட்ட இந்த நிகழ்வில், இந்தியாவிற்கானத் திருப்பீடத்தூதர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ மற்றும் பல்வேறு கிறிஸ்தவச் சபைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

5.  மத்தியப் பிரதேசக் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு எதிராக‌ நீதி மன்றத்தை அணுக உள்ளன

மே 30,2011. மத்தியப் பிரதேச மாநில அரசின் தேவையற்ற தலையீட்டால் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதால், உயர் நீதி மன்றத்தை அணுக வேண்டிய தேவை தலத்திருச்சபைக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார் பேராயர் லியோ கொர்னேலியோ.
ஆறு வயதிற்கும் 14 வயதிற்கும் உட்பட்ட சிறார்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காரணம் காட்டி, கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டிய போபால் பேராயர் கொர்னேலியோயார் யார் பள்ளியில் சேர்க்கப்படவேண்டும் என்பதில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலையிடுவதுடன், கல்வி நிறுவனங்களின் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தரமானக் கல்வியை வழங்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் கத்தோலிக்க நிறுவனங்கள், அரசின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் கவலையை வெளியிட்ட அவர், நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

6.   தபால் தலைகள் மூலம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலைக் கௌரவித்துள்ளது பிலிப்பீன்ஸ் அரசு

மே 30,2011. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக இத்திங்களன்று அவர் உருவங்களைத் தாங்கிய நான்கு வகையான தபால்தலைகளை வெளியிட்டுள்ளது பிலிப்பீன்ஸ் அரசு.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிலிப்பீன்ஸ் நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபோது சந்தித்த நான்கு வெவ்வேறு இடங்களின் பின்னணியில் அவரின் படத்துடன் இத்தபால்தலைகள் அந்நாட்டின் 7 பேசோஸ் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளன‌.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1981, 1995 ஆகிய ஆண்டுகளில் பிலிப்பீன்சில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

7.  அகதிகள் குறித்த ஆஸ்திரேலியக் கொள்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் கண்டனம்
 
மே 30,2011. ஆஸ்திரேலியக் கரையை நோக்கி படகுகளில் வரும் அகதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலியக் கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் குறை கூறியுள்ளார்.
அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களைக் கட்டாயமாக தடுத்து வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பழங்குடியினர் குறித்த அரசுக் கொள்கையானது அந்த மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும், வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை கூறினார்.
தஞ்சம் தேடி வருபவர்களைக் கட்டாயமாக தடுத்து வைக்கும் ஆஸ்ரேலிய அரசின் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேசக் கடப்பாடுகளை மீறும் ஒன்று என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருத்தமற்ற, மனிதாபிமானமற்ற இக்கொள்கைகள் ஆஸ்ரேலியப் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment