Friday, 24 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 23 பெப்ரவரி 2012

1. கல்கத்தாவின் புதிய பேராயராக வாரிசுரிமைப் பேராயர் பணியேற்பு

2. திருத்தந்தை: நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் அன்பு எனும் சங்கிலி நமக்கு விடுதலையைத் தருகிறது

3. திருநீற்றுப் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட வழிபாட்டு ஊர்வலம், திருப்பலி

4. உலகில் பட்டினியால் வாடுவோரை எண்ணிப்பார்க்க உண்ணாநோன்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது - எருசலேம் முதுபெரும் தலைவர்

5. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல - கர்தினால் Sarr

6. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களே - பேராயர் Antoine Audo

7. அமைதியை வளர்க்கும் எண்ணத்துடன் அரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் பங்கேற்க ஆயரின் அழைப்பு

8. 2015ம் ஆண்டிற்குள் 9கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க ஐநா திட்டம்

9. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. கல்கத்தாவின் புதிய பேராயராக வாரிசுரிமைப் பேராயர் பணியேற்பு

பிப்.23,2012. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் லூக்காஸ் சிர்கார் பணிஓய்வு பெறுவதை முன்னிட்டு அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பதவியேற்றுள்ளார் கல்கத்தா வாரிசுரிமை பேராயர் தாமஸ் டிசூசா.
1936ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி பிறந்த சலேசிய சபை பேராயர் சிர்கார், தான் பதவி விலகுவதற்கான விருப்பத்தைச் சமர்ப்பித்ததை, இவ்வியாழனன்று திருத்தந்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, புதியப் பேராயராகப் பதவியேற்றுள்ளார் வாரிசுரிமைப் பேராயர் டிசூசா.
கலகத்தா உயர்மறைமாவட்டத்தின் புதியப் பேராயர் தாமஸ் டிசூசா, 1950ம் ஆண்டு பிறந்து, 1977ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1997ம் ஆண்டு Bagdogra மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, அங்கேயே கடந்த ஆண்டு வரை பணியாற்றிய ஆயர் டிசூசா, கடந்த மார்ச் மாதம் கல்கத்தா வாரிசுரிமைப் பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.


2. திருத்தந்தை: நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் அன்பு எனும் சங்கிலி நமக்கு விடுதலையைத் தருகிறது

பிப்.23,2012. "புனித பவுல் அடியார் கிறிஸ்துவுக்காகச் சிறைக்கைதியாகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டார்" என்ற வார்த்தைகளை மையமாக வைத்து, உரோம் மறைமாவட்டக் குருக்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் தன் மறைமாவட்டக் குருக்களைச் சந்தித்து உரைவழங்கும் திருத்தந்தை, இவ்வியாழனன்று அவர்களைச் சந்தித்தபோது, புனித பவுல் அடியார் இயேசுவுக்காகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டது என்பது இயேசுவின் பாடுகளுடன் அவர் கொண்ட ஒன்றிப்பின் துவக்கத்தைக் காட்டி நிற்கிறது என்று கூறினார்.
இது பாடுகளுடன் மட்டுமல்ல, உயிர்ப்போடும், அதாவது, புதிய வாழ்வோடும் ஒன்றித்திருப்பதைக் காட்டுவதோடு, நம் துன்பங்களையும், சோதனைகளையும் இறைவன் பெயரால் ஏற்கவேண்டியதையும் வலியுறுத்தி நிற்கிறது என்றார் திருத்தந்தை.
நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் அன்பு எனும் சங்கிலி நமக்கு விடுதலையைத் தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு குருவும் தன் அழைப்பின் ஆழத்திற்குச் சென்று, இறைகுரலுக்குச் செவிமடுத்து, அதே பாதையில் மற்றவர்களை வழிநடத்துபவர்களாகச் செயல்பட வேண்டும் என்று குருக்களிடம் அழைப்பு விடுத்தார்.
தாழ்ச்சியுடைமை பற்றியும், விசுவாசம் குறித்தும் மேலும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டில் திருஅவையின் மறைகல்வியை நடைமுறைப் படுத்துவதிலும் உண்மையை வாழ்வதிலும் குருக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


3. திருநீற்றுப் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட வழிபாட்டு ஊர்வலம், திருப்பலி

