உலகின் மிகப் பெரிய தீவு
உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து (Greenland). ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள இத்தீவின் நான்கில் மூன்று பகுதி, பனியால் மூடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 56,370 மக்களே வாழ்கின்றனர் (2013ம் ஆண்டின் நிலவரப்படி). உலகில் மிகக் குறைவாக மக்கள் வாழும் பகுதியாகவும் இது உள்ளது. கானடாவிலிருந்து குடியேறிய ஆர்டிக் மக்கள், ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இத்தீவு, புவியியல்ரீதியில் வட அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அரசியல் மற்றும் கலாச்சாரரீதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவுடன், குறிப்பாக, முதலில் நார்வேயுடனும், பின்னர் டென்மார்க்குடனும் தொடர்புடையதாக இருந்து வருகிறது. 1814ம் ஆண்டில் டென்மார்க்கின் காலனியாக மாறிய கிரீன்லாந்து, 1979ம் ஆண்டிலிருந்து டென்மார்க்கைச் சார்ந்த தன்னாட்சியுள்ள ஒரு பகுதியாக மாறியது. 2008ம் ஆண்டில் கிரீன்லாந்து மக்கள், அதிக அதிகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்ததையொட்டி, தற்போதைய புதிய அமைப்பின்படி, வெளியுறவு விவகாரம், தேசிய பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிதி
அமைப்பு ஆகியவை டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளன. 31 நாடாளுமன்ற
உறுப்பினர்களைக் கொண்ட சொந்த நாடாளுமன்றத்தையும் பிரதமரையும் கிரீன்லாந்து
கொண்டுள்ளது. இத்தீவின் மொத்த பரப்பளவு 2,166,086
சதுர கிலோமீட்டர் ஆகும். உலகில் பெரிய நிலபரப்பைக் கொண்ட பகுதிகளில்
கிரீன்லாந்து 13வது இடத்தில் உள்ளது. இத்தீவின் முக்கிய பொருளாதாரம்
மீன்வளமாகும்.
No comments:
Post a Comment