Monday, 27 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 26 பெப்ரவரி 2012


1. திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம்

2. திருப்பீட-வியட்னாம் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும்

3. திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளில் 400 விழுக்காடு அதிகரிப்பு

4. தமாஸ்கஸ் ஆயர் : சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருகின்றன

5. குவைத்தில் புதிய ஆலயங்கள் கட்டப்படுவதற்குத் தடை விதிக்க முயற்சி

6. கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு சாதனை

7. போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்

8. மியான்மார் உறுதியான தன்மையைக் கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது, ஐ.நா. பிரதிநிதி

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம்

பிப்.25,2012. குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்துச் சோர்வுற வேண்டாமெனவும், அவர்கள் தங்களது திருமுழுக்கு மற்றும் திருமண அழைப்பின் மூலம், புதிய மனித சமுதாயத்தை உருவாக்குவதில் கடவுளோடு ஒத்துழைக்க எப்பொழுதும் அழைப்புப் பெறுகிறார்கள் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
குழந்தைப்பேறின்மையால் துன்புறும் தம்பதியர் மீது திருஅவை மிகுந்த அக்கறை காட்டுகின்றது எனவும், இதனாலே இக்குறைபாட்டைக் களைவதற்கு மருத்துவ ஆய்வுகளைத் திருஅவை ஊக்கப்படுத்துகின்றது எனவும் திருத்தந்தை மேலும் கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகம் வத்திக்கானில் நடத்திய 18 வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 200 பேரை  இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
அறிவியல் ஆய்வானது எப்பொழுதும் மனிதரின் நன்மைக்காகச் செய்வதாக இருக்க வேண்டும் என்றும் உரைத்த அவர், குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டு விடயத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் அறிவியல் ரீதியாகச் சரியானதாக இருந்தாலும், அதோடு தொடர்புடையவர்களின் முழு மனிதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருமணத் தம்பதியரின் ஐக்கியம் உடல் சார்ந்தது  மட்டுமல்ல, ஆன்மீகம் சார்ந்ததும் ஆகும் என்று கூறிய திருத்தந்தை, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரின் நியாயமான ஏக்கங்கள், அறிவியல்ரீதியாக நிறைவேற்றப்பட எடுக்கும் முயற்சியில் அவர்களின் மனித மாண்பும் முழுவதும்  மதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று தொடங்கிய இக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டு மருத்துவர் Thomas W. Hilgers, அந்நாட்டில் 95 இலட்சம் பெண்கள் கருவுறுதல் தொடர்புடைய பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர் என்று கூறினார்.
மேலும், வளர்ந்த நாடுகளில் 15 விழுக்காட்டுத் தம்பதியரும், வளரும் நாடுகளில் 30 விழுக்காட்டுத் தம்பதியரும் குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீட வாழ்வுக் கழகத்தின் அருட்பணி Pegoraro தெரிவித்தார்.

2. திருப்பீட-வியட்னாம் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும்

பிப்.25,2012. திருப்பீடத்துக்கும் வியட்னாமுக்கும் இடையே அரசியல் உறவை உருவாக்குவதற்கு அடிப்படையான முயற்சிகளை எடுப்பதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நாடுகளும் இணைந்த பணிக்குழு, தனது மூன்றாவது கூட்டத்தை இம்மாத இறுதியில் ஹனோயில் நடத்தும் என வத்திக்கான் தகவல் மையம் அறிவித்தது.
2010ம் ஆண்டு ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் இவ்விரு தரப்பும் வத்திக்கானில் நடத்திய இரண்டாவது கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் வியட்னாம் நாட்டின் ஹனோயில் இப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் என அத்தகவல் மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  
வியட்னாம் நாட்டுக்கான பாப்பிறைப் பிரதிநிதிகள் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளின் உறவுகள் உறுதிப்படவும் மேம்படவும் இப்பணிக்குழுவின் கூட்டம் உதவும் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
வியட்னாமில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இடம் பெற்று வருகின்ற போதிலும், சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்குவது குறித்த அரசியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.  

3. திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளில் 400 விழுக்காடு அதிகரிப்பு

பிப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் Twitter இணையதளப் பக்கத்தைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை, 24 மணி நேரங்களுக்குள் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது.
திருத்தந்தையின் Twitter பக்கத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இவ்வியாழனன்று 2,500 ஆக இருந்தது, ஆனால் இவ்வெள்ளியன்று இவ்வெண்ணிக்கை, 12,500க்கும் அதிகமாகி இருப்பதாக அவ்வவை கூறியது.
இது மிகவும் வியப்பாக இருக்கின்றது என்றுரைத்த திருப்பீட சமூகத் தொடர்பு அவையின் செயலர் பேரருட்திரு Paul Tighe, இவ்வெண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, இவர்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் எண்ணிக்கையும் கூடியிருப்பதாகக் கூறினார். 
இவ்வெண்ணிக்கை அதிகரிப்பு, தவக்காலத் தொடக்கத்தோடு சேர்ந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளிவரும் திருத்தந்தையின் செய்திகளை, via@Pope2YouVatican என்ற முகவரியில் பார்க்கலாம். இது போர்த்துக்கீசியத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது.

