ஆடும் கோபுரங்கள்
இந்தியாவின் அகமதாபாத் நகரில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Sidi Bashir
மசூதியின் இரண்டு கோபுரங்கள்தான் அதிசய ஆடும் கோபுரங்களாக சுற்றுலா
பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்த இரண்டு கோபுரங்களையும் ஒரு சமதளமான மாடி
இணைக்கிறது. ஒவ்வொரு கோபுரமும் 20 மீட்டர் உயரமும், மூன்று
அடுக்குகளும் கொண்டவை. இந்த அடுக்குகளில் கல்லால் செதுக்கப்பட்ட
வேலைப்பாடுகள் அமைந்த பால்கனிகள் உள்ளன. இதில் வியப்படைய வேண்டிய விடயம்
என்னவென்றால், இந்த இரண்டு கோபுரங்களில், ஒரு கோபுரத்தின் உச்சிப்பகுதியைக் குலுக்கினால் அந்த அதிர்வு, அந்த கோபுரத்தின் வெற்று வழியே சென்று, அடுத்த கோபுரத்தை அடைந்து, அதையும் ஆட வைக்கிறது. 1461ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதியையும், கோபுரங்களையும் பார்க்கவரும் பார்வையாளர்கள் படிகள் வழியே கோபுரத்தின் உச்சியை அடைந்து ஒரு கோபுரத்தை ஆட்டி, மற்றொன்று
ஆடுவதைக் கண்டு வியப்படைகின்றனர். இந்த ஆட்டம் நானூறு ஆண்டுகளாக நடைபெற்று
வருகிறது. நிலநடுக்கத்தின்போது இடம்பெறும் சேதங்களைத் தடுப்பதற்காக
இவ்வாறு இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. அகமதாபாத்
நகரிலுள்ள Raj Bibi மசூதியும் இரண்டு ஆடும் கோபுரங்களைக் கொண்டிருந்தன. ஆயினும் அக்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள், இக்கோபுரங்களின் தொழில்நுட்பத்தை அறிவதற்காக இவற்றில் ஒன்றை இடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஈரானின் Isfahan நகரிலும் ஆடும் கோபுரங்கள் உள்ளன. இவை, இந்த அகமதாபாத் கோபுரங்கள்போன்று புகழ்பெற்றவை அல்ல எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment