Thursday, 9 June 2011

Catholic News - hottest and latest - 08 June 2011

1. ஊழல் ஒழிப்பு உண்ணாநோன்பு அரசியலாக்கப்பட்டதைக் குறித்து இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து

2. இந்தியாவில் வரும் பாராளுமன்றக்கூட்டத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை அடக்கும் புதிய சட்டம் விவாதிக்கப்படும்

3. சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு குருக்களும் சமூக நல ஆர்வலர்களும் எதிர்ப்பு

4. பாகிஸ்தானில் கிறிஸ்தவ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் கவலை

5. சிறைபட்டோர் மத்தியில்  பணி செய்யும் கத்தோலிக்கக் குழுவினருடன் இணைந்து பணி செய்ய விழையும் இந்தியக் காவல் துறை அதிகாரி

6. ஆப்கானிஸ்தானில் வாழும் இளையோர் கல்வி பெறுவதைக் கனவாகக் கொண்டுள்ளனர் - இயேசுசபை குரு

7. அகதிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பத் தீர்மானித்த ஆஸ்திரேலிய அரசின் முடிவு சரியல்ல - தலத்திருச்சபை


----------------------------------------------------------------------------------------------------------------

1. ஊழல் ஒழிப்பு உண்ணாநோன்பு அரசியலாக்கப்பட்டதைக் குறித்து இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து

ஜூன் 08,2011. இந்தியாவில் ஊழலை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவும் பாபா இராம்தேவ் மேற்கொண்ட சாகும்வரை உண்ணாநோன்பு, மற்றும் அதைத் தடுப்பதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்து இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள் குரல் எழுப்பியுள்ளன.
இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மக்கள் மீது காவல் துறையினர் காட்டிய வன்முறை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்று என்று டில்லி உயர் மறைமாவட்டப் பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தப் போராட்டம் நடைபெற்ற மேடையில் காவி உடை அணிந்தவர்களே பெரும்பான்மையாய் அமர்ந்திருந்ததைக் கண்டபோது, இந்த இயக்கம் ஒரு நாடு தழுவிய இயக்கமா அல்லது அரசியலும் மதமும் கலந்த இயக்கமா என்ற கேள்வி எழுந்ததென்று பேராயர் மேலும் கூறினார்.
இந்தியாவில் பாராளுமன்றம், நீதி மன்றம் இவைகள் வழியே மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் முறைகள் இருக்கும்போது, அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உண்ணாநோன்பு போராட்டம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
RSS மற்றும் பாரதிய ஜனதா கட்சி இந்த முயற்சிக்கு அளித்த ஆதரவு இந்த உண்ணாநோன்பை அரசியலாக்கும் முயற்சியாகவே காட்டியது என்று கூறினார் இந்திய கிறிஸ்தவ சபைகள் என்ற அமைப்பைச் சார்ந்த சாமுவேல் ஜெயக்குமார்.
இந்த முழு சம்பவத்திலும் அரசியல் அதிகம் கலந்துவிட்டதால், உண்மையான பிரச்சனைகளான ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை பின்தள்ளப்பட்டு விட்டன என்று ஜெயக்குமார் மேலும் கூறினார்.


2. இந்தியாவில் வரும் பாராளுமன்றக்கூட்டத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை அடக்கும் புதிய சட்டம் விவாதிக்கப்படும்

ஜூன் 08,2011. இந்தியாவில் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றக்கூட்டத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை அடக்குவதற்கானச் சட்டம் விவாதிக்கப்படவிருப்பதற்கு இந்து தீவிரவாதக் குழுக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்ட வரைவு நாட்டின் ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளு மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் இதுவரை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் வன்முறைகள் அந்தந்த மாநிலங்களாலேயே அடக்கப்படுவதற்கு அதிகாரங்கள் உள்ளன. இந்த வன்முறைகளின் நேரத்தில் தலையிடவும், அவற்றை நிறுத்தவும் முடிவுகள் எடுக்கும் உரிமைகளை இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டவரைவின் மூலம் மத்திய அரசு பெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிறுபான்மையினரைக் காப்பதற்கு வழி செய்யும் இந்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படுவதையே அனைத்து சிறுபான்மையினரும் வரவேற்கின்றனர் என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கடந்த 50 ஆண்டு வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களும், குஜராத்தில் இஸ்லாமியர்களும் வரம்பு மீறிய வன்முறைகளுக்கு ஆளானதைக் காண முடிகிறதென்று கூறிய அருள்தந்தை பாபு ஜோசப், இந்தச் சட்டத்தின் மூலம் பல அரசியல் குழப்பங்களையும் தாண்டி, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது சிறுபான்மையினருக்கு நம்பிக்கை தரும் ஒரு செயல்பாடு என்று கூறினார்.


3. சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு குருக்களும் சமூக நல ஆர்வலர்களும் எதிர்ப்பு

ஜூன் 08,2011. இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள 14 சிறு தீவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை அங்குள்ள குருக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.
அரசின் இந்த திட்டங்களால் இத்தீவுகளில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 10000 மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று இத்திட்டங்களை எதிர்க்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Kalpitiya சுற்றுலாப் பகுதி என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் உள்ளடங்கியப் பகுதிகளில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் எதிர்காலத்தை எண்ணி பயந்து வாழ்கின்றனர் என்று கத்தோலிக்கக் குரு Sarath Iddamalgoda செய்தியாளர்களிடம் இத்திங்களன்று கூறினார்.
இத்திட்டங்களால் அப்பகுதிகளில் நுழைந்துள்ள பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் பல முயற்சிகளில் இறங்கியுள்ளனர் என்று சமூகநல ஆர்வலர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர்.
1673 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த 14 சிறு தீவுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4. பாகிஸ்தானில் கிறிஸ்தவ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் கவலை

ஜூன் 08,2011. பாகிஸ்தானில் இயங்கி வந்த இரு கிறிஸ்தவ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கராச்சி  மற்றும் லாகூர் ஆகிய இரு உயர்மறைமாவட்டங்கள் நற்செய்தி தொலைக்காட்சி என்ற அலைவரிசைகளை நடத்தி வந்தன. இவ்விரண்டில், கடந்த ஐந்து மாதங்களாய் கராச்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பிரச்சனை மற்றும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளே இந்த அலைவரிசை தொடர்ந்து இயங்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று UCAN செய்தி கூறுகிறது.
2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நற்செய்தி அலைவரிசை நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும், இதனைத் தொடர்ந்து நடத்துவதற்குரிய பொருளாதார வசதிகளும், கேபிள் நிறுவனங்களை நடத்துகிறவர்களின் தொடர்ந்த ஆதரவும் இல்லாததால் இந்த நிலை உருவாகியுள்ளதென்று லாகூரின் முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானா கூறினார்.


5. சிறைபட்டோர் மத்தியில்  பணி செய்யும் கத்தோலிக்கக் குழுவினருடன் இணைந்து பணி செய்ய விழையும் இந்தியக் காவல் துறை அதிகாரி

ஜூன் 08,2011. சிறைபட்டோர் மத்தியில்  பணி செய்யும் கத்தோலிக்கக் குழுவினருடன் தானும் இணைந்து பணி செய்ய விழைவதாக இந்தியாவில் சிறைக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறைபட்டோர் மத்தியில்  பணிபுரிவோர் துணிவோடும் கனிவோடும் மேற்கொள்ளும் முயற்சிகள் தன்னைப் பெரிதும் கவர்ந்துள்ளதென்று குவஹாத்தி மத்தியச் சிறையில் பணிசெய்யும் உயர் காவல் அதிகாரி P.K.Saikia கூறினார்.
இந்தப் பணியாளர்களின் ஆர்வத்தையும் அவர்கள் சிறைபட்டோரிடையே செய்யும் உதவிகளையும் தான் நேரடியாகக் கண்டதால், அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வருவதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் நான்கு முறை வருவதற்கு தான் ஏற்பாடுகள் செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
குவஹாத்தி சிறையில் அடைபட்டிருக்கும் 783 கைதிகளில் உண்மையிலேயே 200 கைதிகள் மட்டுமே உண்மையிலேயே குற்றவாளிகளாய் இருக்கலாம் என்றும், மற்றவர்கள் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் குற்றவாளிகளாய் மாறியுள்ளனர் என்றும் கூறிய அதிகாரி Saika,  சிறைபட்டோர் மத்தியில்  பணிபுரியும் இக்குழுவினரைப் போன்றோரால் கைதிகள் மீண்டும் நல்ல வாழ்வை அமைத்து கொள்ள முடியும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
தான் பணியில் இருந்து ஒய்வு பெற்றதும், இந்தப் பணியாளர்களுடன் இணைந்து உழைப்பதற்கு தன் விருப்பத்தை வெளிப்படுத்திய அதிகாரி Saika, இது போன்று மற்ற மாநிலங்களிலும் இப்பணிக் குழுக்கள் செயல்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.


