Wednesday, 24 April 2013

Catholic News in Tamil - 20/04/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : அரைகுறை கிறிஸ்தவர்கள் சிறிய சபைகளைக் கட்டுகிறார்கள்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இரண்டு இந்தியர்கள் உட்பட பத்து தியாக்கோன்களுக்கு  அருள்பொழிவு

3. டெக்சஸ் உர ஆலை வெடி விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்

4. இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்காகச் செபிக்குமாறு கர்தினால் Ouellet அழைப்பு

5. சண்டைகள் இடம்பெறும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு பேராயர் சுள்ளிக்காட் வேண்டுகோள்

6. TEDx கருத்தரங்கில் கர்தினால் ரவாசி : உலகில் 65 விழுக்காட்டு மக்களுக்கு சமய சுதந்திரம் கிடையாது 

7. சிட்டகாங் ஆயர் : பங்களாதேஷ் சமுதாயம் புதிய தெய்வநிந்தனைச் சட்டத்தை விரும்பவில்லை

8. சாஹெல் பகுதியில் 14 இலட்சம் சிறார்க்கு அவசர உணவு உதவி தேவை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அரைகுறை கிறிஸ்தவர்கள் சிறிய சபைகளைக் கட்டுகிறார்கள்

ஏப்.20,2013. தங்களது போக்கின்படி திருஅவையைக் கட்டியெழுப்ப விரும்புகின்றவர்கள் அரைகுறை கிறிஸ்தவர்கள், இவர்கள் கட்டுவது இயேசுவின் திருஅவையை அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் ஆலயத்தில் இச்சனிக்கிழமை காலை நிகழ்த்திய திருப்பலியில் ஆற்றிய சிறிய மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் அடக்குமுறைகளுக்குப் பின்னர் முதல் கிறிஸ்தவர்கள் அமைதியிலும் ஆண்டவர் மீதான பயத்திலும், தூயஆவியின் தேறுதலிலும் ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள் என்று கூறினார்.
இந்த ஒரு சூழலிலே திருஅவை வாழ்கின்றது, உயிர்மூச்சை விடுகின்றது மற்றும் கடவுளின் பிரசன்னத்திலும் வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, கடவுளின் பிரசன்னத்தில் வாழும்போது கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டோம்,  தவறான தீர்மானங்களை எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.
இயேசுவின் பேச்சு ஏற்றுக்கொள்வதற்கு கடினம் என்று சொல்லி அவரைவிட்டுச் சென்ற பல சீடர்கள் குறித்து விளக்கும் இந்நாளின் நற்செய்திப் பகுதியை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவிடம் செல்வோம், ஆனால் அவருக்கு நெருக்கமாக அல்ல என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், திருஅவையில் ஒன்றிணைந்து வாழாதவர்கள், அவர்கள் இறைப்பிரசன்னத்தில் வாழாதவர்கள் என்று கூறினார்.
இச்சனிக்கிழமை காலை திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கானிலுள்ள புனித வின்சென்ட் தெ பவுல் சகோதரிகள் நடத்தும் சிறார் மருந்தகத்தின் தன்னார்வப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.  இம்மருந்தகம், தேவையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மதம், நாடு என்ற வேறுபாடின்றி 90 ஆண்டுகளாகச் சேவை செய்து வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இரண்டு இந்தியர்கள் உட்பட பத்து தியாக்கோன்களுக்கு  அருள்பொழிவு

ஏப்.20,2013. 50வது அனைத்துலக இறையழைத்தல் தினமாகிய இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் இரண்டு இந்தியர்கள் உட்பட 10 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யும் திருப்பலியை இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த Marlapati Granaprakash, Sijo Kuttikkattil, இன்னும் 6 இத்தாலியர், ஒரு குரோவேஷியர், ஓர் அர்ஜென்டினா நாட்டவர் என பத்து தியாக்கோன்கள் அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யப்படவுள்ளனர்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்து கொண்டிருந்தபோது 1963ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இறையழைத்தல்களுக்காகச் செபிப்பதற்கு அழைப்புவிடுக்கும் இறையழைத்தல் ஞாயிறை உருவாக்கினார். ஆண்டுதோறும் பாஸ்கா காலத்தின் 4ம் ஞாயிறன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 21, இஞ்ஞாயிறன்று இறையழைத்தல்கள், விசுவாசத்தில் வேரூன்றப்பட்ட நம்பிக்கையின் அடையாளம் என்ற தலைப்பில் 50வது இறையழைத்தல் ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. டெக்சஸ் உர ஆலை வெடி விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்

ஏப்.20,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் மாநிலத்தின் வெஸ்ட்ல் உர ஆலையில் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த கவலை கொண்டுள்ளார் என, திருத்தந்தை பெயரில் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் செய்தி கூறுகிறது.
Austin ஆயர் Joe S. Vasquez அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இவ்வெடி விபத்தில் இறந்தவர்களின் நிறைசாந்திக்கானத் திருத்தந்தையின் செபமும், இதில் காயமடைந்தவர்களுக்கானத் திருத்தந்தையின் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்புப்பணிகளில் தாராள உள்ளத்துடன் தொடர்ந்து செயல்பட்டுவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்குமாறு திருத்தந்தை செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்விபத்தில், குறைந்தது 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150க்கும் அதிகமானோர்  காயமடைந்துள்ளனர் என நம்பப்படுகின்றது. பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
அந்த ஆலைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி கட்டிடம், 80 வீடுகள், மருத்துவமனை ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. வெடி விபத்தின் அதிர்வுகள், உர ஆலையிலிருந்து 50 மைல் தூரம்வரை உணரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்காகச் செபிக்குமாறு கர்தினால் Ouellet அழைப்பு

ஏப்.20,2013. இலத்தீன் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அவசியமான புனிதம், உண்மை, ஒன்றிப்பு, நற்செய்தி அறிவித்தல் ஆகியவற்றுக்கானப் புதிய உந்துதலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி கொண்டு வருகின்றது என்று இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Marc Ouellet கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியை ஏற்று ஏப்ரல் 19ம் தேதியோடு ஒரு மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ள கர்தினால் Ouellet, திருஅவை வரலாற்றில் முதன்முறையாக இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
புனித பேதுருவின் வழிவருபவராக இறைவன் தேர்ந்தெடுத்துள்ள இந்த மகனோடும் இந்த மேய்ப்பரோடும் அமெரிக்கக் கண்டத்தின் கிறிஸ்தவ சமுதாயமும் அனைத்து மக்களும் மிக நெருக்கமாக இருந்து தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுள்ளார் கர்தினால் Ouellet.
நம்பிக்கையின் கண்டமான இலத்தீன் அமெரிக்கா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபிக்குமாறும், உலகின் இறுதி எல்லைவரை நற்செய்தியை அறிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Ouellet.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சண்டைகள் இடம்பெறும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு பேராயர் சுள்ளிக்காட் வேண்டுகோள்

ஏப்.20,2013. ஆயுதம் ஏந்திய மோதல்களில் இடம்பெறும் மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்படுவதற்கு அனைத்து அரசுகளும் அனைத்துலக சமுதாயமும் தங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகளை எடுக்குமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள், அமைதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஐ.நா.பாதுகாப்பு அவையில் இவ்வாரத்தில் இடம்பெற்ற திறந்த விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், சண்டைகள் இடம்பெறும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் குறித்து விளக்கினார்.
பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்படவும், இக்குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவும் வேண்டுமென நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட். 
மாலி, காங்கோ, ருவாண்டா, சிரியா உட்பட உலகில் ஆயுத மோதல்கள் இடம்பெறும் 22 இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் குறித்து 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்த விவாதம் நடைபெற்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. TEDx கருத்தரங்கில் கர்தினால் ரவாசி : உலகில் 65 விழுக்காட்டு மக்களுக்கு சமய சுதந்திரம் கிடையாது 

ஏப்.20,2013. நீதி மற்றும் அமைதியில் ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்ஃபிராங்கோ ரவாசி கூறினார்.
தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வண்ண வடிவமைப்பு என்ற TEDx என்ற பெயரில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் ரவாசி, இன்று உலகில் 65 விழுக்காட்டு மக்களுக்கு சமய சுதந்திரம் கிடையாது என்று கூறினார்.
சமய சுதந்திரம் என்பது விருப்பப்படித் தேர்வு செய்வது அல்ல, ஆனால் அது சமுதாய வாழ்வுக்கு இன்றியமையாதது என்றுரைத்த கர்தினால் ரவாசி, அறிவியலும் விசுவாசமும் ஒன்றோடொன்று முரண்பட்டதல்ல என்றும் கூறினார். 
"உலகில் இன்று சமய சுதந்திரம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய ஆய்வாளர் Brian Grim, இன்று உலகில் ஏறக்குறைய 50 கோடி மக்களின் சமய சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
800க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், இடிந்து விழுந்த நியூயார்க் வர்த்தகக் கோபுரங்களின் இடத்தில் உருவாக்கப்படும் 'விடுதலை கோபுரத்தை' வடிவமைத்த David Libeskind, Gloria Estefan என்ற புகழ்பெற்ற பாடகர், Vlade Divac என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர், ஆகியோர் உட்பட பல முக்கிய பேச்சாளர்கள் பங்கு பெற்றனர்.
TEDx கருத்தரங்குகள், 1984ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் துவக்கப்பட்டன. புகழ்பெற்ற இக்கருத்தரங்குகளின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்ட TEDx கருத்தரங்குகள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் அண்மைய ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. சிட்டகாங் ஆயர் : பங்களாதேஷ் சமுதாயம் புதிய தெய்வநிந்தனைச் சட்டத்தை விரும்பவில்லை

ஏப்.20,2013. பங்களாதேஷில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய தெய்வநிந்தனைச் சட்டத்தைப் புறக்கணிக்கும் நோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் பொதுவான முயற்சிகளை எடுத்து வருகின்றன என்று  சிட்டகாங் துணை ஆயர் Lawrence Subrato Howlader கூறினார்.
பொதுவாகப் பார்த்தோமானால் புதிய தெய்வநிந்தனை சட்டத்துக்கு மக்கள் ஆதரவாக இல்லை, ஆனால் சில தீவிரவாதக் குழுக்களே இச்சட்டத்தைப் பரிந்துரை செய்தன என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் Lawrence, இச்சட்டத்தைக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று அரசு சொல்லியிருப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவையும், சிறுபான்மை சமுதாயங்களும் அரசைப் பாராட்டியுள்ளன என்று தெரிவித்தார்.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய தெய்வநிந்தனைச் சட்டத்தில் 13 பரிந்துரைகள் உள்ளன, இவற்றில் பல பரிந்துரைகள் பங்களாதேஷின் அரசியல்அமைப்புக்கு முரணானவை என்றும் ஆயர் தெரிவித்தார்.
பங்களாதேஷில், புதிய தெய்வநிந்தனைச் சட்டத்தை ஆதரித்து வருகிற மே 4,5 தேதிகளில் இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் மாபெரும் பேரணிகளை நடத்தவுள்ளன.

ஆதாரம் : Fides

8. சாஹெல் பகுதியில் 14 இலட்சம் சிறார்க்கு அவசர உணவு உதவி தேவை

ஏப்.20,2013. ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் 8 ஆண்டுகளில் மூன்று கடும் பஞ்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அப்பகுதி மக்கள் அவற்றின் தாக்கங்களினின்று வெளிவருவதற்கு இயலாமல் உள்ளனர் என்று பசியைப் போக்குவதற்கு முயற்சிக்கும் ACF என்ற அரசு சாரா அமைப்பு கூறியது.
சாஹெல் பகுதியில் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் 14 இலட்சம் சிறார் இறந்து கொண்டிருக்கின்றனர் எனவும், 1 கோடியே 30 இலட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் எனவும் ACF அமைப்பு தெரிவித்தது.
மேலும், இந்தியாவில் 33 விழுக்காட்டு மக்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி வெளி்யிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...