பிப்.23,2012. மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தும் ஓர் அடையாளமாகவும், அதே நேரம், நம்மில் தவம், தாழ்ச்சி உருவாக வேண்டிய ஓர் அழைப்பையும் திருநீற்று புதனும், அன்று நம்மீது பூசப்படும் சாம்பலும் நமக்குத் தருகின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று மாலை உரோம் நகரில் உள்ள L'Aventino குன்றில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் பேராலயத்திலிருந்து புறப்பட்ட ஓர் வழிபாட்டு ஊர்வலத்தை முன்னின்று நடத்திய திருத்தந்தை, புனித சபீனா பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
"நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்று திருநீற்றுப் புதனன்று கத்தோலிக்கத் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, இந்த விவிலிய வார்த்தைகள் நம்மில் நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்குவதற்குப் பதில், நமது நிலையற்றத் தன்மையையும், அதனை மாற்றவல்ல இறைவனின் அருகாமையையும் நமக்கு உணர்த்தவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மண் என்ற அடையாளம் அழிவைக் குறிப்பதாகத் தெரிந்தாலும், நம்மில் ஒருவராய்ப் பிறந்து, இறந்து புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்த கிறிஸ்துவின் வழியாக, இந்த மண்ணும் உயிர் தரும் சக்தி பெறுகின்றது என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
1979ம் ஆண்டு அருளாளர் இரண்டாம் ஜான் பால் தவக்காலத்தின் முதல் நாளன்று, விசுவாசிகளுடன் வழிபாட்டு ஊர்வலமாய் நடந்து சென்று திருப்பலி ஆற்றி வந்தார். அவர் துவக்கி வைத்த இந்த வழக்கத்தைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் ஒவ்வோர் ஆண்டும் பின்பற்றி வருகிறார்.


4. உலகில் பட்டினியால் வாடுவோரை எண்ணிப்பார்க்க உண்ணாநோன்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது - எருசலேம் முதுபெரும் தலைவர்

பிப்.23,2012. தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் உண்ணாநோன்பு, கிறிஸ்துவை பின்பற்றவும், உலகில் பட்டினியாலும் தாகத்தாலும் வாடுவோரை எண்ணிப்பார்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal கூறினார்.
இப்புதனன்று ஆரம்பமாகியுள்ள தவக்காலத்தையொட்டி, பேராயர் Twal விடுத்துள்ள தவக்காலச் சுற்றுமடலில் இந்தச் சிறப்பு வழிபாட்டுக் காலத்தைப் பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.
தவக்காலத்தையொட்டி ஒவ்வோர் ஆண்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்துள்ள பல்வேறு செய்திகளைத் தன் மடலில் குறிப்பிட்டுள்ள பேராயர், 2012ம் ஆண்டில் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள பிறரன்பு, அந்த அன்பின் அடிப்படையில் உருவாகும் செயல்கள் ஆகியவற்றையும் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியின் இளவரசராக புனித பூமியில் பிறந்த இயேசு, தன் சீடர்களுக்கு இறுதியில் வழங்கிய பெரும் கொடையும் அமைதி என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Twal, இந்த அமைதியின்றி துன்புறும் மத்தியக்கிழக்குப் பகுதியில் மீண்டும் அமைதி நிலைபெறும்படி நமது தவக்கால முயற்சிகள் அமையட்டும் என்ற அழைப்பை தன் மடலில் விடுத்துள்ளார்.


5. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல - கர்தினால் Sarr

பிப்.23,2012. முன்னொரு காலத்தில் குடியரசுக்கும் நிலையான வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய செனெகல் நாடு தற்போது குழப்பத்தில் ஆழ்ந்து வருவது பெரும் வேதனையைத் தருகிறது என்று கர்தினால் Thédore Adrien Sarr கூறினார்.
தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் செனெகல் நாட்டில் தற்போது நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க கலந்துரையாடல் மிக அவசியம் என்று சுட்டிக் காட்டிய Dakar பேராயர் கர்தினால் Sarr, இந்த அமைதி வழிக்குப் பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 26, வருகிற ஞாயிறன்று அந்நாட்டின் அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தலைக் குறித்து Misna செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டிய வழிகளைப் பற்றி கர்தினால் Sarr தன் எண்ணங்களை வெளியிட்டார்.
நடைபெறவிருக்கும் தேர்தலும் அதைத் தொடரும் நிலையான அரசும் இளையோர் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் Sarr, இளையோர் நல்லதோர் எதிர்காலத்தைக் காண்பதற்கு, நாட்டில் நிலையான அரசு உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


6. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களே - பேராயர் Antoine Audo

