1. தமிழகத்தின் ஆறு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
2. நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் திருத்தந்தை சந்திப்பார்
3. கோவிலில் Gaddafiயை மறைத்து வைத்திருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது - ஆயர் மார்தினெல்லி
4. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரிய சிறப்புச் சலுகைகளை அரசு தருவதற்கு தடை செய்யும் அரசியல் கட்சி
5. வங்காள அரசுக்கும் கூர்க்கா அமைப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நம்பிக்கையை விதைத்துள்ளது - தலத்திருச்சபை
6. ஓவியர் M F Hussain மரணம் குறித்து இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் அனுதாபங்கள்
7. உலகில் இன்று நூறு கோடிக்கும் அதிகமானோர் எதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் - ஐ.நா. அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. தமிழகத்தின் ஆறு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஜூன் 10,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து உரோம் நகர் வந்துள்ள ஆறு ஆயர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வெள்ளி காலை செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அந்தோணிசாமி, கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸ், உதகமண்டல ஆயர் அமல்ராஜ் அருளப்பன், வேலூர் ஆயர் சவுந்தரராஜ் பெரியநாயகம், திண்டுக்கல் ஆயர் அன்டனி பாப்புசாமி மற்றும் கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோரைக் ஒரு குழுவாகச் சந்தித்து, அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
இதே நாளில் திருப்பீடப் பணிகளுக்கானக் கல்விக் கழகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து திருப்பீடத்தின் பிற நாடுகளுடனான உறவுகள் குறித்த உரை ஒன்றையும் திருத்தந்தை வழங்கினார்.
2. நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் திருத்தந்தை சந்திப்பார்
ஜூன் 10,2011. ‘உரோமா’ என்று அழைக்கப்படும் நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களின் 1400 பிரதிநிதிகள் இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் உரோமையில் கூடி வருவர் என்றும், இவர்களை இச்சனிக்கிழமை மதியம் திருப்பீடத்தில் திருத்தந்தை சந்திப்பார் என்றும் வத்திக்கான் செய்தி ஒன்று கூறுகிறது.
தூய ஆவியாரின் திருநாள் அன்று திருச்சபை உலகளாவிய வகையில் உருவாக்கப்பட்டது என்பதற்கு இவர்களின் பிரசன்னமும் ஓர் அடையாளம் என்றும், இத்திருநாளையொட்டி நாடோடி இனத்தின் பிரதிநிதிகள் திருத்தந்தையைச் சந்திப்பது மிகவும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சி என்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிகளின் இயக்குனர் அருள்தந்தை Giancarlo Perego கூறினார்.
பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களைத் தாங்கி வாழும் நாடோடி இனத்தவர் இன்று உலகில் 3 கோடியே 60 இலட்சம் மக்கள் என்றும், இவர்களில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் ஐரோப்பாவில் வாழ்கின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாடோடி மக்களின் விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய அருளாளர் Zeffirino Gimenez Malla பிறந்து 150 ஆண்டுகளும், அவர் மறைசாட்சியாக இறந்து 75 ஆண்டுகளும் இந்த ஆண்டு நிறைவேறுவதையொட்டி இவ்விரு நாட்களின் கொண்டாட்டங்கள் அமையும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
3. கோவிலில் Gaddafiயை மறைத்து வைத்திருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது - ஆயர் மார்தினெல்லி
ஜூன் 10,2011. லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiயை, கோவிலில் மறைத்து வைத்திருப்பதாக ஊடகங்கள் பொறுப்பின்றி வெளியிட்டிருக்கும் செய்திகள் குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli.
ஊடங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் மீது குறைந்து வரும் மதிப்பைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஆயர் மார்தினெல்லி, NATO நாடுகள் கூறிய கெடுவையும் தாண்டி இந்தப் போர் நீடிக்கும் ஆபத்து உள்ளதென்று எடுத்துரைத்தார்.
சென்ற பல மாதங்களாய் லிபியாவில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போர் குறித்து தன் கவலைகளையும் விண்ணப்பங்களையும் கூறி வரும் ஆயர் மார்தினெல்லி, அண்மையில் இத்தாலிய ஊடகங்கள் லிபியப் போர் குறித்து பொறுப்பின்றி வெளியிட்டுள்ள செய்திகளைக் குறித்தும், தன்னைப் பற்றிய தவறானச் செய்தியை வெளியிட்டமை குறித்தும் தன் வருத்தங்களைத் தெரிவித்தார்.
அரசியல் பேச்சுவார்த்தைகளே இந்தப் போரை நிறுத்தும் ஒரே வழி என்பதை, தான் பல முறை கூறியும், அவைகளுக்குச் சிறிதும் செவி கொடுக்காமல், படை பலத்தால் தீர்வு காண முயல்வது அப்பாவிப் பொதுமக்களை மிக அதிகமாக, ஆழமாகப் பாதித்துள்ளதென்று ஆயர் வலியுறுத்திக் கூறினார்.
4. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரிய சிறப்புச் சலுகைகளை அரசு தருவதற்கு தடை செய்யும் அரசியல் கட்சி
ஜூன் 10,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரிய சிறப்புச் சலுகைகளை அரசு தருவதற்கு இந்துமத ஆதரவு காட்டும் அரசியல் கட்சி ஒன்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதை இந்தியத் திருச்சபை குறை கூறியுள்ளது.
தலித் கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளைத் தடுத்து வரும் இந்த அடிப்படை வாதக் குழுக்களின் போக்கு தங்களுக்கு ஒன்றும் புதிய அனுபவம் அல்ல என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Cosomon Arokiaraj கூறினார்.
இந்தச் சிறப்புச் சலுகைகளைக் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கொடுத்தால், இதுவரை இந்தச் சலுகைகளைப் பெற்று வந்த இந்துக்கள், சீக்கியர் மற்றும் புத்தர்கள் பாதிக்கப்படுவர் என்ற காரணத்தைக் காட்டி பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இடம் தங்கள் மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்துத்துவ அடிப்படைவாதத்தில் தோய்ந்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் இந்த மறுப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை ஆரோக்கியராஜ், கடந்த அறுபது ஆண்டுகளாய் இந்தியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டம் இன்னும் தொடரும் என்று கூறினார்.
5. வங்காள அரசுக்கும் கூர்க்கா அமைப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நம்பிக்கையை விதைத்துள்ளது - தலத்திருச்சபை
ஜூன் 10,2011. இந்தியாவில் வங்காள அரசுக்கும் கூர்க்கா அமைப்பினருக்கும் இடையே இச்செவ்வாயன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அப்பகுதியில் புதியதொரு நம்பிக்கையை விதைத்துள்ளதென்று தலத்திருச்சபை கூறியுள்ளது.
டார்ஜீலிங் மலைப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாய் அமைதியைக் குலைத்து வரும் பல பிரச்சனைகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று தான் நம்புவதாக டார்ஜீலிங் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளரான அருள்தந்தை Alexander Gurung கூறினார்.
34 ஆண்டுகளாய் வங்காளத்தை ஆட்சி செய்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்தலில் வென்று முதலமைச்சராய் பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, பதவியேற்ற 17 நாட்களில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சுற்றுலாவுக்கென புகழ் பெற்றிருந்த டார்ஜீலிங் கடந்த பல ஆண்டுகளாய் அமைதி குலைந்து இருந்ததால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலையும் சரிந்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Gurung, இனியாகிலும் சுயநலத்தில் நாட்டம் கொண்ட அரசியல்வாதிகளால் தங்கள் பகுதி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
டார்ஜீலிங் பகுதியில் பெரும்பான்மையினராய் இருக்கும் கூர்க்கா அமைப்பினர் தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று 2007ம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
6. ஓவியர் M F Hussain மரணம் குறித்து இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் அனுதாபங்கள்
ஜூன் 10,2011. இவ்வியாழன் அதிகாலையில் இலண்டன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் புகழ்பெற்ற ஓவியர் M F Hussain மரணமடைந்ததைக் குறித்து இந்திய கத்தோலிக்கத் திருச்சபையும், இன்னும் பிற ஓவியர்களும் தங்கள் அதிர்ச்சியையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிறந்து, தன் ஓவியங்களால் உலகப் புகழும், பல நேரங்களில் கண்டனங்களும் பெற்ற ஓவியர் Maqbool Fida Hussain, இந்தியாவின் தலை சிறந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் என்ற விருதைப் பெற்றவர்.
‘இந்தியாவின் பிகாசோ’ என்று அழைக்கப்பட்ட இவரது ஒரு சில ஓவியங்கள் இந்து மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதால், இவர் எதிர்ப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, இவர் தன் இறுதி நாட்களை Qatar நாட்டில் செலவிட்டார். இவர் இலண்டனில் இவ்வியாழன் காலையில் தன் 95வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
அதிகப் புகழும் முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட ஒரு தலைசிறந்த ஓவியரை இந்தியா இழந்துவிட்டதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
Hussain தன் ஓவியங்களால் பலரைக் கவர்ந்தவர் என்று கூறிய மனித உரிமை ஆர்வலரான இயேசு சபைக் குரு Cedric Prakash, இவர் தன் இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ முடியாமல் போனது நம் நாடு மத சார்பற்ற நாடு என்பதற்கு ஒரு பெரும் களங்கமாய் உள்ளதென்று கூறினார்.
7. உலகில் இன்று நூறு கோடிக்கும் அதிகமானோர் எதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் - ஐ.நா. அறிக்கை
ஜூன் 10,2011. உலகில் இன்று நூறு கோடிக்கும் அதிகமானோர் எதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்று ஐ.நா.வும் உலக வங்கியும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறையுள்ளவர்களை சமுதாயம் புறக்கணிக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கும் கடமை மனித சமுதாயத்திற்கு உள்ளதென்று இவ்விரு நிறுவனங்களும் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளன.
ஐ.நா.வின் உலக நல வாழ்வு நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவைகளைச் சார்ந்த 380 ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளை சமுதாய வாழ்வின் அங்கமாக ஒருங்கிணைப்பதில் ஒவ்வொரு அரசும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகில் பிறந்த அனைவரும் வாழ்வின் எதோ ஒரு காலக்கட்டத்தில் குறைகளைச் சந்திக்கிறோம் என்றும், இந்தக் குறைகளால் ஒரு சிலர் தற்காலிகமாகவும், வேறு சிலர் நிரந்தரமாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் உலக நல வாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan கூறினார்.
குறையுள்ளவர்களுக்கு சமுதாயம் உருவாக்கும் பல தடைகளே இந்தக் குறைகளை இன்னும் ஆழப்படுத்தும் ஒரு வழியாகிறதென்றும் இத்தடைகளால் மாற்றுத் திறனாளிகளின் குறைகள் இன்னும் ஆழப்படுகிறதேயன்றி குறைக்கப்படுவதில்லை என்று ஐ.நா.வின் மற்றொரு உயர் அதிகாரி Etienne Krug கூறினார்.
உலகின் 150 நாடுகளே மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து சட்டங்கள் இயற்ற ஒப்புதல் தந்துள்ளன என்றும், இவற்றில் 100 நாடுகளே தற்போது இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment