Friday, 24 June 2011

Catholic News - hottest and latest - 23 June 2011

1. ஜப்பானில் Sendai மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்ப ஜப்பான் ஆயர் பேரவை முடிவு

2. கொலம்பியாவில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்து வரும் 5000 பேர் சரண் அடைவதற்கு தலத்திருச்சபையின் உதவி

3. ஒரிஸ்ஸா மாநில அரசின் முடிவால் தலத்திருச்சபை அதிருப்தி

4. பாலஸ்தீன நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் லண்டனில் கல்விப் பயணம்

5. தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கோரி ஜூலை மாதம் உண்ணாநோன்பு

6. உலகம் சந்தித்த பொருளாதாரச் சரிவின்போது, பல நாட்டின் அரசுகள் தகுந்த கவனம் செலுத்தவில்லை - ஐ.நா. அறிக்கை

7. இமயமலை அடிவாரத்தில் மானஸ் வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளன - UNESCO

----------------------------------------------------------------------------------------------------------------

1. ஜப்பானில் Sendai மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்ப ஜப்பான் ஆயர் பேரவை முடிவு

ஜூன் 23,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமியால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் Sendai மறைமாவட்டத்திற்குத் தேவையான உதவிகளை அதிகரிக்கவும், அம்மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்பவும் ஜப்பான் ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்து முடிந்த ஜப்பானிய ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில், Sendai மறைமாவட்டத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 கோடி Yen அதாவது, 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் அனுப்புவதற்கு ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
ஜப்பானில் பிற மறைமாவட்டங்களில் பணிபுரியும் குருக்களையும், துறவறத்தாரையும் Sendai மறைமாவட்டத்திற்கு அனுப்பி, அப்பகுதியைக் கட்டியெழுப்பும் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.


2. கொலம்பியாவில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்து வரும் 5000 பேர் சரண் அடைவதற்கு தலத்திருச்சபையின் உதவி

ஜூன் 23,2011. கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை ஆகியவை உட்பட பல்வேறு குற்றங்களைப் புரிந்து வரும் 5000 பேர் காவல்துறையிடம் சரண் அடைவதற்கு தலத்திருச்சபையின் உதவியை நாடியுள்ளனர்.
மீண்டும் சமுதாயத்தில் இயல்பான வாழ்வை வாழ விரும்பும் இக்குற்றவாளிகளுக்கு எவ்வகையில் உதவ முடியும் என்பதைத் தலத்திருச்சபை ஆய்ந்து வருவதாக Monteria மறைமாவட்ட ஆயர் Julio Cesar Vidal கூறினார்.
நிபந்தனைகள் ஏதுமின்றி இக்குற்றவாளிகள் காவல்துறையிடம் சரண் அடைவதால், அவர்கள் தகுந்த முறையில் நடத்தப்பட்டு, உரிய தண்டனைகள் பெற்றபின் மீண்டும் அவர்கள் புது வாழ்வை மேற்கொள்ளும் வழிகளை கண்டுகொள்ள தலத்திருச்சபை உதவிகள் செய்யும் என்று ஆயர் Vidal மேலும் கூறினார்.
இக்குற்றவாளிகள் சரண் அடைவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றும், இந்த முயற்சி சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டால் உலகமே இந்தச் செயலால் வியக்கும் என்றும், ஆயர் Vidal கூறினார்.


3. ஒரிஸ்ஸா மாநில அரசின் முடிவால் தலத்திருச்சபை அதிருப்தி

ஜூன் 23,2011. தென் கொரிய நாட்டைச் சார்ந்த POSCO என்ற நிறுவனம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் அமைக்கவிருந்த இரும்புத் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தருவதை அந்த மாநில அரசு நிறுத்திவைத்திருப்பது, அரசின் தெளிவான நிலையை உணர்த்தவில்லை  என்று தலத் திருச்சபை அதிகாரிகளும், பிற சமுதாய ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.
ஒரிஸ்ஸாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் POSCO நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் நிலத்தைத் தருவதை அவ்வரசு நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசின் தெளிவான முடிவை வெளிக் கொணரவில்லை என்று பழங்குடியினரிடையே உழைத்து வரும் அருள்தந்தை நிக்கோலஸ் பார்லா கூறினார்.
அண்மையில் அப்பகுதியைப் பார்வையிட்ட ஓர் அரசியல் தலைவரின் வருகையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்றும், இது மக்களுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ள ஒரு நிரந்தரத் தீர்வு அல்லவென்றும் கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்ட சமூகப் பணிக்குழுவின் செயலரான அருள்தந்தை சந்தோஷ் திகால் கூறினார்.


