Wednesday 29 June 2011

Catholic News - hottest and latest - 25 June 2011

1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு

2. Knights of Malta வின்  பெருந்தலைவர்,  திருத்தந்தை சந்திப்பு

3. கடல்சார்ந்த தொழில் செய்வோரின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதி வழங்க வேண்டும், திருப்பீடம் அழைப்பு

4. நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்படவிருக்கின்றார்கள்

5. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டும், இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் வலியுறுத்தல்

6. தென் சூடானில் அமைதி நிலவ வேண்டுமென்று பல்வேறு சமயத்தினர் இணைந்து செபத்தினர்

7. இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவர அரசியல்வாதிகள் அச்சம், குறைகூறுகிறது ஒரு நிருபர் குழு

8. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

----------------------------------------------------------------------------------------------------------------

1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு

ஜூன்25,2011. விசுவாசமாக இருத்தல் என்ற நல்ல விழுமியத்தை இழந்த ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளை, இந்த விழுமியமானது இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகத்தின் சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகத்தினர் தங்கள் வாழ்க்கையில் இந்த விழுமியத்தைக் கடைபிடித்து வாழுமாறு கேட்டுக் கொண்டார்.
கடவுள் வாக்குமாறாதவர், விசுவாசமானவர் என்று விவிலியம் குறிப்பிடுகிறது, எனவே, கடவுளின் அருள் மற்றும் அன்னைமரியின் உதவியுடன், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பிரமாணிக்கமாக வாழுமாறு இக்கழகத்தினருக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இக்கழகத்தினர் வத்திக்கானில் செய்து வரும் தன்னார்வப் பணிகளையும் பாராட்டிப் பேசிய அவர், ஒருவர் பிறர் செபம் செய்வதற்கு உதவ வேண்டுமானால் முதலில் அவரது இதயம் கடவுள் பக்கமாய் இருக்க வேண்டும் மற்றும் புனித இடங்களையும் புனிதப் பொருட்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகமானது திருத்தந்தை ஆறாம் பவுலால் 1971ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதில் உரோம் நகரின் கத்தோலிக்கர் உறுப்பினர்களாக உள்ளனர். 1850ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் உருவாக்கிய பாப்பிறை இராணுவ அமைப்புகள் உட்பட வத்திக்கானில் இயங்கி வந்த பல்வேறு பாப்பிறைப் பாதுகாப்பு அமைப்புக்களை 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கலைத்தத் திருத்தந்தை ஆறாம் பவுல்,  தூயவர்கள் பேதுரு, பவுல் கழகம் என்ற புதிய குழுவில் சேருமாறு அவ்வமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தார். இப்புதிய அமைப்பு, திருப்பீடத்துக்குத் தங்களது வரையறையற்ற விசுவாசத்தை வெளிப்படுத்த விரும்பும் உரோம் கத்தோலிக்கருக்காக உருவாக்கப்பட்டது. 

2. Knights of Malta வின்  பெருந்தலைவர்,  திருத்தந்தை சந்திப்பு

ஜூன்25,2011. Knights of Malta என்றழைக்கப்படும் கத்தோலிக்க பக்த அமைப்பின் பெருந்தலைவர் Frà Matthew Festing தலைமையிலான உயர்மட்ட குழுவையும் இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.
1048ம் ஆண்டுவாக்கில் எருசலேமில் தோன்றிய இந்தப் பழமையான கத்தோலிக்க அமைப்பின் தலைமையகம் 1834ம் ஆண்டிலிருந்து உரோமையில் உள்ளது. இதில் தற்சமயம் ஐந்து கண்டங்களிலிருந்தும் 13 ஆயிரம் உறுப்பினர்களும் 80 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களும் உள்ளனர். 120 நாடுகளில் பணியாற்றும் இவ்வமைப்பு, திருப்பீடம் உட்பட 104 நாடுகளுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது. இதில் மருத்துவர்கள், தாதியர்கள், பிற மருத்துவத்துறைப் பணியாளர்கள் என இருபதாயிரம் பேர் உள்ளனர்.  

3. கடல்சார்ந்த தொழில் செய்வோரின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதி வழங்க வேண்டும், திருப்பீடம் அழைப்பு

ஜூன்25,2011. கடல்சார்ந்தத் தொழில் செய்வோரின் நல்வாழ்வுக்கு உறுதி வழங்கும் விதத்தில் அவர்களுக்கானத் தற்காப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படுமாறு திருப்பீடம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வருகிற ஜூலை 10ம் தேதி ஞாயிறன்று அனைத்துலக கடல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவை, இக்காலத்தில் கடல்சார்ந்தத் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடற்கொள்ளையர்கள் குறித்தத் தனது அண்மை அறிக்கை பற்றியும் குறிப்பிட்டுள்ள அத்திருப்பீட அவை, இத்தொழிலாளிகள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது மட்டுமே அவர்கள் உலகுக்கு அறியப்படுகிறார்கள் என்றும் கூறியது.
இவர்கள் அரசுகளோடும், சர்வதேச நிறுவனங்களோடும் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையானது 1920ம் ஆண்டு முதல் இத் இத்தொழிலாளிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றி வருகின்றது.
கடல்சார் தொழிலாளிகளுக்கான மேயப்புப்பணி அவை, அடுத்த ஆண்டு நவம்பர் 19 முதல் 23 வரை உரோமையில் 23வது உலக மாநாட்டை நடத்தவிருப்பதையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது
தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் சுமார் 15 இலட்சம் பேர் கடல்சார் தொழிலாளிகள் பணியில் உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உலகளாவிய வணிகத்தில் 90 விழுக்காட்டுப் போக்குவரத்தைச் செய்து உலகப் பொருளாதாரத்திற்கு நற்சேவை செய்கின்றனர். 
இச்செய்தியில் அவ்வவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò மற்றும் செயலர்                                                                  ஆயர் Joseph Kalathiparambi கையெழுத்திட்டுள்ளனர்.

4. நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்படவிருக்கின்றார்கள்

ஜூன்25,2011. 1943ம் ஆண்டில் நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் இஞ்ஞாயிறன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்றார்கள்.
மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட Johannes Prassek, Hermann Lange, Eduard Muller ஆகிய மூன்று குருக்களுடன் லூத்தரன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த போதகர் Karl Friedrich Stellbrink  என்பவரும் கொல்லப்பட்டார்.
திருத்தந்தையின் பெயரில் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, அருளாளர் நிலைக்கு உயர்த்தும் இத்திருப்பலியை நிகழ்த்துவார். 

5. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டும், இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் வலியுறுத்தல்

ஜூன்25,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனிதர் என அறிவிக்கப்படும் போது அவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென ஓர் இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் கேட்டுள்ளது
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், புதிய தொழிற்நுட்பங்களுக்கு விவேகத்துடனும் தைரியத்துடனும் திறந்த மனது காட்டினார் என்று கூறி, இவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென உரோம் நிருபர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது 26 வருட பாப்பிறைப் பணியின் போது ஊடகத்துறையினரோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார் எனவும் இவர் போல் எந்தத் திருத்தந்தையும் இத்தகைய உறவை வைத்திருந்ததில்லை எனவும் உரோம் நிருபர் கழகத் தலைவர் ரொமானோ பர்த்தோலோனி கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், கடந்த மே ஒன்றாந்தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதுவே அவர் வரலாற்றில் பிரபலமானத் திருத்தந்தையாக இருந்தார் என்பதைக் காட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தனது 84வது வயதில் இறைபதம் அடைந்தார். அவர் 1978ம் ஆண்டு பாப்பிறையான அக்டோபர் 22ம் தேதியை அவரது திருவிழா நாளாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

6. தென் சூடானில் அமைதி நிலவ வேண்டுமென்று பல்வேறு சமயத்தினர் இணைந்து செபத்தினர்

ஜூன்25,2011. ஜூலை 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தனிநாடாக மாறவிருக்கின்ற தென் சூடானில் பல்வேறு இன மற்றும் மதங்களின் மத்தியில் அமைதி நிலவ வேண்டுமென்று அப்பகுதியின் 13 கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் முஸ்லீம் சமூகத்தினரும் இணைந்து செபித்தனர்.
பன்மைத்தன்மை வலிமையின் ஊற்றாக இருக்கவேண்டுமேயொழிய மோதல்களுக்குக் காரணமாக அமையக் கூடாது என்று கொம்போனி மறைபோதக அருட்பணியாளர் ஹோசே வியெய்ரா கூறினார்.
சூடானில் 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை இடம் பெற்ற உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட தரப்பினர் உரையாடல் மூலம் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றும் அருட்பணியாளர் வியெய்ரா கருத்து தெரிவித்தார்.

7. இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவர அரசியல்வாதிகள் அச்சம், குறைகூறுகிறது ஒரு நிருபர் குழு

ஜூன்25,2011. இலங்கையில் தகவல் அறியும் உரிமை மசோதா கொண்டுவரப்படுவதற்கு அரசியல்வாதிகள் அச்சம் அடைந்தாலும் அது கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்று CRCMO என்ற குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஊடக நிறுவனம் அறிவித்தது.
தெற்கு ஆசியாவில், தகவல் அறியும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படாத ஒரே நாடு இலங்கை என்று குறிப்பிட்ட அந்நிறுவனம், உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே இச்சட்டம் அமலில் இருக்கின்றது என்றும் கூறியது.
எல்லா அரசு நிறுவனங்களும் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளன என்பதை உணர்த்தும் ஓர் அரசியல் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்தில், இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி விழிப்புணர்வு நாளைக் கடைபிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக CRCMO நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்கிடையே, இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சியால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இம்மசோதா குறித்து இடம் பெற்ற வாக்கெடுப்பில் அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

8. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

ஜூன்25,2011. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவுலின் நீராமாசுஹூக்கோவுக்கு இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.
பவுலினுக்கு எதிரான வழக்கு 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவொன்று, இந்த தீர்ப்பை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கு முடிவில், 65 வயதான பவுலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1994ம் ஆண்டு ருவாண்டாவில் இடம் பெற்ற இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் பேர் கொலை செய்யப்பட்டனர்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...