Wednesday, 15 June 2011

Catholic News - hottest and latest - 09 June 2011


1. திருத்தந்தை : அறநெறிகளுடன் இணைந்து செல்லும் தொழில்நுட்பமே மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் உதவுவதாக இருக்க முடியும்

2. தமிழகத்தின் மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் திருத்தந்தை திருப்பீடத்தில் சந்தித்தார்

3. எய்ட்ஸ் நோயைத் தீர்க்க செல்வம் மிகுந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை - திருப்பீடச் செயலர்

4. தெற்கு சூடான் மக்களுக்கு நமது ஒன்றிப்பைப் பல வழிகளிலும் அளிக்க வேண்டும் - வத்திக்கானின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்

5. நைஜீரியாவின் புனித பேட்ரிக் பேராலயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்

6. லண்டன் பேராலயத்தில் இந்திய தலித் மக்களை மையப்படுத்திய புகைப்படக் கண்காட்சி

7. எய்ட்ஸ் நோய் தீர்க்கும் செயல்களை ஒரு போர்க்கால நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் -  ஐ.நா.தலைமைச் செயலர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அறநெறிகளுடன் இணைந்து செல்லும் தொழில்நுட்பமே மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் உதவுவதாக இருக்க முடியும்

ஜூன் 09,2011. நியூஸிலாந்து, சிரியா, பெலீஸ், ஈக்குயேட்டரியல் கினி, மொல்தவியா, கானா ஆகிய நாடுகளின்  வத்திக்கானுக்கானப் புதியத் தூதர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை.
இயற்கையிலும், தொழிற்நுட்பத்துறையிலும் மக்களிடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள எண்ணற்ற அழிவுகள் இவ்வாண்டின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட பாப்பிறை,  இயற்கை வளங்களின் பொறுப்பாளராக உள்ள மனித குலம் ஒரு நாளும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக மாறிவிடக்கூடாது என்றார்.
இந்த உலகின் வருங்காலம் குறித்தும், தொழில்நுட்பம் மற்றும் வாழ்வு தொடர்புடைய தங்கள் கடமை குறித்தும் நாடுகள் சிந்திக்க இந்த விழிப்புணர்வு உதவ வேண்டும் என்றார் அவர்.
இன்றைய உலகில் சுற்றுச்சூழலை மதித்து, இயற்கையின் பாரம்பரியத்தை பாதுகாத்து, மனித நலனுக்குக் கேடு விளைவிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும், இயற்கையை பயன்படுத்தும் வழிகளுமே அரசியல் மற்றும் பொருளாதார தீர்மானங்களில் முதலிடம் பெறவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பாப்பிறை.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்க வாழ்வை மதிக்காத வாழ்க்கைமுறை, மனித குல அழிவிற்கு இட்டுச்செல்லும் ஆபத்து குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
மனிதனின் படைப்பான தொழில்நுட்பத்தின் இடம் குறித்து மனித குலம் உணர்ந்துச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் தொழில் நுட்பம் ஒன்றே வழி என்ற எண்ணப்போக்கு, மற்றும், மனித கட்டுப்பாட்டையும் மீறிச்செல்லும் தொழில்நுட்பத்தினால் விளையும் அழிவுகள் குறித்தும் கவலையை வெளியிட்டார்.
அறநெறிகளுடன் ஒத்திணங்கிச் செல்லும் தொழில்நுட்பமே மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் உதவுவதாக இருக்கமுடியும் என்பதை பாப்பிறை தன் உரையில் வலியுறுத்தினார்.
திருப்பீடத்திற்கான நியூஸிலாந்து தூதுவர் George Robert Furness Troup, சிரியாவின் தூதுவர் Hussam Edin Aala, பெலீஸ் தூதுவர் Henry Llewellyn Lawrence, ஈக்குயேட்டரியல் கினி தூதுவர் Narciso Ntugu Abeso Oyana, மொல்தவியா தூதுவர் Stefan Gorda, கானா தூதுவர் Geneviève Delali Tsegah ஆகியோரை குழுவாகச் ந்தித்து உரை ங்கியதிருத்தந்தை, பின்னர் அவர்களை னித்தனியாகவும் ந்தித்து, ன் ருத்துக்களைப் கிர்ந்து கொண்டார்.