4. பாலஸ்தீன நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் லண்டனில் கல்விப் பயணம்

ஜூன் 23,2011. பாலஸ்தீன நாட்டிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் லண்டனுக்கு ஒரு வாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாலஸ்தீன நாட்டில் இஸ்ரேல் இராணுவத்தால் வீடுகளை இழந்து, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பல மாணவர்கள் இந்த கல்விப் பயணத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
வருகிற சனிக்கிழமை நிறைவு பெறும் இந்தப் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள Camden என்ற நகரும், எருசலேமுக்கு அருகே உள்ள Abu Dis என்ற நகரும் சேர்ந்து நடத்துகின்றன.
லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிடுதல், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியரோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் இந்தப் பயணத்தின்போது இடம் பெற்றன.
வெவ்வேறு கலாச்சாரங்களில் இருந்தும், வெவ்வேறு சூழல்களில் இருந்தும் இளையோர் இவ்விதம் சந்திப்பது, வாழ்வைப் பற்றிய கல்வியைக் கற்பதற்கு இரு தரப்பினருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் Nandita Dawson கூறினார்.
பாதுகாப்பு அதிகம் இன்றி வாழும் இச்சிறுவர்களும், சிறுமியரும் நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்க இந்தப் பயணம் அவர்களுக்கு உதவும் என்று தான் நம்புவதாகவும் Dawson மேலும் கூறினார்.


5. தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கோரி ஜூலை மாதம் உண்ணாநோன்பு

ஜூன் 23,2011. தலித் கிறிஸ்தவர்களுக்கான இந்திய அமைப்புக்கள் ஒருங்கிணைந்து, ஜூலை மாதம் 25 முதல் 27 முடிய நாடு தழுவிய ஓர் உண்ணாநோன்பை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜூலை 28 அன்று புதுடில்லியில் பாராளு மன்றத்திற்கு மாபெரும் ஒரு பேரணியும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகளை தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் இந்திய தலித் கிறிஸ்தவ அமைப்புக்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன. இதுவரை இந்திய அரசிடம் இருந்து தகுந்த பதில் வராததால், இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக இவ்வமைப்புக்கள் இணைந்து  வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதால், தீண்டாமை என்ற கொடிய வழக்கத்திலிருந்து அவர்கள் விடுதலை அடைவதில்லை என்று இந்திய உச்ச நீதி மன்றமே கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர் என்று இந்திய அரசு கூறிவருவது தவறான எண்ணம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள், பல்வேறு தலைவர்கள், கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த மக்கள், இஸ்லாமியர் அனைவரும் இந்த ஜூலை மாத உண்ணாநோன்பு போராட்டத்திலும் பேரணியிலும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.


6. உலகம் சந்தித்த பொருளாதாரச் சரிவின்போது, பல நாட்டின் அரசுகள் தகுந்த கவனம் செலுத்தவில்லை - ஐ.நா. அறிக்கை

ஜூன் 23,2011. உலகம் அண்மையில் சந்தித்த பொருளாதாரச் சரிவின்போது, இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் உருவாக்கிய பல பாதிப்புக்களுக்கு பல நாட்டின் அரசுகள் தகுந்த கவனம் செலுத்தவில்லை என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
அகில உலகின் சமுதாய நிலை என்ற தலைப்பில் 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை பொருளாதாரம் மற்றும் சமுதாய விவகாரங்களுக்கான ஐ.நா.அமைப்பு இப்புதனன்று வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் 2008-2009 ஆண்டுகளில் உண்டான பொருளாதாரச் சரிவு 1930களில் உருவான பொருளாதாரச் சரிவுக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வேலைகளை இழந்தோரின் எண்ணிக்கையே இந்தப் பொருளாதாரச் சரிவினால் உண்டான பெரும் பாதிப்பு என்று கூறும் இவ்வறிக்கை, 2007ம் ஆண்டில் உலகில் வேலையற்றோர் எண்ணிக்கை 17 கோடியே 80 இலட்சமாக இருந்தது என்றும், இப்பொருளாதாரச் சரிவுக்குப் பின், 2009ம் ஆண்டில் 20 கோடியே 5 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது.
வளரும் நாடுகள் பலவற்றில் மக்களுக்குச் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாததால், இந்நாடுகளில் வேலையற்றோர் இன்னும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டால், இன்று உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் உள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.


7. இமயமலை அடிவாரத்தில் மானஸ் வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளன - UNESCO

ஜூன் 23,2011. இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் உள்ள மானஸ் வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளன என்று ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.
இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும்  என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான UNESCO அமைப்பு, 1992ம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியத்திற்கு ஆபத்துள்ள பகுதி என்று அறிவித்தது.
கடந்த ஆண்டுகளில் இப்பகுதியின் பாதுகாப்பிற்காகத் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்தக் காட்டுப் பகுதியை, ஆபத்துள்ள பகுதி என்ற பட்டியலில் இருந்து எடுத்துவிடுவதாக UNESCO நிறுவனம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
இயற்கை வளங்களும், கண்கவரும் இயற்கைக் காட்சிகளும் நிறைந்த மானஸ் வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள், யானைகள், காண்டாமிருகம் ஆகியவை வேட்டையாடப்பட்டு வந்தன என்றும், தற்போது இந்த மிருகங்களுக்கும், அப்பகுதியின் நிலப்பரப்பிற்கும் தேவையான அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறதென்றும் UNESCOவின் அறிக்கை கூறுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...