Wednesday, 22 June 2011

Catholic News - hottest and latest - 21June 2011

1.  திருத்தந்தையின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு விழா ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டம்

2.  கீழை ரீதி திருச்சபைகளுக்கான உதவிப்பணிகளின் கூட்டம்

3.  உலகப் பொருளாதார அமைப்பு முறைகள் குறித்து மறுபரிசீலனைச் செய்ய அழைப்பு விடுக்கிறார் கர்தினால் Scola

4.  நைஜீரியாவின் பதட்டநிலைகளுக்கு சமூக அநீதிகளே காரணம்

5.  ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள 20000க்கும் மேற்பட்ட குருக்கள் வருகை

6.  உலக மயமாக்கல் கொள்கைகளால் ஆசியக்குடும்பங்களில் முரண்பாடுகள் அதிகரிப்பு

7.  வறுமை சூழ்ந்த, வளரும் நாடுகளில் அகதிகள் அதிகமாய் தஞ்சம் புகுந்துள்ளனர் - ஐ.நா. அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------


1.  திருத்தந்தையின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு விழா ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஜூன் 21, 2011.  திருத்தந்தை 16ம் பெனடிக்டின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட அகில உலகத் திருச்சபையும் தயாரித்து வருவதாக அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இம்மாதம் 29ம் தேதி திருத்தந்தை தன் குருத்துவ திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டை சிறப்பிக்க உள்ள‌ நிலையில், உலகின் அனைத்து மறைமாவட்டங்களும் தேவஅழைத்தலுக்கென திருநற்கருணை ஆராதனை வழிபாடுகளுடன் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு குருக்களுக்கான திருப்பேராயம் அனைத்து ஆயர் பேரவைகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் குரு லொம்பார்தி.
திருத்தந்தையின் வாழ்வு உண்மையிலேயே ஒரு குருத்துவ வாழ்வாக இருந்தது என்ற திருப்பீடப் பேச்சாளர், குருத்துவம் குறித்து திருத்தந்தை இதுவரை வழங்கியுள்ள கருத்துக்கள் அனைத்தும் அவர் பெற்ற இறை அருளின் ஆழ்ந்த அனுபவத்திலிருந்து வந்துள்ளன என மேலும் கூறினார்.

2.  கீழை ரீதி திருச்சபைகளுக்கான உதவிப்பணிகளின் கூட்டம்

ஜூன் 21, 2011.  கீழை ரீதி திருச்சபைகளுக்கான உதவிப்பணிகளின் 84வது அவைக் கூட்டம் இச்செவ்வாய் முதல் வெள்ளி வரை வத்திக்கானில் இடம்பெற்று வருகின்றது.
காப்டிக் கத்தோலிக்க சபையின் முதுபெரும் தலைவர் கர்தினால் அந்தோனியோஸ் நகுய்ப், மாரனைட் கிறிஸ்தவ சபையின் புதிய முதுபெரும் தலைவர் பெக்காரா பூத்ரோஸ் ராய், யெருசலேமிற்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் அந்தோனியோ ஃப்ராங்கோ, புனித பூமிக்கான பொறுப்பாளர் பிரான்சிஸ்கன் சபை குரு பியர்பத்திஸ்தா பிட்ஸாபாலா ஆகியோர் உட்பட முக்கிய திருச்சபைத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை, அவர்களுக்கான உதவிகளை ஏற்று நடத்துதல், அமைதிக்கான மதங்களின் மற்றும் கிறிஸ்தவ சபைகளின் அர்ப்பணம், புனித பூமியின் இன்றைய நிலை ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.  உலகப் பொருளாதார அமைப்பு முறைகள் குறித்து மறுபரிசீலனைச் செய்ய அழைப்பு விடுக்கிறார் கர்தினால் Scola

ஜூன் 21, 2011.  ஏழ்மைக்கு எதிராகவும், மனித மாண்பு மதிக்கப்பட வேண்டியும் மத்தியக்கிழக்கு நாடுகளில் எழுந்துள்ள போராட்டங்களைப் புரிந்து கொண்டு அப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாண‌ உதவும் நோக்கில் உலகப் பொருளாதார அமைப்பு முறைகள் குறித்து மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் Angelo Scola.
மத்தியக்கிழக்கு நாடுகளின் புதிய பாதை மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளின் எதிர்பாராத திருப்பம் ஆகியவை குறித்து இத்தாலியின் வெனிஸ் நகரில் கூடி விவாதித்து வரும் கத்தோலிக்கத் தலைவர்களின் கூட்டத்தில் எகிப்து, துனிசியா, சிரியா, குவைத் மற்றும் அபுதாபியின் தலத்திருச்சபைத் தலைவர்களும், உலகின் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஏழ்மையாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையாலும் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடுகளின் மக்களால் கொணரப்பட உள்ள மாற்றங்களுக்கான ஆதரவு, கிறிஸ்தவ மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் இருக்க வேண்டும் என்றார் கர்தினால் Scola.
ஆப்ரிக்காவின் வளர்ச்சியை மனதிற்கொண்டதாய், மக்களையும், பொருட்களையும் உலகமயமாக்கலைத் தாண்டி, மதிப்பீடுகளையும் வளங்களையும் உலகமயமாக்கும் நிலை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றார் கர்தினால் Scola.

