Thursday 2 June 2011

Catholic News - hottest and latest - 01June 2011


1. அன்னை மரியை நோக்கிய திருத்தந்தையின் செபம்

2. புனித இசைக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி

3. திருத்தந்தையின் குரோவேசியத் திருப்பயணம் தங்கள் நாட்டவர் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் - கர்தினால் Vinko Puljic

4. திருத்தந்தை லிபிய மக்களுடன் இணைந்துள்ளார் - பேராயர் Martinelli

5. குவஹாட்டிப் பேராயர் தாமஸ் மேனம்பரம்பிலை அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இத்தாலிய இதழ் பரிந்துரை

6. இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடக்க காவல் துறையினர் பயன்படுத்திய வன்முறைகளுக்கு கத்தோலிக்கக் குருக்கள் கண்டனம்

7. கடந்த பத்து ஆண்டுகளில் 251 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை

8. செல்போன்களால் புற்றுநோய் அபாயம்: உலக நலவாழ்வு மையம் எச்சரிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------
1. அன்னை மரியை நோக்கிய திருத்தந்தையின் செபம்

ஜூன் 01,2011. அகில உலகத் திருச்சபைக்கு அருள் பெரும் கொடையாக இருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்புடன் இந்த மரியன்னை மாதமான மே மாதத்தை துவக்கியது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக இருந்தது என மரியன்னை மாதத்தின் இறுதி நாள் வழிபாட்டில் கலந்துகொண்டபோது உரையாற்றினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
அந்த மாபெரும் திருத்தந்தையின் சாட்சியம், இன்றைய நம் வாழ்வை ஒளிர்விப்பதாகவும், தூண்டுவதாகவும், விசுவாச உறுதிப்பாட்டை வழங்குவதாகவும் உள்ளது என்ற பாப்பிறை, நம் விசுவாச உறுதிப்பாடு குறித்து சிந்திப்பதற்கு, அன்னை மரி எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வு நமக்கு வழிகாட்டுவதாக உள்ளது என்றார்.
இறைத்தூதரின் வார்த்தைகளை நம்பி மரியா தன்னை இறைவனுக்கு முற்றிலுமாக  கையளித்ததால்தான் அவரைக் கண்டவுடன் எலிசபெத்தும் 'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' என்று வாழ்த்தினார் என்றார் பாப்பிறை.
ஒவ்வொரு கிறிஸ்தவ‌ரும் இறைவனின் அழைப்புக்கு 'ஆம்' என்ற பதிலை வழங்கும் வகையில் எளிய உள்ளத்துடன் வாழ்வதற்குத் தேவையான வரத்தை அன்னை மரி இறைவனிடம் இருந்துப் பெற்றுத்தர வேண்டும் என்ற மன்றாட்டுடன் தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. புனித இசைக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி

ஜூன் 01,2011. புனித பெரிய கிரகோரியால் உருவாக்கப்பட்ட புனித இசையின் பாரம்பரியத்தைத் தொடர்வது முக்கியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித இசைக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டி, இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் கர்தினால் Zenon Grocholewskiக்கு திருத்தந்தை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் இசைப் பிரியர்கள் அனைவருக்கும் இது மகிழ்வைத் தரும் ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்று நிலவிய பல்வேறு இசைவடிவங்களில் இருந்து வழிபாடு சார்ந்த இசையை வேறுபடுத்த திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் 1911ம் ஆண்டு புனித இசைக்கான பாப்பிறை நிறுவனத்தை உருவாக்கி, புனித இசையில் கொணர்ந்த ஆழமான மாற்றங்களைத் திருத்தந்தை தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனைப் புகழ்வதும், விசுவாசிகளின் மனங்களை இறைவன்பால் எழுப்புவதுமே புனித இசையின் முக்கியப் பணிகள் என்று கூறிய திருத்தந்தை, திருச்சபையில் கிரகோரியன் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்வது இன்றும் நமக்குத் தேவையான ஓர் அம்சம் என்று கூறினார்.