6. ஆப்கானிஸ்தானில் வாழும் இளையோர் கல்வி பெறுவதைக் கனவாகக் கொண்டுள்ளனர் - இயேசுசபை குரு

ஜூன் 08,2011. ஆப்கானிஸ்தானில் உள்ள இளையோர் தங்கள் நாட்டில் நிலவி வரும் நீண்ட காலப் போரைக் கண்டு சோர்வடைந்துள்ளனர் என்றும், அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த வாழ்வையே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் இயேசு சபைக் குரு ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாய் ஆப்கானிஸ்தானில் பணி புரிந்து வரும் அகதிகளுக்கான இயேசு சபைப் பணியாளர்கள் அந்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்து வருகின்றனர்.
12 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளையோர் ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 68 விழுக்காடு என்றும், உலகிலேயே இளையோர் எண்ணிக்கையில் அதிக விழுக்காடு கொண்டது இந்த நாடே என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வாழும் இளையோர் கல்வி பெறுவதைத் தங்களது கனவாகக் கொண்டுள்ளனர் என்றும், கல்வித்துறையில் பல நாடுகளில் நல்ல பாரம்பரியங்களை இயேசு சபையினர் உருவாக்கியுள்ளதால், இந்த இளையோரின் கனவுகளையும் ஓரளவாகிலும் தங்களால் நிறைவேற்ற முடிகிறதென்றும் இயேசு சபை குரு ஸ்டான் பெர்னாண்டஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள 3 கோடியே, 30 இலட்சம் மக்களில் 10000 மக்களே வன்முறையாளர்கள் என்றும், இவர்களது வன்முறை நடவடிக்கைகளால் இந்த நாடு உலகின் கண்களில் ஒரு வன்முறை நாடாகவே காட்டப்படுவது வேதனைக்குரிய ஒரு விவரம் என்றும் அருள்தந்தை பெர்னாண்டஸ் கூறினார்.
தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த கல்விப் பணியைக் காணும் குழந்தைகளும் இளையோரும் தங்கள் மீது காட்டும் அன்பும் மரியாதையும் பல இன்னல்களுக்கு மத்தியில் இந்தப் பணியைத் தொடர்வதற்கு உந்துதலாக உள்ளதென்று அருள்தந்தை பெர்னாண்டஸ் மேலும் கூறினார்.


7. அகதிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பத் தீர்மானித்த ஆஸ்திரேலிய அரசின் முடிவு சரியல்ல - தலத்திருச்சபை

ஜூன் 08,2011. ஆஸ்திரேலியாவிற்கு வந்த 800 அகதிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ள அந்நாட்டு அரசின் முடிவை ஆஸ்திரேலியத் திருச்சபை வன்மையாய் எதிர்த்துள்ளது.
இந்த முடிவினால் திருப்பி அனுப்பப்படும் அகதிகளில் பலர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என்றும் இவர்கள் திருப்பி அனுப்பப்படுவதால் அவர்கள் வாழ்வு ஆபத்தைச் சந்திக்கும் என்றும், சிட்னி உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
மனித உரிமைகள் பலவகையிலும் பறிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு மீண்டும் அம்மக்களை அனுப்புவது, ஐ.நா. அமைப்பு குழந்தைகள் நலனுக்காக வகுத்துள்ள பல நியதிகளுக்கும் புறம்பானது என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஆஸ்திரேலிய அகதிகள் குழு, Amnesty International, இயேசு சபை அகதிகள் பணிக்குழு, மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புக்களின் சார்பில், Marist Asylum Seekers என்ற அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Jim Carty விடுத்துள்ள இந்த அறிக்கை FIDES செய்தி நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மக்கள் மலேசியாவுக்குத் திரும்பியதும்,  அவர்கள் அனைவருக்கும் சவுக்கடி முதல் கொண்டு பல்வேறு தண்டனைகள் காத்திருக்கின்றன என்று அருள்தந்தை Carty இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...