1. தமிழகத்தின் ஏழு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
2. கோஹிமா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
3. அகில உலக வர்த்தகக் கருத்தரங்கில் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்தோனே வழங்கிய துவக்க உரை
4. பாகிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரி தலையிட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி
5. படகுகளில் பாதுகாப்பற்ற பயணம் செய்து உயிரிழந்தோரின் நினைவாக உரோம் நகரில் திருவிழிப்பு செபவழிபாடு
6. சூடானில் உள்நாட்டுப் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - அந்நாட்டு ஆயர்
7. சுற்றுலாப் பயணிகளின் ஒழுங்கு முறைகளைத் திட்டமிடும் கோவாத் தலத்திருச்சபை
8. தெருவோரக் குழந்தைகளின் நல்வாழ்வை மையப்படுத்திய ஆப்ரிக்கக் குழந்தைகள் நாள்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. தமிழகத்தின் ஏழு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஜூன் 16,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து உரோம் நகர் வந்துள்ள ஏழு ஆயர்களை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வியாழன் காலை பாளையங்கோட்டை ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ், சிவகங்கை ஆயர் ஜெபமாலை சூசைமாணிக்கம், திருச்சி ஆயர் அன்டனி டிவோட்டா, தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ், தருமபுரி ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ், கும்பகோணம் ஆயர் அன்டனிசாமி பிரான்சிஸ், சேலம் ஆயர் சிங்கராயன் செபஸ்டியானப்பன் ஆகியோரைக் ஒரு குழுவாகச் சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவருடனும் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
2. கோஹிமா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
ஜூன் 16,2011. ஷில்லாங் 'ஓரியன்ஸ் இறையியல் கல்லூரி'யின் முதல்வராய் இருக்கும் அருள்தந்தை ஜேம்ஸ் தோப்பிலை இந்தியாவின் கோஹிமா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்தார்.
கோஹிமா மறைமாவட்டக் குரு ஜேம்ஸ் தோப்பில், 1959ம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் பிறந்தார். உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 2007ம் ஆண்டு முதல் ஷில்லாங் ஓரியன்ஸ் இறையியல் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார்.
குரு தோப்பில் புதிய ஆயராக பொறுப்பேற்க உள்ள கோஹிமா மறைமாவட்டத்தின் 21 இலட்சத்து 54 ஆயிரம் மக்கள் தொகையில் 57 ஆயிரத்து 549 பேர் கத்தோலிக்கர். இம்மறைமாவட்டத்தில் 84 மறைமாவட்டக் குருக்களும், 72 துறவுசபைக் குருக்களும், 324 பெண் துறவியரும் பணியாற்றுகின்றனர்.
3. அகில உலக வர்த்தகக் கருத்தரங்கில் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்தோனே வழங்கிய துவக்க உரை
ஜூன் 16,2011. வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தங்களுக்கும், பிறருக்கும் பயனுள்ள திட்டங்களை, புதிது, புதிதாக கண்டுபிடித்து செயல்படுத்த திறமை பெற்றவர்கள் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
இவ்வியாழனன்று வத்திக்கானில் துவங்கியுள்ள ஒரு அகில உலக வர்த்தகக் கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்தோனே, வர்த்தகம் என்பது அதைத் தாண்டிய மற்ற உண்மைகளுக்கு வழியாக அமைய வேண்டுமேயொழிய, அது தன்னிலேயே முழுமை அடைய முடியாது என்பதை எடுத்துரைத்தார்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், பொது நலனுக்கும் வர்த்தகம் ஒரு முக்கியமான தேவை என்பதை திருச்சபை துவக்கத்திலிருந்தே கூறி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பெர்தோனே, Centesimus Annus மற்றும் Caritas in Veritate ஆகிய சுற்றுமடல்கள் மூலம் திருத்தந்தையர் கூறிவரும் அறிவுரைகளையும் கருத்தரங்கின் அங்கத்தினர்களுக்கு நினைவுபடுத்தினார்.