4. தமாஸ்கஸ் ஆயர் : சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருகின்றன

பிப்.25,2012. சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருவதாகவும், ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற பயத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடையைப் பரிமாறிக் கொள்கின்றனர் எனவும் அந்நாட்டு மூத்த ஆயர் ஒருவர் கூறினார்.
தமாஸ்கஸ் மாரனைட் ரீதிக் கத்தோலிக்கப் பேராயர் சமீர் நாசர், Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்கு எழுதிய அறிக்கையில், மீண்டும் சந்திப்போம் என்பதில் நம்பிக்கையற்ற மக்கள், ஞாயிறு திருப்பலி முடிந்து ஒருவருக்கொருவர் பிரியாவிடை சொல்லிக் கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 15ம்  தேதி சிரியாவின் தென் பகுதியில் தொடங்கிய ஒரு சிறிய எதிர்ப்பு ஊர்வலம், இவ்வளவு பெரிய கலவரமாகப் பரவியுள்ளது என்றும் பேராயர் நாசர் கவலை தெரிவித்தார்.
இக்கலவரத்தையொட்டி சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால், நாட்டின் பணவீக்கம் 60 விழுக்காடாக ஆகியுள்ளது, வேலைவாய்ப்பின்மை எகிறியுள்ளது. புலம் பெயர்வுகளும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்காக உள்ளது எனவும் தமாஸ்கஸ் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சிரிய மக்களின் நண்பர்கள், துனிசியாவில் இவ்வெள்ளியன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், சிரியாவின் தற்போதைய பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.

5. குவைத்தில் புதிய ஆலயங்கள் கட்டப்படுவதற்குத் தடை விதிக்க முயற்சி

பிப்.25,2012. குவைத் நாட்டில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கும், இசுலாமுக்குத் தொடர்பில்லாத இடங்களில் வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் புதிய இசுலாமிய நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையே, புதிய ஆலயங்களுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Nabeel Al Fadhel, சமய சுதந்திரமும், மக்கள் தங்களது சமய நம்பிக்கைகளை வெளிப்படையாய் அறிவிக்கவும் கொண்டுள்ள உரிமைகளும், குவைத் அரசியல் அமைப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், இம்மசோதா குறித்துக் கருத்து தெரிவித்த, குவைத் தேசிய மனித உரிமைகள் கழகம், பொறுப்பற்றதனமான இந்நடவடிக்கை, குடிமக்களிடையே பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் என்று குறை கூறியது.
இன்னும், ஈரானின் தேசிய மொழியான பெர்சியத்தில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்தப்படுவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.   

6. கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு சாதனை

பிப்.25,2012. உலக அளவில் கத்தோலிக்கப் புத்தகங்கள் விற்பனையில் இளையோர் மறைக்கல்வி ஏடு அதிக அளவில் விற்கப்படுவதாக இளையோர் மறைக்கல்வி ஏட்டின் இணைத் தயாரிப்பாளர் பெர்னார்டு மியுசெர் அறிவித்தார்.
இதுவரை 17 இலட்சம் இளையோர் மறைக்கல்வி ஏடுகள் விற்பனையாகியுள்ளன என்றும், ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பிரசுரமாகும் இவ்வேடு பெருமளவில் வெற்றியைத் தந்துள்ளது என்றும், இந்நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பு வெளியீட்டாளர் மியுசெர் கூறினார்.
திருத்தந்தையின் கடைசி புத்தகம் உட்பட இந்த இளையோர் மறைக்கல்வி ஏடு விற்பனையில், இஸ்பெயின்,. அமெரிக்கா மற்றும் ஜெர்மன் முதலிடம் வகிக்கின்றன எனவும் அவர் கூறினார்.
தற்போது 20 மொழிகளில் பிரசுரமாகும் இளையோர் மறைக்கல்வி ஏடு, அடுத்த ஆண்டில் சீனம், அராபியம் உட்பட 30 மொழிகளில் பிரசுரமாகும் என்றும் மியுசெர் அறிவித்தார். 

7. போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!

பிப்.25,2012. 2011ம் ஆண்டு இந்தியாவில் போலியோ பாதிப்பு இல்லாத ஆண்டாக இருந்தவேளை, இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இவ்வெள்ளியன்று நீக்கியது உலக நலவாழ்வு  நிறுவனம்.
டெல்லியில் இவ்வெள்ளியன்று தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலக நலவாழ்வு நிறுவனத்திடம் இருந்து இவ்வெள்ளி காலை கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கடந்த ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லாததால், போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.
இதற்கு முன்னர், போலியோ பாதிப்புள்ள 4 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாத பட்சத்தில், 'இந்தியாவை போலியோ இல்லாத நாடு' என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும் எனவும் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சனவரி 13ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இவ்வாண்டு சனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

8. மியான்மார் நாடு உறுதியான தன்மையைக் கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது, ஐ.நா. பிரதிநிதி.

பிப்.25,2012. மியான்மார் நாடு, மாற்றத்தின் பாதையில் துவக்க கட்டத்தில் மட்டுமே உள்ளது, அந்நாடு, நிலையான அமைதியையும் உறுதியான தன்மையையும் எட்டுவதற்கு அந்நாட்டின் நீண்ட காலச் சவால்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.உயர் அதிகாரி கூறினார்.
மியான்மாரின் நீண்ட காலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அந்நாடு எடுத்துள்ள முக்கியமான முயற்சிகளாக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கருதுவதாக ஐ.நா.பொதுச் செயலரின் மியான்மாருக்கானச் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் கூறினார்.
கடந்த வாரத்தில் மியான்மார் சென்று திரும்பியுள்ள நம்பியார், சனநாயக வழிகளுக்கு அவ்வரசு எடுத்துள்ள முயற்சிகளில் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...