1. சிரியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வலியுறுத்தல்
2. இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளையும் மீன்பிடிப் படகுகளையும் வழங்கியது காரித்தாஸ் அமைப்பு
3. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கருத்தடை குறித்த சலுகைக்கு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவத் தலைவர்கள் எதிர்ப்பு
4. பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதர் - திருஅவை பெரும் மகிழ்ச்சி
5. இஸ்பெயின் கத்தோலிக்கப் பள்ளிகள், அந்நாட்டுக்கு 450 கோடி டாலருக்கு அதிகமான நிதியைச் சேமித்துக் கொடுக்கின்றன
6. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறார் ஐநா பொதுச் செயலர்
7. காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் ஆண்டுக்கு 3.39 இலட்சம் பேர் உயிரிழப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சிரியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வலியுறுத்தல்
பிப்.21,2012. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில், மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்புக்கள் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளனர் கத்தோலிக்கத் தலைவர்கள்.
கடந்த ஆண்டில் லிபியாவில் நடைபெற்றது போன்று தற்போது சிரியாவிலும், அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வரும் வேளை, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்தியோக் மாரனைட் ரீதி கத்தோலிக்கப் பேராயர் Paul N. El-Sayeh.
சிரியாவில் எல்லா இடங்களிலும் வன்முறை காணப்படுவதால் குடிமக்கள் ஒவ்வொருவரும் துன்புறுகின்றனர் என்று, Aid to the Church in Need என்ற சர்வதேச கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர் El-Sayeh.
பிரச்சனைகளுக்கு வன்முறைகளால் தீர்வு காணப்பட முடியாது என்று கூறிய பேராயர், ஒவ்வொருவரும் சண்டையிடுவதைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
சிரிய அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு எதிராகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 5,400 பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா.கூறியுள்ளது.
2. இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளையும் மீன்பிடிப் படகுகளையும் வழங்கியது காரித்தாஸ் அமைப்பு
பிப்.21,2012. இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளையும் மீன்பிடிப் படகுகளையும் தேவையான உதவிப் பொருட்களையும் இவ்வாரத் துவக்கத்தில் வழங்கியது அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.
கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் நோக்குடன் 22 வீடுகளைக் கட்டி வழங்கியுள்ள அப்பகுதி கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, 50 படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய தேவையான கருவிகளையும் வழங்கியுள்ளது.
ஸ்வீடன் மற்றும் லக்சம்பர்க் காரித்தாஸ் அமைப்புகளின் உதவியுடன் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் கிளிநொச்சி காரித்தாஸ் அமைப்பின் தலைவர் குரு அருளானந்தம் யாவிஸ்.
விதவைகள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், பெண்குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்கள் என்ற அடிப்படையில் 22 குடும்பங்களுக்கு வீடுகளும் 50 குடும்பங்களுக்கு படகுகளும் ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டதாக குரு யாவிஸ் மேலும் கூறினார்.
ஒவ்வொரு வீட்டையும் கட்டுவதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவிட்டதாகவும் ஒவ்வொரு இயந்திரப்படகின் விலை நான்கு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார் அவர்.
இவ்வுதவிகளை வழங்கிய விழாவில் காரித்தாஸின் இலங்கை தேசிய இயக்குனர் குரு ஜார்ஜ் சிகாமணியும் கலந்துகொண்டார்.
3. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கருத்தடை குறித்த சலுகைக்கு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவத் தலைவர்கள் எதிர்ப்பு
பிப்.21,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருத்தடைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கும் காப்பீட்டு சலுகை விதிமுறையை மாற்றி அமைக்குமாறு அந்நாட்டின் 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவத் தலைவர்கள், அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசுத்தலைவர் ஒபாமாவின் இந்நடவடிக்கையானது, அந்நாட்டின் பல கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவர்களின் மனச்சான்றின் உரிமைகளைப் புறக்கணிப்பதாக இருக்கின்றது என்று, இத்தலைவர்கள் கையெழுத்திட்டு ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள கடிதம் கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடு, சில சுதந்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது, அவற்றில் சமய சுதந்திரம் முதன்மையானது என்றும், அமெரிக்கர்கள், அரசு தலையீட்டில் பயமின்றி தங்கள் மனச்சான்றின்படி நடந்து வரும் உரிமையால் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் மேலும் அக்கடிதம் கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுமார் 31 கோடியே 30 இலட்சம் பேரில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்.
4. பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதர் - திருஅவை பெரும் மகிழ்ச்சி
பிப்.21,2012. திருநிலை பெறாத பொதுநிலையினர் ஆசியத் திருஅவையில் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் அருளாளர் Pedrom Calungsod பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதராகப்போகும் அறிவிப்பு அமைந்துள்ளது என்று Lipa பேராயர் Ramon Arguelles கூறினார்.
வருகிற அக்டோபர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனிதர் நிலைக்கு உயர்த்தப்போவதாக இச்சனிக்கிழமை அறிவித்துள்ள எழுவரில் அருளாளர் Calungsodம் ஒருவர் என்ற செய்தியைப் பிலிப்பின்ஸ் திருஅவை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் Calungsod தன் பரிந்துரையால் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு அமைதியையும், ஒருங்கிணைப்பையும் மென்மேலும் கொணர்வார் என தான் நம்புவதாக Cebu உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo Vidal, Facebookல் செய்தி வெளியிட்டுள்ளார்.
