Friday, 26 April 2013

Catholic News in Tamil - 25/04/13


1. கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளை விட, வாழ்வால் கிறிஸ்துவை பறைசாற்ற வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

2. இத்தாலிய அரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி மூலம் தொடர்பு

3. பிரேசில் செல்லும் பயணம் ஒன்றே இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணமாக இருக்கும்

4. நம்பிக்கை ஆண்டின் இரு முக்கிய நிகழ்வுகள், வருகிற இரு ஞாயிறுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும்

5. புலம்பெயரும் மக்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அதிகமாக உழைக்கின்றனர் - பேராயர் சுள்ளிக்காட்

6. பிலிப்பின்ஸ் அரசு, மக்களுக்குத் தகுந்த அரசாக இயங்கவில்லை - அந்நாட்டின் துறவியர் அமைப்பு

7. புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் அமைதி உடன்பாடு

8. ஆசியா-பசிபிக் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவது 13.4 மடங்கு உயர்ந்துள்ளது - ஐ.நா. அறிக்கை


------------------------------------------------------------------------------------------------------
1. கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளை விட, வாழ்வால் கிறிஸ்துவை பறைசாற்ற வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்.25,2013. கிறிஸ்தவர்கள் தாழ்ச்சியுடன் செயல்படும் அதே வேளையில், பெரும் செயல்களாற்ற தயங்கக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 25, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட நற்செய்தியாளர் புனித மாற்கு திருநாள் திருப்பலியை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, இயேசுவின் துணையுடன் திருத்தூதர்கள் உலகின் எல்லைகளுக்குச் செல்ல பணிக்கப்பட்டனர் என்ற நற்செய்தியை மையமாகக்கொண்டு தன் மறையுரையை வழங்கினார்.
ஆயர்களின் சிறப்பு அவைகளை ஏற்பாடு செய்யும் திருப்பீட அலுவலகத்தின் தலைமைச் செயலர் பேராயர் Nikola Eterovic தலைமையில் இயங்கும் அலுவலகப் பணியாளர்களும், வத்திக்கான் காவல் துறையினரும் கலந்துகொண்ட இத்திருப்பலியில், கிறிஸ்துவை உலகெங்கும் எடுத்துச்செல்ல கிறிஸ்தவர்கள் தயங்கக்கூடாது என்று திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளை விட, வாழ்வால் கிறிஸ்துவை பறைசாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களிடம் தாழ்ச்சியுடன், துணிவும் இணைந்து செயலாற்றவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஆழமான ஆர்வத்துடனும், தாழ்ச்சியுடனும் கிறிஸ்துவை உலகின் பல திசைகளுக்கு எடுத்துச்சென்ற திருத்தூதர்களைப் போல நாமும் செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இத்தாலிய அரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி மூலம் தொடர்பு

ஏப்.25,2013. பிளவுகளை விட ஒருமைப்பாடு உயர்ந்தது என்பதை உணர்த்தும் உங்கள் முடிவை நான் பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களிடம் கூறினார்.
இப்புதன் மாலை 6 மணியளவில் இத்தாலிய அரசுத் தலைவர் அவர்களை, தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நாம விழாவான புனித ஜார்ஜ் திருநாளன்று அரசுத் தலைவர் அனுப்பியிருந்த வாழ்த்துத் தந்திக்கு நன்றி தெரிவித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் Napolitano அவர்கள் தனக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்பதைக் கூறியத் திருத்தந்தை, உறுதியற்ற நிலையில் அமைந்துள்ள இத்தாலிய அரசின் அரசுத் தலைவராக Napolitano மீண்டும் பொறுப்பேற்றிருப்பதற்குத் தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இவ்வியாழனன்று கொண்டாடப்படும் இத்தாலிய விடுதலை நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள Twitter செய்தியில், பிரச்சனைகள் நிறைந்த இந்நேரத்தில், எண்ணங்களை மூடிவிடாமல், பிறரது கருத்துக்களைக் கவனமாகக் கேட்க மனதைத் திறப்போம் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பிரேசில் செல்லும் பயணம் ஒன்றே இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணமாக இருக்கும்

ஏப்.25,2013. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லும் பயணம் ஒன்றே இவ்வாண்டில் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணமாக இருக்கும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi கூறினார்.
இப்புதன் மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி Lombardi அவர்கள், ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறு எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் தற்போது திட்டமிடவில்லை என்று கூறினார்.
நம்பிக்கை ஆண்டையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட எண்ணியிருந்த சுற்றுமடலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றும் அருள்  தந்தை Lombardi கூறினார்.
தற்போது திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவில் தங்கியுள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது, அடுத்த மாதத் துவக்கத்தில் வத்திக்கானுக்குள் அமைந்துள்ள Mater Ecclesiae இல்லத்தில் தங்குவார் என்றும் அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நம்பிக்கை ஆண்டின் இரு முக்கிய நிகழ்வுகள், வருகிற இரு ஞாயிறுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும்

ஏப்.25,2013. ஏப்ரல் 28, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 44 இளையோருக்கு உறுதி பூசுதல் வழங்குவார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் இரண்டு, வருகிற இரு ஞாயிறுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் என்று புதிய நற்செய்திப் பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 27, 28 ஆகிய இருநாட்கள் நடைபெறும் நிகழ்வுகள் இவ்வாண்டு உறுதிப்பூசுதல் பெற்றுள்ள, அல்லது பெறவிருக்கும் இளையோரை மையப்படுத்தியது என்று எடுத்துரைத்த பேராயர் Fisichella, இந்நிகழ்வுகளில்  கலந்துகொள்ள இதுவரை 70,000 இளையோர் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர் என்று கூறினார்.
ஏப்ரல் 27, சனிக்கிழமையன்று, இவ்விளையோர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பி, கத்தோலிக்க விசுவாசத்தின் அடித்தளமாக விளங்கும் புனித பேதுரு கல்லறையை அடைந்து அங்கு செபத்தில் ஈடுபடுவர் என்று பேராயர் Fisichella விளக்கினார்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவையில் பின்பற்றப்படும் பல பக்திமுயற்சிகளின் அமைப்பினர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் மேமாதம் 3, 4 தேதிகளில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடைபெறும் என்றும், திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள இதுவரை 50,000க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்றும் பேராயர் Fisichella செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. புலம்பெயரும் மக்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அதிகமாக உழைக்கின்றனர் - பேராயர் சுள்ளிக்காட்

ஏப்.25,2013. உலகமயமாக்கப்பட்டப் பொருளாதாரம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனிதர்களை ஒருங்கிணைக்கும் அதேநேரம், பொருளாதார மற்றும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் மனித குலத்தில் ஆழமான பிரிவுகளையும் உருவாக்கி வந்துள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்கள்தொகையும், முன்னேற்றமும் என்ற மையக்கருத்துடன் ஐ.நா.வின் தலைமையகத்தில் இப்புதனன்று நடைபெற்ற 46வது பொது அமர்வில், திருப்பீடத்தின் நிரந்தப் பார்வையாளராக ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் இவ்வாறு கூறினார்.
மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுள்ளிக்காட், புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்களும், முக்கியமாக, பெண்களும் சந்திக்கும் பிரச்சனைகளை, சிறப்பாக எடுத்துரைத்தார்.
உலகின் கண்களில் முக்கியமில்லாதவர்களாக வாழும் இம்மக்களைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் குருத்து ஞாயிறன்று தன் மறையுரையில் கூறியதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுள்ளிக்காட், புலம்பெயர்ந்தோரை ஓர் எண்ணிக்கையாக காணாமல், மனிதர்களாகக் காணும் பக்குவத்தை உலக நாடுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்கள், அந்நாடுகளின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக உழைக்கின்றனர் என்பதை அரசுகள் மறுக்கவும், மறைக்கவும் முடியாது என்றும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பிலிப்பின்ஸ் அரசு, மக்களுக்குத் தகுந்த அரசாக இயங்கவில்லை - அந்நாட்டின் துறவியர் அமைப்பு

ஏப்.25,2013. பிலிப்பின்ஸ் நாட்டில் Benigno Aquino தலைமையில் பணியாற்றும் அரசு, மக்களுக்குத் தகுந்த அரசாக இயங்கவில்லை என்று அந்நாட்டின் துறவியர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் பணியாற்றும் இருபால் துறவியரின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரதி ஒன்று Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் இருக்கும் பிலிப்பின்ஸ் அரசு, மனித உரிமைகள் மறுப்பு, ஊழல், நிலப் பங்கீட்டில் குறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடு என்ற பல அம்சங்களிலும் சரிவர செயலாற்றவில்லை என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல உயர்மட்ட அரசு அதிகாரிகளின் குற்றங்கள் நிரூபணமானபோதிலும், 2010ம் ஆண்டுக்குப் பிறகு, இவர்களில் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அரசு அனுமதியுடன், பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சுரங்கத்தொழில், சட்டங்களையெல்லாம் கடந்து நடத்தப்படுகின்றது என்றும், இதனால் நாட்டின் இயற்கைவளங்கள் அனைத்தும் பெரும் ஆபத்துக்கு உள்ளாகி வருகின்றன என்றும் துறவுச் சபைகளின் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides

7. புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் அமைதி உடன்பாடு

ஏப்.25,2013. பெத்பகுவில் (Bethphage)  வாழும் கிறிஸ்தவர்களுக்கும், கிழக்கு எருசலேமில் வாழும் இஸ்லாமியருக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் அமைதி உடன்பாடு, புனித பூமி அனைத்திற்கும் சிறந்ததோர் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று புனித பூமியில் வாழும் ஆயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவ, இஸ்லாம் மதத் தலைவர்கள், மற்றும் நகரத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அண்மையில் பெத்பகு நகரில் சந்தித்து, மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
கிறிஸ்தவர்கள் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற, இலத்தீன் வழிபாட்டு முறை எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி, இத்தகைய உடன்பாடு புதியதொரு வரலாற்றை புனித பூமியில் துவக்கியுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ சமுதாயத்தின் பிரதிநிதியாக ஆயர் ஷொமாலி அவர்களும், இஸ்லாமியர் சார்பில் எருசலேம் தலைமைப் போதகரான Mohammad Hussein அவர்களும், கிழக்கு எருசலேம் ஆளுநர் Adnan Husseini அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : Asianews

8. ஆசியா-பசிபிக் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவது 13.4 மடங்கு உயர்ந்துள்ளது - ஐ.நா. அறிக்கை

ஏப்.25,2013. ஆசியா-பசிபிக் பகுதியில் வாழ்வோர், உலகின் பிற நாடுகளில் வாழ்வோரைக் காட்டிலும், இயற்கை வளங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்றும், இது ஆபத்தான போக்கு என்றும் ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
செல்வச் செழிப்பு, மற்றும் பொருள்களின் உற்பத்தி ஆகியவற்றில் அதிக அளவில் வளர்ந்துவரும் ஆசியா-பசிபிக் நாடுகள், பூமியின் இயற்கைவளங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு, அவற்றை மீண்டும் உருவாக்காமல் விடுவது ஆபத்து என்பதை இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஐ.நா. வின் சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.
1970ம் ஆண்டுக்கும் 2008ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆசியா-பசிபிக் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவது 13.4 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, இதனால், இப்பகுதிகளில் நிலத்தின் உலோகங்கள், நிலத்தடி எண்ணெய் ஆகியவை 8.6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இப்பகுதிகளில் நிகழும் கட்டுமானங்களில் சீனா 60 விழுக்காடும், இந்தியா 14 விழுக்காடும் அதிகமாய் ஈடுபட்டுள்ளன என்றும், இந்த அதிகப்படியான கட்டுமானங்களுக்கு இணையாக, இயற்கை வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதில்லை என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...