Wednesday, 24 April 2013

Catholic News in Tamil - 23/04/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவைக்கு வெளியே இயேசுவைக் காண்பது இயலாதது

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு டுவிட்டரில் நாம விழா நல்வாழ்த்துக்கள்

3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்களின் விடுதலைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் செபம்

4. சிரியாவில் துன்புறும் குடும்பங்களுக்கு உதவுமாறு, புனிபூமியின் காவலர் விண்ணப்பம்

5. பாஸ்டன் கர்தினால் : குண்டுவெடிப்பு வன்முறைக்கு அன்புக் கலாச்சாரத்தால் பதில் சொல்வோம்

6. மனித வாழ்வின் மதிப்பு என்ன? கேள்வி கேட்கிறது இந்தியத் திருஅவை

7. கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை விளையாட்டுக்கானத் தயாரிப்பில் இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்

8. இந்தியாவில் வாய்ப் புற்றுநோயால் 3 இலட்சம் பேர் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவைக்கு வெளியே இயேசுவைக் காண்பது இயலாதது

ஏப்.23,2013. நற்செய்தி அறிவிப்பின் இனிமையான மகிழ்ச்சியாகிய மறைப்பணிச் செயல்கள் திருஅவையை அன்னையாக ஆக்குகின்றது, ஏனெனில் திருஅவை தனது பிள்ளைகள் வளர்வதைப் பார்க்கின்றது, ஒரு தாயாக நமக்கு விசுவாசத்தையும், தனித்துவத்தையும் வழங்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ்  கூறினார்.
கிறிஸ்தவத் தனித்துவம், அடையாள அட்டை அல்ல, ஆனால் அது திருஅவைக்கு உரியது, ஏனெனில் திருஅவைக்கு வெளியே இயேசுவைக் காண்பது இயலாதது என்றும் திருத்தந்தை கூறினார்.
புனித ஜார்ஜ் விழாவான இச்செவ்வாயன்று வத்திக்கானின் புனித பவுல் சிற்றாலயத்தில் ஐம்பது கர்தினால்களுடன் சேர்ந்து திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை மற்றும் அதன் மறைப்பணிகள் குறித்து தனது மறையுரையில் எடுத்துச் சொன்னார்.
தனது நாம விழாவான இந்நாளின் திருப்பலியில் தன்னோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்திய கர்தினால்களுக்கு முதலில் நன்றி தெரிவித்த  திருத்தந்தை பிரான்சிஸ், உங்களால் உண்மையிலேயே நானே வரவேற்கப்படுவதாக உணர்கிறேன், உங்களோடு இருப்பது நன்றாக உள்ளது, இது எனக்கு விருப்பமானது என்று திருப்பலியின் தொடக்கத்தில் கர்தினால்களிடம் கூறினார்.
இவ்விழாவின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, திருஅவையின் மறைப்பணி, கிறிஸ்தவத்தின் அடக்குமுறையின்போதே விரிவடைந்தது என்றுரைத்த திருத்தந்தை, அடக்குமுறையினால் தூர இடங்களுக்குச் சென்ற அக்கிறிஸ்தவர்கள் தங்களோடு அப்போஸ்தலிக்க ஆர்வத்தை எடுத்துச் சென்றனர், இவ்விதமாக விசுவாசம் பரவியது என்று கூறினார்.
ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயரைக் கொண்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நாம விழா ஏப்ரல் 23ம் தேதியாகும்.
ஏப்ரல் 23ம் தேதி புனித ஜார்ஜ் விழாவாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு டுவிட்டரில் நாம விழா நல்வாழ்த்துக்கள்

ஏப்.23,2013. இன்று புனித ஜார்ஜ் விழா, திருத்தந்தையே, தங்களுக்கு நாம விழா நல்வாழ்த்துக்கள் என்று திருப்பீடச் செயலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நாம விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. 
மேலும், இன்று ஆகட்டும் என்று சொன்னவர் மரியா. மரியே, இயேசுவின் குரலை நன்றாக அறிவதற்கு எமக்கு உதவிபுரியும் என்று இச்செவ்வாயன்றும், நாம் ஒவ்வொருவரும் அன்பு, உண்மை மற்றும் வாழ்வுக்காக ஏங்குகின்றோம். இயேசு இவை அனைத்தையும் நிரம்பக் கொண்டிருப்பவர் என்று இத்திங்களன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

3. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்களின் விடுதலைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் செபம்

ஏப்.23,2013. சிரியாவின் வடக்கில் இத்திங்களன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்து வருவதாக, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim, சிரியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yaziji ஆகிய இருவரும், அந்நாட்டின் சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக அலெப்போவிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, துருக்கியின் எல்லையில் Kfar Dael என்ற கிராமத்தில் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள் அவர்களது வாகனத்தை வழிமறித்து ஓட்டுனரைக் கொன்று இவ்விருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலவரம் குறித்து திருத்தந்தை மிகுந்த ஈடுபாட்டுடன் விசாரித்து வருவதாகவும், அவர்களின் விடுதலைக்காக உருக்கமாகச் செபிப்பதாகவும் அருள்பணியாளர் லொம்பார்தி கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சிரியாவில் துன்புறும் குடும்பங்களுக்கு உதவுமாறு, புனிபூமியின் காவலர் விண்ணப்பம்

