Tuesday, 7 June 2011

Catholic News - hottest and latest - 07 June 2011


1.   சிரியாவின் அமைதிக்கென இயேசுசபையினரின் அழைப்பு

2.   ஐந்து நிமிடத்திற்கு ஒரு கிறிஸ்தவர் மத நம்பிக்கைக்காகக் கொலை

3.   மணமுறிவுச் சட்டப்பரிந்துரைக்குப் பிலிப்பீன்ஸ் திருச்சபை எதிர்ப்பு

4.   பாகிஸ்தானில் விவிலியத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள்

5.   நாட்டிற்குள் வாழவும், நாட்டை விட்டு வெளியேறவும் அஞ்சுகின்றனர் ஈராக் கிறிஸ்தவர்கள்

6.   தடுப்பு மருந்துகளின்  விலைகள் குறைய உள்ளன


----------------------------------------------------------------------------------------------------------------


1.  சிரியாவின் அமைதிக்கென இயேசுசபையினரின் அழைப்பு

ஜூன் 07,  2011.   அரசுத் துருப்புகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்கள் இடம்பெற்று வரும் சிரியாவில், நாட்டின் ஒற்றுமைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினர்.
எண்ணற்றோரின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ள அண்மை பதட்ட நிலைகளை முடிவுக்குக் கொண்டுவர சிரியாவின் அனைத்துத் தரப்பினரும் நாடு தழுவிய அளவில் மனம் திறந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர் இயேசு சபைக் குருக்கள். ஒவ்வொருவரும் வன்முறையைக் கைவிடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள சிரிய இயேசு சபையினர், ஒவ்வொரு மனிதனின் மாண்பும் மதிக்கப்படவேண்டும் என இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
சிரிய நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரின் விண்ணப்பம் தாங்கிய‌ இந்த அறிக்கை அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

2.  ஐந்து நிமிடத்திற்கு ஒரு கிறிஸ்தவர் மத நம்பிக்கைக்காகக் கொலை

ஜூன் 07,  2011.   ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலகில் தங்கள் விசுவாசத்திற்காக ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக ஐரோப்பிய அதிகாரி ஒருவர் கூறினார்.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் 'கிறிஸ்தவர், யூதர் மற்றும் இஸ்லாமியர் இடையேயான உரையாடல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் உரையாற்றிய ஐரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பின் பிரதிநிதி Massimo Introvigne, ஒவ்வோர் ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் என்ற விகிதத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்படுவதாகவும் உரைத்தார். இது உள்நாட்டுப் போராலோ அல்லது நாடுகளிடையேயான போராலோ இடம்பெறும் மரணங்கள் அல்ல, மாறாக மத நம்பிக்கைகளுக்காக இடம்பெறும் மரணங்கள் என்றார் அவர்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக உலகின் பல நாடுகளிலும் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளால் மட்டும் எவ்வித பயனையும் அடைய முடியாது என மேலும் கூறினார் அதிகாரி Introvigne.

3.   மணமுறிவுச் சட்டப்பரிந்துரைக்குப் பிலிப்பீன்ஸ் திருச்சபை எதிர்ப்பு

ஜூன் 07,  2011.   மணமுறிவைச் சட்டமாக்கும் நோக்கில் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சட்டப்பரிந்துரைக்குத் தங்கள் எதிர்ப்பை கிறிஸ்தவர்கள் வெளியிடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
உலகிலேயே மணமுறிவைச் சட்டமாக ஏற்காமல் இருந்த இரு நாடுகளுள் ஒன்றான மால்ட்டாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிலிப்பீன்ஸ் ஆயர்கள், திருமணங்களின் முறிவுபடாத் தன்மையை பாதுகாப்பதில் பிலிப்பீன்ஸ் தலத்திருச்சபை உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். குடும்பங்களை அழிக்க முயலும் மணமுறிவுச் சட்டம் அமுலுக்கு வந்தால், சமூக மதிப்பீடுகளின் அழிவுக்கே அது இட்டுச்செல்லும் என ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

4.   பாகிஸ்தானில் விவிலியத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள்

ஜூன் 07,  2011.   தெய்வ நிந்தனை, மற்றும் கீழ்த்தரமான பாலின இலக்கியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் தடைச் செய்யப்படவேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டு இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்று வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்.
விவிலியத்தின் சில பகுதிகள் தெய்வ நிந்தனைக்கு உரியதாக உள்ளதாக பாகிஸ்தானின் Jamiat-Ulema-e-Islami என்ற அரசியல் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது கிறிஸ்தவர்களுக்குப் பெரும் மனவேதனையைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட லாகூர் ஆயர் செபஸ்தியான் ஷா, இதனால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளைக் குறைக்க விரும்பும் தலத்திருச்சபை, எவ்விதக் கண்டனக் குரலையும் எழுப்பாமல் மௌனம் காப்பதே சிறந்தது எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் புனித நூலை பாகிஸ்தானில் தடைச்செய்யும் முயற்சி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும், த‌ற்போது தேவைப்படுவது செபமும் பொறுமையுமே என்றும் கூறினார் ஆயர் ஷா.
விவிலியத்தைப் பெரும்பான்மை இஸ்லாமியர்களும் மதிப்பதால் அது தடை செய்யப்படும் வாய்ப்புகள் குறைவே என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.

5.    நாட்டிற்குள் வாழவும், நாட்டை விட்டு வெளியேறவும் அஞ்சுகின்றனர் ஈராக் கிறிஸ்தவர்கள்

ஜூன் 07,  2011.   நாட்டிற்குள் வாழவும், நாட்டை விட்டு வெளியேறவும் அஞ்சி ஈராக் கிறிஸ்தவர்கள், தங்கள் வருங்காலம் குறித்த கேள்விக்குறியுடன் வாழ்வதாக அந்நாட்டுப் பேராயர் ஒருவர் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
தங்களுக்கு ஈராக்கில் வருங்காலம் இல்லை என அஞ்சும் ஈராக் கிறிஸ்தவர்கள், அண்டை நாடுகளின் பதட்டநிலைகளால் அங்குச் சென்று குடியேறவும் அஞ்சுவதாகக் கூறிய கல்தேய ரீதி பேராயர் Bashar Wardaஅண்மையில் அந்நாட்டின் மொசூல் நகருக்கருகே நான்கு குழந்தைகளின் தந்தையாகிய அரக்கான் யாக்கோப் என்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மத மற்றும் அரசியல் தொடர்புடைய வன்முறைகளில் 2002ம் ஆண்டிலிருந்து இதுவரை 570க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறினார் பேராயர்.
பல கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆவலை வெளியிடுவதாகவும், ஆனால் அண்மை நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவின் அரசியல் பதட்ட நிலைகளால் அச்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் கூறினார் பேராயர் Warda.

6.  தடுப்பு மருந்துகளின்  விலைகள் குறைய உள்ளன
 
ஜூன் 07,  2011.   வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு, காசநோய் மற்றும் வேறு பல நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக உலக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மூலம் தடுக்கவல்ல நோய்களால் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபத்தைந்து இலட்சம் பேர் உயிரிழந்து வரும் இன்றையச் சூழலில், குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்ற தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துளுக்கான உலகக் கூட்டமைப்பான GAVI  தனது இலக்குகளை எட்ட இந்த விலைக் குறைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளைத் தடுப்பூசி மூலம் காப்பாற்றுவதிலுள்ள மிகப் பெரிய தடை, அந்தத் தடுப்பு மருந்துகளின் கூடுதலான விலைகள்தான் என ஏற்கனவே பல மனிதாபிமான அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
GAVI அமைப்பின் மூலமாக விற்கப்படுகின்ற மருந்துகளின் விலைகளைக் குறைப்பதாக கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தொண்டையடைப்பான், நரம்பிழுப்பு நோய், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இரத்தக் காய்ச்சல் போன்ற ஐந்து நோய்களுக்கானத் தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பதாக சீரம் இண்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இந்திய நிறுவனங்களும் சம்மதித்துள்ளன.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...