பிலிப்பின்ஸ் நாட்டிற்கு இரண்டாவது புனிதர் வரவிருப்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது என்றும், இவ்விருவருமே பொதுநிலையினர் என்பது மேலும் மகிழ்வான ஓர் அம்சம் என்றும் Malolos ஆயர் Jose Oliveros கூறினார்.
1654 ம் ஆண்டு பிறந்த அருளாளர் Calungsod, இயேசு சபையினர் நடத்திவந்த பள்ளியில் கல்வி பயின்று, மறைகல்வி புகட்டும் ஆசிரியப் பணியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார். மிக இளவயதிலேயே இயேசுசபை மறைப்பணியாளர்களுடன் இணைந்து Marianas தீவுகளில் உழைத்த Calungsod, தனது 18வது வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு இவரை அருளாளராக உயர்த்தினார்.
5. இஸ்பெயின் கத்தோலிக்கப் பள்ளிகள், அந்நாட்டுக்கு 450 கோடி டாலருக்கு அதிகமான நிதியைச் சேமித்துக் கொடுக்கின்றன
பிப்.21,2012. ஏறக்குறைய 13 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் இஸ்பெயின் கத்தோலிக்கப் பள்ளிகள், அந்நாட்டுக்கு 450 கோடி டாலருக்கு அதிகமான நிதியைச் சேமித்துக் கொடுக்கின்றன என்று, இஸ்பெயின் ஆயர்கள் பேரவையின் நிதி அலுவலகர் அறிவித்தார்.
இஸ்பெயின் ஆயர்கள் பேரவையின் பொருளாதார விவகாரங்களுக்கானப் பணிக்குழுவின் உதவிச் செயலர் Fernando Gimenez Barriocanal, Cope வானொலிக்கு அண்மையில் பேசிய போது இத்தகவலை வழங்கினார்.
நலவாழ்வைப் பாதுகாப்பதிலும், குடியேற்றதாரருக்கும் வீட்டு வன்முறைக்குப் பலியாகுவோர்க்கும் உதவுவதிலும், ஏழைகளுக்கு உணவு கொடுப்பதிலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இஸ்பெயின் திருஅவை இலட்சக்கணக்கான டாலர் பணத்தைச் செலவிடுகின்றது என்று Gimenez Barriocanal கூறினார்.
இஸ்பெயினில் 92 இலட்சம் வரி கட்டுவோர், தங்களது வரிப்பணத்தில் 0.7விழுக்காட்டையே கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்குகின்றனர் என்ற அவர், இப்பணமும் அந்நாட்டின் 22,700 பங்குகளைப் பராமரிப்பதற்கும், நற்செய்திப்பணிக்கும், மூன்றாம் உலக நாடுகளில் இஸ்பெயின் ஆயர்கள் செய்யும் உதவிகளுக்கும், அகிலத்திருஅவையின் காரித்தாஸ் நிறுவனத்துக்கும் வழங்கப்படுகின்றது என்று விளக்கினார்.
6. சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறார் ஐநா பொதுச் செயலர்
பிப்.21,2012. சரிநிகரற்ற நிலைகள், இலஞ்ச ஊழல், அடக்குமுறை, போதிய வேலைவாய்ப்பின்மைகள் போன்றவைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களில் உலகம் முழுவதும் இடம்பெற்றுவரும் போராட்டங்களை மனதிற்கொண்டு, அனைவருக்கும் மேலும் சமூக நீதி கிடைக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சி இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார் ஐநா பொதுச்செயலர் பான் கி மூன்.
இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக சமூக நீதி நாளையொட்டி செய்தி வெளியிட்ட பொதுச்செயலர், அண்மைக்கால மக்கள் போராட்டங்களின் மையப்பகுதியாக சமூக நீதிக்கான அழைப்பு உள்ளது என்றார்.
வரும் ஜூன் மாதம் ரியோ டி ஜெனீரோவில் இடம்பெற உள்ள ஐநா கருத்தரங்கு, புதிய முன்னேற்றத் திட்டங்களை வகுத்து, வருங்காலத்திற்கான சிறந்த பாதையை அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார் ஐநா பொதுச்செயலர் பான் கி மூன்.
7. காடுகளில் ஏற்படும் தீ விபத்தால் ஆண்டுக்கு 3.39 இலட்சம் பேர் உயிரிழப்பு
பிப்.21,2012. காடுகள் மற்றும் விளைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 3.39 இலட்சம் பேர் பலியாவதாக அண்மை ஆய்வொன்று கூறுகிறது.
கனடாவின் வான்கூவரில் இடம்பெற்ற அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், காடுகள் மற்றும் விளைநிலங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வியடைந்து இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.39 இலட்சமாக உள்ளது எனக் கூறப்பட்டது.
இதில், அதிகபட்சமாக ஆப்ரிக்காவின் சஹாராவில் 1.57 இலட்சம் பேரும், தெற்கு ஆசியாவில் 1.10 இலட்சம் பேரும் பலியாகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment