Wednesday, 24 April 2013

Catholic News in Tamil - 24/04/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை அதிகார மனப்பான்மை கொண்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது அன்பின் வரலாற்றைக் கொண்டது

2. பேராயர் சுள்ளிக்காட் : ஏழ்மை ஒழிப்பு மனித மாண்பின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்

3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அந்தியோக்கிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் வேண்டுகோள்

4. பிரான்சில் ஒரே பாலினத் திருமணச் சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள்

5. தென்கிழக்கு ஆசியாவில் மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு 24 துறவு சபைகளின் தலைவர்கள் தீர்மானம்

6. இந்தியாவின் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம்

7. பொதுவான கொள்கைகள் மூலம் புத்தகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், யுனெஸ்கோ

8. இரு கொரிய நாடுகளிடையே அமைதியை ஊக்குவிக்கும் விளக்கு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை அதிகார மனப்பான்மை கொண்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது அன்பின் வரலாற்றைக் கொண்டது

ஏப்.24,2013. திருஅவை அதிகார மனப்பான்மை கொண்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது அன்பின் வரலாற்றைக் கொண்டது, திருஅவை அலுவலகங்களை உருவாக்கினால் அது அதிகார மனப்பான்மை கொண்டது போலாகிவிடும், தனது முக்கிய கூறையே இழந்துவிடும், அது அரசு-சாரா நிறுவனமாக மாறிவிடும் ஆபத்தை எதிர்நோக்கும், ஆனால் திருஅவை அரசு-சாரா நிறுவனம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இப்புதன் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து, இப்புதன் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசு தனது திருஅவைக்கு விரும்பிய திருஅவையின் பாதை இன்னல்களும், சிலுவையும், அடக்குமுறைகளும் நிரம்பிய பாதை என்று கூறினார்.
இயேசுவின் சீடர்கள் அவரால் அனுப்பப்பட்ட தூதர்களாக மட்டுமே இருந்தார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை இராணுவத்தின் வழியாக வளர்வதில்லை, ஆனால் தூய ஆவியின் வல்லமையால் வளர்கிறது, ஏனெனில் திருஅவை நிறுவனம் அல்ல, அது ஒரு தாய், நாம் அனைவரும் நமது தாயாகிய திருஅவையில் குடும்பமாக இருக்கின்றோம் என்றும் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் இப்புதன் காலையில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் வத்திக்கான் வங்கிப் பணியாளர்கள் உட்பட சிலர் கலந்து கொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பேராயர் சுள்ளிக்காட் : ஏழ்மை ஒழிப்பு மனித மாண்பின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்

ஏப்.24,2013. ஏழ்மை ஒழிப்பு, மனித மாண்பின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் மற்றும் இது இயற்கைச் சட்டத்தின்படி வழிநடத்தப்பட வேண்டும் என்று பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கூறினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஏழ்மை ஒழிப்பு குறித்து இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் இவ்வாறு கூறிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், ஏழ்மை ஒழிப்பு குறித்து எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மையப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
தாங்கள் வாழும் சமூகங்களின் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வில் பங்குகொள்வதிலிருந்து மக்கள் ஒதுக்கப்படுவதால் வறுமைநிலை ஏற்படுகின்றது என்றும், ஏழைகளை ஒதுக்குவது மனிதக்குடும்பத்தின் வாழ்வில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும் என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.
இன்று உலகில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் 129 கோடிப் பேரில் ஏறக்குறைய 40 கோடிப் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்று உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அந்தியோக்கிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் வேண்டுகோள்

ஏப்.24,2013. சிரியாவில் இத்திங்களன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அந்தியோக்கியாவின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தியோக்கியா மற்றும் அனைத்து கிழக்குப் பகுதியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும், அந்தியோக்கியா மற்றும் அனைத்து கிழக்குப் பகுதியின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும் சேர்ந்து இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது சகோதரர்களான அலெப்போ கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos al-Yazijம், அலெப்போ ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahimம் மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் கடத்தப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் உட்பட இப்படிப் பலரும் கடத்தப்படுவது குறித்து தாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகக் கூறியுள்ள ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள், உள்ளூர் மற்றும் பன்னாட்டுச் சமூகத்துக்கு ஓர் அறிவிப்பையும் முன்வைத்துள்ளனர்.
விற்கவும், வாங்கவும், இன்னும், போரிலும் பயன்படுத்தப்படும் பொருளாகவும், அரசியல் அல்லது பணப்பொருளாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகவும் மனிதர் நோக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து இசுலாமியப் பிரிவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து உழைக்குமாறு இத்தருணத்தில் கேட்பதாக முதுபெரும் தலைவர்கள்  அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
கடத்தப்பட்டிருப்பவர்கள் உலகில் அமைதியின் தூதுவர்கள் என்பதைக் கடத்தியிருப்பவர்களுக்குத் தாங்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ள அத்தலைவர்கள், அவ்விரு ஆயர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, இவ்விரு ஆயர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாயன்று வெளியான செய்தி தவறானது என்று அலெப்போ கிரேக்க மெல்கித்தே வழிபாட்டுமுறையின் பேராயர் Jean-Clement Jeanbart ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிரான்சில் ஒரே பாலினத் திருமணச் சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள்

ஏப்.24,2013. பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் இச்செவ்வாயன்று ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, ஒரே பாலினத் திருமணத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அந்நாட்டு ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஒரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவாக 331 வாக்குகளும், இதற்கு எதிராக 225 வாக்குகளும் பெற்று இம்மசோதா அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஒரே பாலினத் திருமணச் சட்டத்தை எதிர்த்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இஞ்ஞாயிறன்று பாரிசில் பேரணி ஒன்றையும் நடத்தினர். மேலும், பிரான்சில் ஒரே பாலினத் திருமணச் சட்டம் குறித்த எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இவ்விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடந்த இச்செவ்வாயன்று ஏறக்குறைய நான்காயிரம் காவல்துறையினர் தேசிய சட்டமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆதாரம் : CNS                         

5. தென்கிழக்கு ஆசியாவில் மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு 24 துறவு சபைகளின் தலைவர்கள் தீர்மானம்

ஏப்.24,2013. தென்கிழக்கு ஆசியாவில் மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மேலும் அதிக ஊக்கத்துடன் செயல்படவிருப்பதாக, அப்பகுதியின் 24 துறவு சபைகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
SEAMS என்ற தென்கிழக்கு ஆசியத் துறவு சபைகளின் தலைவர்கள் நடத்திய 15வது மாநாட்டின் இறுதியில் இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட அதன் பிரதிநிதிகள், மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அதிகமான ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினர்.
உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் மனித வியாபாரக் குற்றத்தில் ஆண்கள், பெண்கள், சிறார் என ஏறக்குறைய 2 கோடியே 70 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த ஜூனில் உலக தொழில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பகுதியில், மனித வியாபாரம் என்ற இந்த நவீன அடிமைத்தனத்தால் ஏறக்குறைய ஒரு கோடியே 17 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
தென்கிழக்கு ஆசியத் துறவு சபைகளின் தலைவர்கள் நடத்திய 15வது மாநாட்டில் பிற 9 ஆசிய நாடுகளிலிருந்து 33 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இந்தியாவின் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம்

ஏப்.24,2013. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அடுத்த ஆண்டில் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என இயேசு சபை அருள்பணியாளர் Paul Fernandes கூறினார்.
ஒடிசாவின் Bhubaneswarல் இயேசு சபையினரின் சேவியர் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்து Business Standard தினத்தாளிடம் பேசிய அருள்பணியாளர் Paul Fernandes, ஒடிசா மாநில அரசிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டம், அண்மையில் மாநில அவையில் விவாதிக்கப்பட்டு சேவியர் பல்கலைக்கழகம் மசோதா 2013 என்ற பெயரில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதன்மூலம் இந்தியாவின் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு வழி திறக்கப்பட்டுள்ளது என்றுரைத்த அருள்பணியாளர் Paul Fernandes, இவ்வாண்டு டிசம்பருக்குள் வளாகம் தயாராகிவிடும் என்றும், 2014ம் ஆண்டு ஜூலைக்குள் இது இயங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தில் ஒடிசா மாணவர்களுக்கென 50 விழுக்காட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், இது அம்மாநிலத்துக்கான இயேசு சபையினரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
40 கோடி ரூபாய் செலவில் 2 இலட்சம் சதுர அடி நிலப்பரப்பில் சேவியர் பல்கலைக்கழகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பொதுவான கொள்கைகள் மூலம் புத்தகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், யுனெஸ்கோ

ஏப்.24,2013. பலதரப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர் பக்கங்கள் ஆகியவை மிகவும் பயனுடையவை என்பதால், தகுந்த பொதுவான கொள்கைகள் மூலம் அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் இயக்குனர் Irina Bokova கேட்டுக்கொண்டார்.
பலவகை புத்தகங்களைக் கொண்ட நூலகங்கள் நமது பொதுவான சொத்து என்றும், இந்த நூலகங்கள், நமது அழகான கண்டுபிடிப்புக்களை, எல்லைகளையும் கடந்து பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன என்றும் Bokova கூறினார்.
ஏப்ரல் 23ம் தேதியான இச்செவ்வாயன்று அனைத்துலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தெரிவித்த Bokova, அறிவுச்சொத்தின் பாதுகாப்பு, டிஜிட்டல் உலகத்தில் புத்தக வெளியீடுகள், அச்சகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் போன்றவை குறித்துச் சிந்திப்பதற்கு இந்நாள் ஏற்ற தினமாக உள்ளது என்றும் கூறினார்.
ஏப்ரல் 23ம் தேதி உலக இலக்கியத்தின் அடையாள நாளாகும். 1611ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று Miguel de Cervantes, William Shakespeare,Inca Garcilaso de la Vega ஆகியோர் இறந்தனர். மேலும் இந்நாள், Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla, Manuel Mejía Vallejo ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்த அல்லது இறந்த தினமும் ஆகும்.

ஆதாரம் : UNESCO                               

8. இரு கொரிய நாடுகளிடையே அமைதியை ஊக்குவிக்கும் விளக்கு

ஏப்.24,2013. இரு கொரிய நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் 80 தென் கொரிய புத்தமதப் பிக்குகளிடம் அமைதி விளக்கு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதென ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் புத்தமதத்தினர் கொரிய நாடுகளில் அமைதி ஏற்படுவதற்குச் செபித்துவரும்வேளை, சித்தார்த்த கவுதம புத்தர் பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக இந்த விளக்கானது வருகிற மே முதல் தேதியன்று கொரியாவைச் சென்றடையும்.
நேபாள அரசுத்தலைவர் Ram Baran Yadav மற்றும் Lumbini புத்தமத சமூகத்தின் முயற்சியினால் இவ்வமைதி விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...