ஏப்.23,2013. சிரியாவில் வன்முறைகளால் துன்புறும் குடும்பங்களுக்கு உதவுமாறு, புனித பூமியின் காவலரான பிரான்சிஸ்கன் சபையின் அருள்திரு Pierbattista Pizzaballa விண்ணப்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியாவில் சண்டை தொடங்கி, இன்றும் தொடர்ந்து  நடந்து கொண்டிருக்கும்வேளை, அந்நாட்டில் அனைத்துத் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன, கடந்தவாரத்தில் தமஸ்கு நகருக்கு தென்மேற்கே இடம்பெற்ற புதிய தாக்குதல்களில் 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அருள்திரு Pizzaballa கூறினார்.
Damascus, Aleppo, Latakia, Orontes போன்ற சிரியாவின் நகரங்களில் பணிசெய்து வரும் பிரான்சிஸ்கன் சபையினர், மத, இன வேறுபாடின்றி, புலம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்கும் தங்களது இல்லங்களில் தஞ்சம் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிரியாவில் சண்டையிடும் தரப்புகளுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாமென்று கத்தார் மற்றும் பிற அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
சிரியாவில் போரிடும் புரட்சியாளர்களுக்கு இன்னும் அதிகமான கனரக ஆயுதங்களை வழங்குமாறு கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்ததாக ஊடகச்செய்தி ஒன்று கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பாஸ்டன் கர்தினால் : குண்டுவெடிப்பு வன்முறைக்கு அன்புக் கலாச்சாரத்தால் பதில் சொல்வோம்

ஏப்.23,2013. இவ்வுலகை மரணக் கலாச்சாரம் பெருமளவில் அச்சுறுத்தி வந்தாலும், நல்ல ஆயராம் கிறிஸ்துவின் ஒளி இருளை விரட்டி, வாழ்வு, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்துக்கு இட்டுச்செல்லும் பாதையை நமக்கு ஒளிர்விக்கின்றது என்று பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு வன்முறையும் உர ஆலை வெடி விபத்தும் சமூகம் எதிர்கொள்ளும் இடர்நிலைகளைக் காட்டுகின்றன என்று இஞ்ஞாயிறு மறையுரையில் கூறிய கர்தினால் O'Malley, நாம் அன்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறினார்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற பாஸ்டன் குண்டுவெடிப்பில் 3 பேர் இறந்தனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வன்முறை தொடர்பாக, இரஷ்ய மாநிலமான Chechnyaவைச் சேர்ந்த 26 வயது Tamerlan Tsarnaev, 19 வயது Dzhokar Tsarnaev ஆகிய இரு சகோதரர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையிடமிருந்து இவர்கள் தப்பி ஓடியபோது Tamerlan சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : CNS

6. மனித வாழ்வின் மதிப்பு என்ன? கேள்வி கேட்கிறது இந்தியத் திருஅவை
ஏப்.23,2013. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதைக் குறிப்பிட்டு, நாட்டில் மனித வாழ்வு எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Dominic D'Abreo.
டெல்லியில் 5 வயதுச் சிறுமி இரண்டு கயவர்களால் கடத்தப்பட்டு 48 மணிநேரங்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியிருப்பது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அருள்பணி D'Abreo, இந்தியாவில், 2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 48,338 சிறார் பாலியல் வன்செயல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.   
இந்தியா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ள இவ்வேளையில், மனித வாழ்வு குறித்து மக்கள் கொண்டுள்ள மதிப்பை கலாச்சார, சமய மற்றும் மனிதயியலின் அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் அருள்பணி D'Abreo.
மனித வாழ்வின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உயர்மட்ட அளவில் மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆதாரம் : Fides

7. கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை விளையாட்டுக்கானத் தயாரிப்பில் இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்

ஏப்.23,2013. கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற  உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கும் விளையாட்டு அரங்கங்களை அமைப்பதற்கும்  12 இலட்சம் குடியேற்றதாரர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
அனைத்துலக தொழிற்சங்க கூட்டமைப்பு(ITUC), உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக் கழகத் (FIFA) தலைவர் Seep Blatterக்கு அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், பணியாள்களுக்கு உண்மையான பாதுகாப்பு வழங்குவதற்கு கத்தார் அரசு தவறியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான கத்தாரின் பொருளாதார வளர்ச்சி 19 விழுக்காடாகும்.
கத்தாரில் வாழும் 19 இலட்சம் மக்களில் 3 இலட்சம் பேர் மட்டுமே கத்தார் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     

ஆதாரம் : AsiaNews                             

8. இந்தியாவில் வாய்ப் புற்றுநோயால் 3 இலட்சம் பேர் பாதிப்பு
ஏப்.23,2013. உலகில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நீண்டகாலம் புகையிலை மெல்லுதல் மற்றும் புகைப் பிடிப்பதால் ஏற்படும் வாய்ப் புற்றுநோயால் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 20 பேர் வீதம் இறக்கின்றனர், அதேநேரம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்விறப்புகள் ஒரு இலட்சத்துக்கு 10 என்ற விகிதத்திலும், மத்திய கிழக்குப் பகுதியில் ஒரு இலட்சத்துக்கு 2 என்ற விகிதத்திலும் உள்ளன என்று அவ்வாய்வு கூறுகிறது.
துபாயில் வருகிற மே 1 முதல் 5 வரை நடைபெறவிருக்கும் வாய்ப் புற்றுநோய் குறித்த மாநாட்டையொட்டி இவ்வாய்வு வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் மக்களை அதிகம் தாக்கியுள்ள ஆறுவகை புற்றுநோய்களில் வாய்ப் புற்றுநோயும் ஒன்றாகும். வெற்றிலை, பாக்கு, பான்பராக் உட்பட புகையிலையுடன்கூடிய பாக்குக் கலப்புகளை எப்போதும் மென்று கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : P.Observer

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...