Wednesday 22 June 2011

Catholic News - hottest and latest - 20 June 2011

1.  திருத்தந்தை : சான் மரினோ குடியரசின் உண்மைச் செல்வம் அதன் விசுவாசமே

2.  திருத்தந்தை : அகதிகள் ஒவ்வொருவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும்

3.  இலங்கையில் காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளில் உதவ தலத்திருச்சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது

4.  பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கோரி இலண்டனில் பேரணி

5.  குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கருத்தரங்கு

6.  இலங்கை கிழக்கு மாநில விதவைகளுக்கு இந்திய அரசு உதவி

7.  பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் சீன அரசின் முயற்சியால் இந்தியாவும், பங்களாதேஷும் கவலை

----------------------------------------------------------------------------------------------------------------


1.  திருத்தந்தை : சான் மரினோ குடியரசின் உண்மைச் செல்வம் அதன் விசுவாசமே

ஜூன் 20, 2011.   சான் மரினோ குடியரசின் தனித்துவத்திற்கு மூல ஆதாரமாக இருக்கும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் போற்றிப் பாதுகாக்க அந்நாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று, சான் மரினோ குடியரசில் ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவ மதிப்பீடுகளில் தன் ஆதாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடு, மக்களின் உண்மை நலனில் அக்கறையுள்ளதாயும், அவர்களின் மாண்பு மற்றும் விடுதலைக்கு உழைப்பதாயும், மக்கள் அனைவரும் அமைதியில் வாழும் வண்ணம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாயும் இருக்கும் என அர‌சியல் தலைவர்களுக்கான உரையில் குறிப்பிட்டார்.
கருவில் உருவானது முதல் மனித உயிர் இயற்கையாக மரணமடையும் வரை ஊக்குவித்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் திருச்சபை, குடும்பங்களுக்கான தன் தொடர்ந்த ஆதரவை வழங்கி வருகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை.
சான் மரினோ குடியரசின் உண்மையான செல்வம் என்பது அதன் விசுவாசமே என்ற பாப்பிறை, நுகர்வுக் கலாச்சாரத்தின் சவால்களை எதிர்கொண்டு வரும் இன்றைய உலகில் விசுவாசம் எனும் கொடையைப் பாதுகாத்துக் காப்பாற்றவேண்டிய கத்தோலிக்கர்களின் கடமையையும் சுட்டிக்காட்டினார்.

2.  திருத்தந்தை : அகதிகள் ஒவ்வொருவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும்

ஜூன் 20, 2011.    அகதிகள் ஒவ்வொருவரும் மாண்புடன் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 20ந்தேதி உலக அகதிகள் தினம் சிறப்பிக்கப்படுவதை, தன் ஞாயிறு மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அகதிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இயலும் சூழல் உருவாகும் வரை அவர்களை வரவேற்று, அவர்கள் மாண்புடன் வாழ்வதற்கான சூழல்களை உருவாக்கித் தரவேண்டியது நல்மனம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை என்றார்.
தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தின் 60ம் ஆண்டு இந்நாளில் கொண்டாடப்படுவதையும் சான் மரினோவில் தான் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.

3.  இலங்கையில் காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளில் உதவ தலத்திருச்சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது

ஜூன் 20, 2011.   உள்நாட்டுப்போர் முடிவடைந்துள்ள இலங்கையில், காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளில் உதவ தலத்திருச்சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றார் அந்நாட்டின் கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
சிங்களவர் மற்றும் தமிழரிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டியது கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய கடமையாகிறது, ஏனெனில் இரு தரப்பினரிடையேயும் கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றார் அவர். சாட்சியம் என்பது வார்த்தைகள் மூலம் அல்ல, மாறாக, செயல்பாடுகள் வழி இருக்க வேண்டும் எனக் கூறிய கர்தினால் இரஞ்சித், மடுமாதா திருத்தலத்தில் இரு இனத்தவரும் கூடி வந்து செபிப்பது,  இரு இனத்தவரும் இணைந்து வாழ முடியும் என்பதன் அடையாளமாக உள்ளது என மேலும் கூறினார்.