2. தமிழகத்தின் மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் திருத்தந்தை திருப்பீடத்தில் சந்தித்தார்

ஜூன் 09,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து உரோம் நகர் வந்துள்ள மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தைஇவ்வியாழன காலை தமிழக ஆயர்களின் 'அட் லிமினா' சந்திப்பைத் துவக்கும் முதல்கட்டமாக, மூன்று பேராயர்களையும், ஒரு துணை ஆயரையும் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
சென்னை மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்களை, துணை ஆயர் இலாரன்ஸ் பயஸுடன் முத‌லில் சந்தித்து உரையாடிய‌ திருத்தந்தை, பின்னர் மதுரைப் பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்களையும், பாண்டிச்சேரி கடலூர் பேராயர் அன்டனி அனந்தராயர்  அவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து, அந்தந்த‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ள் குறித்து அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடினார்.


3. எய்ட்ஸ் நோயைத் தீர்க்க செல்வம் மிகுந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை - திருப்பீடச் செயலர்

ஜூன் 09,2011. எய்ட்ஸ் நோயைத் தீர்க்க செல்வம் மிகுந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும், தனி மனித சுயக்கட்டுபாடே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்றும் வத்திக்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எய்ட்ஸ் நோய் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டை பல்வேறு வகைகளில் நினைவு கூறும் இந்த வாரத்தில், எய்ட்ஸ் நோய் தொடர்பாக உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
இந்த நோயை எண்ணிக்கை அளவில் மட்டும் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது என்று கூறிய கர்தினால் பெர்த்தோனே, இந்நோயைக் குறித்த சரியான பாடங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள antiretrovial முறைகள் குறித்த ஆய்வுகள் மனித குலத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளதென்று நலப்பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கூறினார்.
ஆணுறைகளைப் பயன்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று கூறிவந்த பல பன்னாட்டு நிறுவனங்கள், திருச்சபை துவக்கத்திலிருந்தே கூறி வந்துள்ள சுயக் கட்டுப்பாடு குறித்து அண்மையில் பேசி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கதொரு மாற்றம் என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. தெற்கு சூடான் மக்களுக்கு நமது ஒன்றிப்பைப் பல வழிகளிலும் அளிக்க வேண்டும் - வத்திக்கானின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்

ஜூன் 09,2011. இன்னும் சரியாக ஒரு மாதத்தில், ஜூலை 9ம் தேதி, தனிநாடாக பிரிய உள்ள தெற்கு சூடான் மக்களுக்கு நாம் நமது ஒன்றிப்பைப் பல வழிகளிலும் அளிக்க வேண்டும் என்று வத்திக்கானின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
அண்மையில் வத்திக்கான் தொலைக்காட்சியின் 'Octava Dies' என்ற நிகழ்ச்சியில் தெற்கு சூடான் மக்களைக் குறித்து தன் கவலைகளை வெளியிட்டார் இயேசு சபைக் குரு Federico Lombardi.
இருபது ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டுப் போருக்குப் பின், இந்த ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சூடான் நாடு இரு நாடுகளாகப் பிரிய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் அளித்த கருத்தின்படி இந்தப் பிரிவு நிகழ்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Lombardi, இந்தப் பிரிவு நிகழ வேண்டிய நாள் நெருங்கி வருகையில், அந்நாட்டில் நிகழும் வன்முறைகள் நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்று கூறினார்.
பிரிவு நிகழ வேண்டிய எல்லைப் பகுதியில் உள்ள Abyei என்ற நகரில் தொடர்ந்து வரும் வன்முறைகளால் இதுவரை பல ஆயிரம் மக்கள் அந்நகரை விட்டு ஓடிவிட்டனர் என்றும், இவர்கள் பட்டினி, நோய்கள் மற்றும் நெருங்கி வரும் மழைக் காலம் ஆகியவைகளால் அதிகமான பாதிப்புக்களுக்கு உள்ளாவர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சூடானின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாய் வாழ்வது இஸ்லாமியர்கள் என்பதும், தெற்குப் பகுதியில் பெரும்பான்மையாய் வாழ்வது கிறிஸ்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Abyei பகுதியில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை நிறுத்தும்படி ஐ.நா.அவை இப்புதனன்று மீண்டும் அந்நாட்டிற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.