பிப்.23,2012. மனதளவிலும் சமுதாய நிலையிலும் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாழ்வது கிறிஸ்தவர்களே என்றும், சூழ்ந்துள்ள வன்முறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒன்றே கிறிஸ்தவர்களின் வழி என்றும் கூறினார் சிரியாவின் ஆயர் ஒருவர்.
கடந்த சில மாதங்களாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களே என்று கூறிய Melkite ரீதி பேராயர் Antoine Audo, கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு ஓடிச்செல்வது, அந்நாட்டில் தலத் திருஅவை தொடர்ந்திருப்பதை பெருமளவில் பாதித்துள்ளது என்று கூறினார்.
போரில் ஈடுபட்டுள்ளோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்று இரு வாரங்களுக்கு முன், திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் விடுத்த அழைப்பை சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Audo, பேச்சுவார்த்தை முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஒரு பாலமாக அமைய முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
சிரியாவில் செயல்படும் காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பல்வேறு பணிகளைப் பற்றி குறிப்பிட்ட பேராயர் Audo, இவர்களது பணிகளாலேயே முதியோரும், நலம் இழந்தோரும் உதவிகள் பெற முடிகிறதென்று எடுத்துரைத்தார்.


7. அமைதியை வளர்க்கும் எண்ணத்துடன் அரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் பங்கேற்க ஆயரின் அழைப்பு

பிப்.23,2012. அமைதியையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் எண்ணத்துடன் கிழக்கு Timor மக்கள் வரவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மார்ச் 17ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தல் நல்ல முறையில் நடைபெற கிழக்கு Timor தலத் திருஅவை 111 நாட்கள் செப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் குருக்கள், துறவியர், மக்கள் ஆகிய 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட ஓர் அமைதி ஊர்வலத்தை முன்னின்று நடத்திய Dili மறைமாவட்டத்தின் ஆயர் Alberto Ricardo da Silva, நாட்டில் அமைதியைக் கொணரும் முயற்சிகளில் திருஅவை எப்போதுமே ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.
பதினோரு ஆண் வேட்பாளர்களும் இரு பெண் வேட்பாளர்களும் போட்டியிடும் இந்த அரசுத் தலைவர் தேர்தலின் பிரச்சாரங்கள் பிப்ரவரி 29ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 14ம் தேதி முடிவடையும் என்று UCAN செய்தி குறிப்பொன்று கூறுகிறது.


8. 2015ம் ஆண்டிற்குள் 9கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க ஐநா திட்டம்

பிப்.23,2012. ஏழ்மையை அகற்றுவதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் விவசாயிகளும் கிராமப்புற மக்களும் தங்கள் சக்தியை உணர்ந்து செயல்பட உதவுவதன் மூலம், 2015ம் ஆண்டிற்குள் 9 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க ஐ.நா. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
உலகின் சிறு விவசாயிகள் தங்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றி, உலகுக்கும் உணவு வழங்க முடியும்  என்று கூறிய வேளாண்மை மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி அமைப்பு (International Fund for Agricultural Development) IFADன் தலைவர் Kanayo Nwanze, உணவு பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு விவசாயிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.
2050ம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 900 கோடியைத் தாண்ட உள்ள நிலையில், உலகின் உணவு உற்பத்தி வளர்ச்சியும் அதற்கேற்றார்போல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
கிராமப்புற மக்கள் நகர்களுக்கு குடிபெயர்ந்து வரும் இன்றைய சூழலில், கிராமங்களைச் சார்ந்து இருக்கும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தன் கவலையையும் வெளியிட்டார் IFAD தலைவர் Nwanze.
உரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் IFAD அமைப்பு, 1978ம் ஆண்டிலிருந்து இதுவரை, வளரும் நாடுகளின் ஏழை விவசாயிகளுக்கான சிறு வட்டிக் கடனாக 1370 கோடி டாலர்களை வழங்கியுள்ளது.


9. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

பிப்.23,2012. நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை, தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். ஆய்வுக் குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பை உலக ஆய்வாளர்கள் பலர் புகழ்ந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் S.D.Biju தெரிவித்துள்ளார்.
இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடப்பட்ட பின்னரே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.
இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை மரபணுச் சோதனைகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்று கூறப்படுகிறது.
முதல் முறையாக பார்க்கும் போது புழுக்களை போன்றே தோன்றும் இவை, காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை. ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின் நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, பல பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும், அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தப் புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...