4.  நைஜீரியாவின் பதட்டநிலைகளுக்கு சமூக அநீதிகளே காரணம்

ஜூன் 21, 2011.  நைஜீரியாவில் இன்று இடம்பெறும் பதட்டநிலைகளுக்கான முக்கிய காரணம், கிறிஸ்தவ இஸ்லாம் முரண்பாடு அல்ல, மாறாக, பணக்கார மற்றும் ஏழைகளிடையேயான மிகப்பெரும் இடைவெளியே என்றார் அந்நாட்டுப் பேராயர் John Onaiyekan.
நைஜீரியாவின் அமைதிக்கான ஆபத்து மதங்களிடையேயான முரண்பாடுகள் அல்ல, மாறாக அந்நாட்டில் நிலவிவரும் சமூக அநீதியேயாகும் என்ற அபுஜா பேராயர் Onaiyekan, கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே புரிந்து கொள்ளுதலையும் பேச்சுவார்த்தைகளையும் வளர்க்க தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மதங்களிடையேயான முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் குறித்து செய்தி வழங்கும் சமூகத்தொடர்பாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராயர்.

5.  ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள 20000க்கும் மேற்பட்ட குருக்கள் வருகை

ஜூன் 21, 2011. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டு மத்ரித் நகரில் நடைபெற விருக்கும் அகில உலக இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள 20000க்கும் மேற்பட்ட குருக்கள் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைவார்த்தையிலும், திருப்பலியிலும் இளையோரை வழிநடத்தும் அற்புதமான ஒரு வாய்ப்பையும் சவாலையும் குருக்கள் ஏற்று இம்மாநாட்டிற்கு வருகை தருவது திருச்சபையின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று மத்ரித் உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Antonio Maria Rouco கூறினார்.
ஆகஸ்ட் 16 முதல் 21 வரை திருத்தந்தையின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து ஆயர்களும் குருக்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என்று கர்தினால் Rouco மேலும் கூறினார்.

6.  உலக மயமாக்கல் கொள்கைகளால் ஆசியக்குடும்பங்களில் முரண்பாடுகள் அதிகரிப்பு

ஜூன் 21, 2011.  உலக மயமாக்கல் கொள்கைகளால் ஆசியக்குடும்பங்களில் புதிய சவால்கள் உருவாகியுள்ளதாகவும், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலக மயமாக்கல் கொள்கைகளின் பாதிப்புகளாக, ஒழுக்க ரீதி, ஆன்மீக மற்றும் சமூக இணைப்பு பாலங்கள் பலவீனமடைந்து, மணமுறிவுகள், குடும்ப உறவுகளின் முறிவு, தனிமைப்படுத்தப்படுதல், மன நோய்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிடுகின்றது இந்த அறிக்கை.
இணையதளம் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களால் கவரப்படும் குழந்தைகள் அந்த வாழ்க்கை தரத்தையும் பொருட்களையும் பெற விரும்புவதால், பெற்றோர் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர் என, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆசியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு கூறுகிறது.
இத்தகைய முரண்பாட்டு நிலைகளால் ஆசியாவில் சிறார்கள் வன்முறையாளர்களாக மாறும் அபாயம், விபச்சாரத்தில் தள்ளப்படும் நிலை, பெற்றோரை மதிக்காத நிலை போன்றவை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

7.  வறுமை சூழ்ந்த, வளரும் நாடுகளில் அகதிகள் அதிகமாய் தஞ்சம் புகுந்துள்ளனர் - ஐ.நா. அறிக்கை

ஜூன் 21, 2011. உலகில் அகதிகளாய் வாழ்பவர்களில் 80 விழுக்காட்டினர் வறுமை சூழ்ந்த வளரும் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜூன் 20, இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட உலக அகதிகள் நாளை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகள் பணிக்கான உயர்மட்டக் குழு UNHCR வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வருமானம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, வறிய, வளரும் நாடுகள் அகதிகளைத் தங்கள் நாடுகளில் தங்க வைப்பதால், அவர்கள் பொருளாதாரத்திற்கு இன்னும் சவால்கள் அதிகமாகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
வளரும் நாடுகளிலேயே பாகிஸ்தான், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் 19 இலட்சம், 10 இலட்சத்து 70 ஆயிரம், மற்றும் 10 இலட்சத்து 5 ஆயிரம் என்ற அளவில் அதிகப்படியான அகதிகள் தங்கியுள்ளனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
செல்வம் மிகுந்த, வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் அகதிகள் வெள்ளமென சேர்ந்துவிடக் கூடும் என்று அந்நாடுகள் தங்கள் அச்சத்தை வெளியிடுவதும், அதற்கு முன்னேற்பாடாக, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஏனைய ஏழை நாடுகளில் இவர்கள் தஞ்சம் புகுவதற்கு வழி வகுக்கின்றன என்றும், இதனால், வறிய நாடுகளின் பாரம் இன்னும் அதிகமாகின்றன என்றும் ஐ.நா.உயர் அதிகாரி Antonio Guterres கூறினார்.
உலகெங்கும் இன்றைய நிலவரப்படி, 4 கோடியே 37 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தோராய் வாழ்கின்றனர் என்றும், 2004ம் ஆண்டு முதல் உலகின் பல நாடுகளில் மோதல்களும், போரும் அதிகமாகியுள்ளதால், புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடி வருகிறதென்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...