5. நைஜீரியாவின் புனித பேட்ரிக் பேராலயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்

ஜூன் 09,2011. நைஜீரியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுவினரால் Maiduguri என்ற நகரில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் இச்செவ்வாயன்று தாக்கப்பட்டதில் 16 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
பேராயலத்தில் வெடித்த ஒரு சக்திவாய்ந்த வெடி குண்டால் பேராலயத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது என்றும், உயிர்ச் சேதம் உட்பட ஆலயம் பல அழிவுகளுக்கு உள்ளானது என்றும் Maiduguri ஆயர் Oliver Dashe Doeme கூறினார்.
மேற்கத்திய கல்வி ஒரு பாவம் என்று பொருள்படும் Boko Haram என்றப் பெயரைத் தாங்கிய இந்த அடிப்படைவாதக் குழுவினர் அண்மைக் காலங்களில் Maiduguriயில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவில் மிக அதிகமாய் மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் இஸ்லாமியச் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் இக்குழுவினரின் வன்முறைகள் ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்துள்ளன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
Maiduguri யில் பதட்ட நிலை உருவாகியுள்ளதென்று FIDES செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் Doeme, இந்தப் பதட்ட நிலையில் கிறிஸ்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், கடந்த வாரம் இதே குழுவினரால் மற்றொரு கத்தோலிக்கக் கோவிலும் ஒரு பள்ளியும் தாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.


6. லண்டன் பேராலயத்தில் இந்திய தலித் மக்களை மையப்படுத்திய புகைப்படக் கண்காட்சி

ஜூன் 09,2011. இந்திய தலித் மக்களை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் புனித பவுல் பேராலயத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
உலகளாவிய கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு என்ற ஓர் அமைப்பிற்கென Marcus Perkins என்ற புகைப்படத் திறமையாளர் எடுத்த புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
இந்தியாவில் உள்ள சாதீய அமைப்பு முறையை உலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறிய Perkins, இந்தியா தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி வரும் ஒரு நாடாக இருப்பதால், அங்கு சாதீய முறைகள் இல்லை என்று உலகம் எண்ணி வருகிறதென்றும் அந்த எண்ணம் தவறானதென்பதை இந்தப் புகைப்படங்கள் சுட்டிக் காட்டும் என்றும் கூறினார்.
இந்தியச் சட்டங்களின்படி 'தீண்டாமை' என்பது ஒரு குற்றம் என்றாலும், அது அந்நாட்டில் இன்னும் நடைமுறையில் உள்ளதென்று Perkins வலியுறுத்திக் கூறினார்.
ஜூன் 14 முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின்போது, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் இதே கருத்திற்காக ஒப்புக்கொடுக்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. எய்ட்ஸ் நோய் தீர்க்கும் செயல்களைப் போர்க்கால நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் -  ஐ.நா.தலைமைச் செயலர்

ஜூன் 09,2011. எய்ட்ஸ் நோய் தொடர்பான செயல்பாடுகள் துவக்கத்தில் இருந்தே வெறும் நோயாக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சமுதாயப் புறக்கணிப்பு என்ற பெரும் பிரச்சனையையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருந்துள்ளது என்றும் ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.
எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிந்துள்ள வேளையில், ஐ.நா.தலைமைச் செயலகத்தில் இச்செவ்வாயன்று முடிவடைந்த மூன்று நாள் உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்நோயினால் 6 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 2 கோடியே 50 இலட்சம் பேர் இறந்துள்ளனர் மற்றும் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் அனைத்து நாட்டின் அரசுகள், தனியார் துறை மற்றும் பொதுநலத் துறையினர் என்று அனைவரும் இந்த நோய் தீர்க்கும் செயல்களை ஒரு போர்க்கால நடவடிக்கையாக மேற்கொண்டால் மட்டுமே இந்த நோயை உலகிலிருந்து முற்றிலும் நீக்க முடியும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனைவரும் இணைந்து செயல்பட்டால் 2015ம் ஆண்டுக்குள் இந்த நோய் கண்டோர் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளும் இன்னும் பிற சமுதாய உதவிகளும் கிடைக்கும் என்று ஐ.நா.அவையின் உயர்மட்ட உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...