3. திருத்தந்தையின் குரோவேசியத் திருப்பயணம் தங்கள் நாட்டவர் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் - கர்தினால் Vinko Puljic

ஜூன் 01,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருச்சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் குரோவேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் திருப்பயணம் தங்கள் நாட்டவர் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு தருணமாக அமையும் என்று கூறினார் Sarajevoவின் பேராயர் கர்தினால் Vinko Puljic.
வருகிற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் குரோவேசிய கத்தோலிக்க வானொலி மற்றும் மெஜுகொரே (Medjugorje) வானொலி ஆகிய ஊடகங்களுக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில் கர்தினால் Puljic வெளியிட்டார்.
திருத்தந்தையின் இப்பயணத்தின்போது குடும்பங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது தனக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறதென்று உரைத்த கர்தினால் Puljic, குடும்ப உறவுகள் குலைந்து வரும் இன்றையச் சூழலில் திருத்தந்தை அளிக்கும் பல்வேறு உரைகளின் வழியாக குரோவேசிய மக்கள் குடும்ப வாழ்வின் உன்னதத்தை மீண்டும் உணர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று சுட்டிக் காட்டினார்.
Bosnia மற்றும் Herzegovina ஆகிய அண்மைய நாடுகளிலிருந்தும் பலர், சிறப்பாக இளையோர், திருத்தந்தையைக் காண வருகின்றனர் என்று கூறிய கர்தினால் Puljic, திருத்தந்தையின் பயணம் இந்த நாடுகளில் தற்போது சூழ்ந்துள்ள நம்பிக்கையற்றச் சூழலுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார்.


4. திருத்தந்தை லிபிய மக்களுடன் இணைந்துள்ளார் - பேராயர் Martinelli

ஜூன் 01,2011. நீங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக எண்ண வேண்டாம், திருச்சபை உங்களுடன் இணைத்துள்ளது, முக்கியமாக செபத்தின் வழியே உங்களுடன் பயணிக்கிறது என்று திருத்தந்தை தன்னிடம் கூறியதாக லிபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Giovaanni Innocenzo Martinelli கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை அண்மையில் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசிய Tripoliயின்  அப்போஸ்தலிக்க நிர்வாகி, திருத்தந்தையைச் சந்தித்தது தனக்கும், லிபிய மக்களுக்கும் நம்பிக்கையையும், மன உறுதியையும் அளித்துள்ளது என்று கூறினார்.
பேராயர் Martinelli அமைதி மற்றும் நீதிக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், மற்றும் நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்த திருப்பீட அலுவலகத்தின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தபின் மீண்டும் லிபியாவுக்குத் திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, தென் ஆப்ரிக்கத் தலைவர் Jocob Zuma லிபிய அரசுத் தலைவர் Muammar Gaddafiயை இத்திங்களன்று சந்தித்துள்ளது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு செயல்பாடு என்றும், லிபியப் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுகள் கிடைக்காது எனினும், நம்பிக்கை தரும் செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்று Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Martinelli கூறினார்.


5. குவஹாட்டிப் பேராயர் தாமஸ் மேனம்பரம்பிலை அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இத்தாலிய இதழ் பரிந்துரை

ஜூன் 01,2011. இந்தியப் பேராயர் ஒருவர் அமைதிக்கான நொபெல் பரிசு பெற தகுதியுடையவர் என்று இத்தாலிய இதழ் ஒன்று பரிந்துரைத்துள்ளது.
Il Bollettino Salesiano என்ற சலேசிய இதழின் ஜூன் மாதப் பதிப்பில் குவஹாட்டியின் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்களை அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இந்த இதழ் பரிந்துரைத்துள்ளது.
74 வயதான பேராயர் மேனம்பரம்பில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்குப் பகுதியில் அமைதியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருச்சபைத் தலைவர்களும், இன்னும் பிற முக்கியத் தலைவர்களும் இணைந்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணும் முயற்சிகளில் ஈடுபடும்போது, இறைவார்த்தையின் சக்தி மக்கள் மத்தியில் இன்னும் தெளிவான முறையில் வெளிப்படுவதை உணர முடிகிறது என்று பேராயர் UCANக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
வடகிழக்கு இந்திய ஆயர் பேரவையின் தலைவராக உள்ள பேராயர் மேனம்பரம்பில், ஆசிய ஆயர்கள் பேரவையின் நற்செய்தி பணிக்குழுவின் தலைவராகவும், இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவின் தலைவராகவும் பணிபுரிகின்றார்.


6. இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடக்க காவல் துறையினர் பயன்படுத்திய வன்முறைகளுக்கு கத்தோலிக்கக் குருக்கள் கண்டனம்

ஜூன் 01,2011. இலங்கையில் கொழும்புக்கருகே Katunayake எனும் இடத்தில் இத்திங்களன்று மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க காவல் துறையினர் அளவுக்கு மீறி பயன்படுத்திய வன்முறைகளை கத்தோலிக்கக் குருக்களும் இன்னும் பல மனிதஉரிமை ஆர்வலகளும் வன்மையாய் கண்டித்துள்ளனர்.
பணி ஒய்வு காலத்தில் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சலுகைகளைக் கோரி 18,000க்கும் அதிகமானோர் ஈடுபட்ட இந்தப் போராட்டத்தை அடக்க காவல் துறையினர் தடியடி, கண்ணீர்ப் புகை, மற்றும் அளவுக்கு மீறிய வன்முறைகளைப் பயன்படுத்தியதால் மூன்று பேர் இறந்தனர் என்றும், மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்றும், இது குறித்து அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என்றும்  இளம் கிறிஸ்தவ உழைப்பாளர்கள் அமைப்பின் ஆலோசகரான அருள்தந்தை Reid Shelton Fernando கூறினார்.
காவல் துறையினர் மேற்கொண்ட இந்த வன்முறை, அடிப்படை மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று Laxman Rosa என்ற கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார்.


7. கடந்த பத்து ஆண்டுகளில் 251 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை

ஜூன் 01,2011. கடந்த பத்து ஆண்டுகளில் 13 நாடுகளில் 251 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இக்கொலைகளைச் செய்தவர்கள் எந்த ஒரு தண்டனையும் இதுவரை பெறவில்லை என்றும் செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு ஒன்று அறிக்கை விடுத்துள்ளது.
கொலை செய்தவர்கள் தண்டனை பெறாமல் போவதால், இந்நாடுகளில் பத்திரிகைத் துறை இன்னும் அதிகமாக மௌனமாகிப் போகின்றதென்று கூறும் இவ்வறிக்கை, இது போன்ற மறைமுகமான அடக்கு முறையை ஈராக், சோமாலியா, பிலிப்பின்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் காண முடிகிறதென்று சுட்டிக் காட்டுகிறது.
பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பத்திரிகைத் துறையினர் கொலை செய்யப்படுவதால், இந்த உண்மைகள் மேலும் மேலும் புதைக்கப்படுகின்றன என்று செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் இயக்குனர் Joel Simon இவ்வறிக்கையை வெளியிடும்போது கூறினார்.
பாகிஸ்தான் இராணுவத்தில் அல்கேய்தாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர் என்ற செய்தியை வெளியிட்ட Saleem Shahzad என்பவரின் இறந்த உடல் இச்செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்துஇப்புதனன்று நியூ யார்க்கிலிருந்து வெளியான இவ்வறிக்கை, செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.


8. செல்போன்களால் புற்றுநோய் அபாயம்: உலக நலவாழ்வு மையம் எச்சரிக்கை

ஜூன் 01,2011. இன்று உலகில் செல்போன் மிக அதிக அளவு ஊடுருவி இருக்கும் சூழ்நிலையில், செல்போன்கள் பயன்பாட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக நலவாழ்வு மையம் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நலவாழ்வு மையத்தின் ஓர் அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது..
செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டிருப்பதால், செல்போன்களை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவைக் காரங்கள் ஆகிய இரசாயனப் பொருட்களுக்கு நிகராகப் பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது என்பது அறிவியலாளர்களின் கருத்து. பிறநாடுகளில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்தப் போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்ட பின்னரே செல்போனை வாங்குகின்றனர் என்றும், ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...