Wednesday, 15 June 2011

Catholic News - hottest and latest - 14 June 2011


1. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'Ratzinger விருதை' முதன் முறையாகப் பெறுவோரின் விவரங்கள்

2. புதிய நற்செய்தி அறிவித்தல், வீடுகளுக்குள்ளும் இடம்பெறவேண்டும் - கர்தினால் விடுக்கும் அழைப்பு

3. சிரியாவில் வன்முறைகள் களையப்பட்டு ஒப்புரவு இடம்பெற அழைப்பு விடுக்கிறது திருப்பீடம்

4. மக்கள் பிறப்பு விகிதம் குறைந்துள்ள போதிலும், கத்தோலிக்ககளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தென் கொரிய ஆயர் பேரவை மகிழ்ச்சி

5. மத்திய ஆப்ரிக்கக் குடியரசிற்கு சர்வதேச சமுதாயத்தின் அனைத்து விதமான உதவிகளுக்கு ஆயரின் அழைப்பு

6. சிறார்கள் பாலின முறைகேட்டிற்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஆசிய ஆயர்கள் நவம்பரில் விவாதிக்க உள்ளனர்

7. ஈராக்கில் கடத்திச் செல்லப்பட்ட கிறிஸ்தவ இளைஞனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'Ratzinger விருதை' முதன் முறையாகப் பெறுவோரின் விவரங்கள்

ஜூன் 14,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'Ratzinger விருது' முதன் முறையாக இம்மாதம் 30ம் தேதி இறையியல் கல்வி வல்லுனர்கள் மூவருக்குத் திருத்தந்தையால் வழங்கப்பட உள்ளது.
திருத்தந்தையின் பெயரிலான இந்த வத்திக்கான் அமைப்பின் அறிவியல் கழகத்தின் தலைவர் கர்தினால் Camillo Ruini  இந்த விருதைப் பெறவிருப்பவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.
கிறிஸ்தவ வரலாற்றுப் பேராசிரியரான உரோமை நகரைச் சார்ந்த 85 வயது நிரம்பிய Manilo Simonetti, பல இறையியல் நூல்களை எழுதியுள்ள இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 76 வயது குரு Olegario Gonzalez de Cardedal, Cistersian துறவு இல்ல அதிபரும், இறையியலாலருமான 50 வயது நிரம்பிய ஜெர்மானிய குரு Maximilian Heim ஆகியோர் திருத்தந்தைப் பெயரிலான இறையியல் விருதைப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2. புதிய நற்செய்தி அறிவித்தல், வீடுகளுக்குள்ளும் இடம்பெறவேண்டும் - கர்தினால் விடுக்கும் அழைப்பு

ஜூன் 14,2011. புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது தினசரி வாழ்வு நடவடிக்கைகள் போல் சாதாரணமாக இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் அது வீடுகளிலேயே இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் பிரசிலின் சாவபவுலோ பேராயர் கர்தினால் Odilo Scherer.
மத்தியக்கிழக்கு நாடுகள், துருக்கி, ஐரோப்பா என உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம்பெற வேண்டிய புதிய நற்செய்தி அறிவித்தல், வீடுகளுக்குள்ளும் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் அவர்.
நற்செய்தி அறிவிப்பாளர்கள் நம் குடும்பங்களுக்குள்ளேயே உள்ளார்கள் என்ற கர்தினால் Scherer, நற்செய்தி என்பது நமக்கு மட்டும் நன்மை தரும் சலுகை அல்ல, மாறாக உலகமனைத்திற்கும் நன்மையைக் கொணரவல்ல ஒன்று என மேலும் கூறினார்.
உலகமெங்கும் சென்று அனைத்துப் படைப்புகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையை நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு ஊக்கமளிக்கும் திருப்பீட அவையின் அங்கத்தினரான பிரசில் கர்தினால்  Scherer.


3. சிரியாவில் வன்முறைகள் களையப்பட்டு ஒப்புரவு இடம்பெற அழைப்பு விடுக்கிறது திருப்பீடம்

ஜூன் 14,2011. சிரியாவில் வன்முறைகள் தொடர்வதால், பேச்சுவார்த்தைகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதுபோலத் தோன்றினாலும், அந்நாட்டில் பேச்சுவார்த்தைகள், ஒப்புரவு மற்றும் அமைதி இடம்பெறவேண்டும் என திருப்பீடம் நம்பிக்கையுடன் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருவதாக அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
உயரிய ஒரு நாகரீகத்தைப் பெறும் நோக்கில், சிரியாவில் விடப்பட்ட அழைப்புகள் வன்முறையைத் தூண்டியுள்ளதுடன், மதங்களுக்கிடையேயான உரசல்களையும் நாட்டின் நிலையான தன்மைக்கு ஆபத்தையும் கொணரும் அச்சம் உள்ளது என்றார் குரு லொம்பார்தி.
வன்முறைகளைக் கைவிடவும், கருத்துச் சுதந்திரத்தையும், சுதந்திரப் பங்ககேற்பையும் அனுமதிக்கவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் சிரியாவின் அனைத்துத் தரப்பினருக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் எனவும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.
ஒரு நாட்டின் நிலையானத்தன்மை அசைக்கப்படுவதும், நாட்டை விட்டு வெளியேற மக்கள் தள்ளப்படுவதும் தடைச்செய்யப்படவேண்டும் என மேலும் அழைப்பு விடுத்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு லொம்பார்தி.


4. மக்கள் பிறப்பு விகிதம் குறைந்துள்ள போதிலும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தென் கொரிய ஆயர் பேரவை மகிழ்ச்சி

ஜூன் 14,2011. தென் கொரியாவில் மக்கள் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், மொத்தத்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருவதாக அந்நாட்டு ஆயர் பேரவை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவில் அண்மைக் காலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கவலையை வெளியிட்ட ஆயர்கள், இருந்தபோதிலும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த பத்தாண்டுகளின் தென் கொரியாவில் 9 இலட்சத்து 80 ஆயிரம் பேர் திருமுழுக்கு பெற்றுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட 23 விழுக்காடு அதிகம் எனவும் தென் கோரிய ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையில் 10.1 விழுக்காட்டினரே கத்தோலிக்கர்.


5. மத்திய ஆப்ரிக்கக் குடியரசிற்கு சர்வதேச சமுதாயத்தின் அனைத்து விதமான உதவிகளுக்கு ஆயரின் அழைப்பு

ஜூன் 14,2011. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் பாதுகாப்பற்ற நிலைகள் அதிகரித்து வருவதை எதிர்கொள்ள, சர்வதேச சமுதாயத்தின் அனைத்து விதமான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலவி வரும் பாதுகாப்பற்ற நிலைகளால் மக்கள் ஏமாற்றத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் அமைதியைச் சீர்குலைத்து வரும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் தண்டனைப் பயமின்றி செயல்படுவதாகவும் கூறினார் அந்நாட்டின் Kaga-Bandoro பேராயர் Albert Vanbuel.


6. சிறார்கள் பாலின முறைகேட்டிற்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஆசிய ஆயர்கள் நவம்பரில் விவாதிக்க உள்ளனர்

ஜூன் 14,2011. குருக்களால் பாலின முறைகேட்டிற்கு சிறார்கள் உள்ளாக்கப்பட்டது குறித்து உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தொடர்ந்து, ஆசிய திருச்சபைத் தலைவர்களும் இது குறித்து கூடி விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலின நடவடிக்கை விவகாரம் குறித்து அனைத்து ஆயர்களும் விவாதித்து, வரும் ஆண்டு மே மாதத்திற்குள் வழிகாட்டுதல் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான FABC வரும் நவம்பர் 14 முதல் 19 வரை பாங்காக்கில் கூடி விவாதிக்க உள்ளது.


7. ஈராக்கில் கடத்திச் செல்லப்பட்ட கிறிஸ்தவ இளைஞனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது

ஜூன் 14,2011. கடந்த வாரம் ஈராக்கில் கடத்திச் செல்லப்பட்ட 29 வயது கிறிஸ்தவ இளைஞனின் தலை துண்டிக்கப்பட்ட உடல் இத்திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்தவ இளைஞர் Ashur Yacob Issa கடந்த வார இறுதியில் கடத்திச் செல்லப்பட்டு, கடத்தல்காரர்களால் 70 ஆயிரம் டாலர் பிணையத் தொகை கேட்கப்பட்டது. அவரது குடும்பம் அவ்வளவு பெரியத் தொகையைக் கொடுக்க முடியாத நிலையில், Issaவின் தலை வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கிறிஸ்தவ இளைஞரின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஈராக் பேராயர் Luis Sako, எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும், ஈராக் நாட்டில் தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் யாரும் இஸ்லாமிய மறைக்கு மாறியதில்லை என்பது அந்நாட்டில் நிலவும் கத்தோலிக்க விசுவாசத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என்றார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கைக்காக கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...