4.  பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கோரி இலண்டனில் பேரணி

ஜூன் 20, 2011.   பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொணரப்படவேண்டும் என அழைப்பு விடுத்து, ஜூலை மாதம் 2ந்தேதி இலண்டனில் அனைத்து மதத்தினரும் பங்கு கொள்ளும் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான 14 தாக்குதல்களுக்குக் காரணமான இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும் என குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவச் சபைகள், இப்பேரணியின்போது பிரித்தானிய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டம் மாற்றப்படவும், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கப்படவும் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை வழங்க உள்ளன. தேவநிந்தனை என்பதன் அர்த்தத்தை மரணமாக பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பார்ப்பதாக உரைத்த 'Aid to the Church in Need'  என்ற பிறரன்பு அமைப்பின் அதிகாரி Neville Kyrke-Smith, தேவநிந்தனைச் சட்டம் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.
இதனை கிறிஸ்தவர்களின் பிரச்சனை என்று மட்டும் பார்க்கக்கூடாது, ஏனெனில் இதனால் அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்ற அதிகாரி Smith, கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 50 கிறிஸ்தவர்கள் தேவ நிந்தனைச் சட்டம் மூலம் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

5.  குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கருத்தரங்கு

ஜூன் 20, 2011.   குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து ஆராயும் அனைத்துலகக் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 6 முதல் 9 வரை உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற உள்ளது.
'குணப்படுத்தலையும் புதுப்பித்தலையும் நோக்கிய கருத்தரங்கம்' என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்தச் சந்திப்பில் உலகின் ஆயர் பேரவைகள் மற்றும் துறவு சபைகளின் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்த‌ரங்கில் மருத்துவர்கள், மனஇயல் வல்லுனர்கள், சமூகவியலாளர்கள், இறையியலாளர்கள் என பல்வேறு துறையினரின் உரைகளும் இடம்பெறும் என்றார் இக்கருத்தரங்கிற்கான தயாரிப்பு அவையின் தலைவர் இயேசு சபை குரு Hans Zollner

6.  இலங்கை கிழக்கு மாநில விதவைகளுக்கு இந்திய அரசு உதவி

ஜூன் 20, 2011.   இலங்கை கிழக்கு மாநிலத்தில் யுத்தத்தினால் விதவைகளானவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்திய அரசினால் முதற் கட்டமாக 20 கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக கிடைத்துள்ளதாக இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார துணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் யுத்த விதவைகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் "சேவா இந்தியா " அமைப்பின் மூலமாக இந்த உதவி நடைமுறைப்படுத்தப்பட விருப்பதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென 50 இளையோர், பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் "சேவா இந்தியா" அமைப்பின் மூலமாக பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும், அவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் 800 இளம் விதவைகளுக்கு அவர்கள் மூலமாக சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.

7.  பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் சீன அரசின் முயற்சியால் இந்தியாவும், பங்களாதேஷும் கவலை

ஜூன் 20,2011. சீனாவின் Xinjiang பகுதியில் நிலவும் வறட்சியைப் போக்க, பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் முயற்சியில் சீன அரசு இறங்கியிருப்பது குறித்து இந்தியாவும், பங்களாதேஷும் தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளன.
ஆசியாவின் பெரும் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ரா 3000 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது சீனாவின் ஒரு பகுதியென்று கருதப்படும் தெற்கு திபெத்தில் உருவாகி, இமயமலை வழியாக இந்தியாவில் பாய்ந்து, இறுதியில் பங்களாதேஷில் கடலில் கலக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் இந்த நதியில் ஒரு மாபெரும் அணையை கட்டி, அதன் வழி உலகிலேயே மிக அதிக அளவு மின்சக்தியை உருவாக்கும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்திருந்தது. தற்போது சீன அரசு கூறிவரும் திட்டத்தின் மூலம், பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் முயற்சியாக, சீன அரசு இன்னும் ஒரு சில அணைகளை இந்நதியில் கட்டி வருவதற்கு இந்தியாவும், பங்களாதேஷும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
சீன அரசின் இந்த நடவடிக்கையால் ஒன்றையொன்று அடுத்திருக்கும் இந்நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் அதிகம் இருக்கும் என்று இந்தியாவும், பங்களாதேஷும் கூறி வருகின்றன.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...