நன்னெறி இன்றி வர்த்தகத் தலைவர்கள் செயல்பட இயலாது என்பதைக் கூறியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் Caritas in Veritate பற்றி சிறப்பான முறையில் குறிப்பிட்ட கர்தினால் பெர்தோனே, மனசாட்சியுடன் செயல்படும் வர்த்தகத் தலைவர்கள் இன்றைய உலகிற்கு மிகவும் தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சுற்றுச்சூழல் குறித்தும், பூமியின் வளங்கள் குறித்தும் விழிப்புணர்வு வளர்ந்து வரும் வேளையில், இந்த வளங்களையும், சுற்றுச்சூழலையும் அனைத்து உலகத்திற்கும் பயன்படும் வகையில் வர்த்தக உலகம் பயன்படுத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தன் துவக்க உரையில் முன் வைத்தார்.
4. பாகிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரி தலையிட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி
ஜூன் 16,2011. பாகிஸ்தானில் Farah Hatim என்ற கிறிஸ்துவப் பெண்ணை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக அவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும், அவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கவும் நடைபெறும் முயற்சிகளைத் தடுக்க ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரி தலையிட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இப்புதனன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, பாகிஸ்தானில் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டி, மதச் சுதந்திரம் மதிக்கப்படுவது மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா என்பதற்கு சரியான ஒரு உரைகல் என்று கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் பாகிஸ்தானில் 700க்கு மேற்பட்ட இளம் கிறிஸ்தவப் பெண்கள் கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்று வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடத்தப்பட்டுள்ள Farah Hatimன் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு முழு உண்மைகளைத் தெரிந்து கொள்ள பாகிஸ்தான் அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று பேராயர் வற்புறுத்தினார்.
பாகிஸ்தானில் கல்வித் துறை, பொது நலத் துறை இன்னும் பிற அரசுத் துறைகளில் ஊடுருவியிருக்கும் ஊழல் மற்றும் அடிப்படைவாதப் போக்குகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வர ஆர்வம் காட்டாமல் இருப்பதை எடுத்துக் கூறிய பேராயர் தொமாசி, ஊடகங்களின் இந்த அலட்சியப் போக்கால் அந்த நாட்டில் மத நம்பிக்கை கொண்டவர்கள் பல இலட்சம் பேர் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.
ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும், மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் தற்போது உருவாகியுள்ள பல மாற்றங்கள் மனிதர்கள் இன்னும் அதிகச் சுதந்திரமாகவும், மனித மாண்புடனும் வாழ்வதற்கான அறிகுறிகளாய் தெரிகிறதென பேராயர் தொமாசி தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
5. படகுகளில் பாதுகாப்பற்ற பயணம் செய்து உயிரிழந்தோரின் நினைவாக உரோம் நகரில் திருவிழிப்பு செபவழிபாடு
ஜூன் 16,2011. அரசியல் மற்றும் பிற காரணங்களால் பிறந்த நாட்டை விட்டு கடல் வழியே படகுகளில் பாதுகாப்பற்ற பயணம் செய்து உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் நினைவாக இவ்வியாழனன்று உரோம் நகர் தூய மரியா பேராலயத்தில் திருவிழிப்பு செபவழிபாடு நடைபெற்றது.
ஜூன் 20, வருகிற திங்களன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் நாளையொட்டி, இந்தத் திருவிழிப்பு வழிபாட்டினை திருப்பீடத்தின் குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மேய்ப்புப் பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Veglio முன்னின்று நடத்தினார்.
1990ம் ஆண்டு முதல், தகுந்த பாதுகாப்பின்றி படகுகளில் ஐரோப்பியக் கரைகளை அடைய முயன்ற 17597 பேர் கடலில் உயிரிழந்துள்ளனர் என்றும், லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெறும் கலவரங்களால் படகுகளில் தப்பித்துச் சென்றவர்களில் இந்த ஆணடின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 1820 பேர் கடலில் பலியாகியுள்ளனர் என்றும் FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
6. சூடானில் உள்நாட்டுப் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - அந்நாட்டு ஆயர்
ஜூன் 16,2011. சூடானில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஜூலை மாதத் துவக்கத்தில் சூடான் நாடு வடக்கு மற்றும் தெற்கு என்று இரு நாடுகளாகப் பிரிய உள்ள வேளையில், இப்பிரிவு சுமுகமாக நடைபெறுவதை விரும்பாத அமைப்புக்களால் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் நடைபெற்று வரும் மோதல்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன என்றும், இந்த மோதல்களால் 60,000க்கும் அதிகமான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் El Obeid என்ற மறைமாவட்டத்தின் துணை ஆயர் Michael Didi Adgum Mamgoria கூறினார்.
தற்போது நடைபெறும் கலவரங்கள் விரைவில் ஒரு போராக மாறி, பல ஆயிரம் உயிர்களைப் பழிவாங்கும் நிலை ஏற்படும் என்று அப்பகுதியில் பணி புரிந்து வரும் காரித்தாஸ் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.
7. சுற்றுலாப் பயணிகளின் ஒழுங்கு முறைகளைத் திட்டமிடும் கோவாத் தலத்திருச்சபை
ஜூன் 16,2011. சுற்றுலாப் பயணிகளின் உடைகள் குறித்தும் வழிபாட்டுத்தலங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை குறித்தும் இந்துக் கோவில்களில் விதிக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு முறைகளைப் போல் கோவாத் தலத்திருச்சபையும் ஒழுங்கு முறைகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் Bom Jesu என்ற புகழ்பெற்ற பசிலிக்காப் பேராயலத்தில் சுற்றுலாப் பயணிகள் பல நேரங்களில் தகுந்த முறையில் நடந்து கொள்வதில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அப்பேராலய அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ, பேராலயத்தின் புனிதத் தன்மையைக் காப்பதற்கு ஒழுங்கு முறைகளைச் சுமத்த வேண்டியுள்ளது என்று கூறினார்.
கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடுத்த வேண்டிய உடை, புகைப்படங்கள் எடுக்கும் விதிமுறைகள் ஆகியவை குறித்த ஒழுங்கு முறைகளை கோவிலின் பல இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டங்கள் இருப்பதாக அருள்தந்தை பரெட்டோ கூறினார்.
Bom Jesu பசிலிக்கா பேராலயம் இந்தியாவின் தொல்பொருள் பாதுக்காப்புப் பிரிவின் மேற்பார்வையில் இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பது குறித்து பேராலய நிர்வாகிகள் தடைகள் விதிப்பதற்கு அத்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
8. தெருவோரக் குழந்தைகளின் நல்வாழ்வை மையப்படுத்திய ஆப்ரிக்கக் குழந்தைகள் நாள்
ஜூன் 16,2011. "தெருவோரக் குழந்தைகளுக்கு நல்வாழ்வு வழங்க உடனடியானச் செயல்கள்" என்ற மையக்கருத்துடன் இவ்வியாழனன்று ஆப்ரிக்கக் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது.
1976ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் Johannesburg மாநகரின் புறநகர் பகுதியான Sowetoவில் 20,000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள், மற்றும் இளையோர் திரண்டு மேற்கொண்ட போராட்டத்தை அடக்க, தென்னாப்ரிக்க அரசு மேற்கொண்ட வன்முறையில் 176 கொல்லப்பட்டனர். 1990ம் ஆண்டிலிருந்து ஆப்ரிக்காவில் ஜூன் 16ம் தேதி, குழந்தைகள் மற்றும் இளையோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு கொண்டாடப்பட்ட இந்த நாளையொட்டி, தென்னாப்ரிக்கா, ஐவரி கோஸ்ட், செனெகல், டான்சானியா உட்பட பல நாடுகளில் பேரணிகளையும் இன்னும் பிற பொதுநலச் செயல்களையும் ஐ.நா.வின் UNICEF நிறுவனம் ஏற்பாடு செய்தது.
குழந்தைகள் மற்றும் இளையோரின் எதிர்காலம் நலமாக அமைய, குடும்பங்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்பது இந்த ஆண்டின் முக்கிய கருத்தாக இருந்ததென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினருக்கும் மேல் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் என்று கூறும் ஓர் ஐ.நா.வின் அறிக்கை, இந்நாடுகளில் உள்ள இளையோர் வேலையின்மை, உடல் நலம் ஆகிய காரணங்களால் பிற நாடுகளுக்குச் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று கூறுகிறது.
No comments:
Post a Comment