Thursday, 16 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 15 பெப்ரவரி 2012

1. அனைத்து நாடுகளிலும் மதச்சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இணைந்து பணியாற்றும்

2. ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைச் சந்திக்க உறுதியான மனம் தேவைப்படுகிறது - திருப்பீடப் பேச்சாளர்

3. கடந்த 30 ஆண்டுகள் வத்திக்கானில் தொடர்ந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

4. புனித அகஸ்தின் பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனிப்பட்ட வகையில் நிதி உதவி

5. நாட்டின் ஊழலைக் களைய, அருள்பணியாளர்கள் தங்கள் சொந்த வாழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் - மைசூர் ஆயர்

6. மனித உயிரை மதிக்காத அரசின் முயற்சிகளை விசுவாசிகள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - Costa Rica ஆயர்கள்

7. இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் கர்தினால் மால்கம் இரஞ்சித் சந்திப்பு

8. அமெரிக்க உயர் அரசு அதிகாரி : ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்


------------------------------------------------------------------------------------------------------

1. அனைத்து நாடுகளிலும் மதச்சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இணைந்து பணியாற்றும்

பிப்.15,2012. உலகின் அனைத்து நாடுகளிலும் மதச்சுதந்திரம் ஓர் அடிப்படை மனித உரிமையாக உறுதி பெறுவதற்கு இணைந்து பணியாற்றும் ஓர் ஒப்பந்தத்தை திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இப்புதனன்று இணைந்து வெளியிட்டுள்ளது.
திருப்பீடமும், பிரித்தானிய அரசும் அதிகாரப்பூர்வமான உறவுகளைப் புதிப்பித்துக்கொண்டதன் 30ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின், இப்பிரதிநிதிகள் குழு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தது.
வருகிற ஜூன் மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.உலகக் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இணைந்து பாடுபடும் என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
பல்வேறு நாடுகளில் உருவாகியுள்ள நிலையற்ற தன்மையை அகற்றும் வழிகள், ஆயுதக்களைவு, மனித உயிர்களை மதித்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் என்ற பல்வேறு செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றவும் முன்வருவதாக இவ்வறிக்கை உறுதி கூறுகிறது.
இங்கிலாந்து அரசி பதவியேற்ற வைரவிழா ஆண்டில் லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றியும் எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகறியச் செய்ய முனையும் பல நல்ல மதிப்பீடுகளை உலகில் வளர்க்க திருப்பீடமும், பிரித்தானிய அரசும் முயற்சி செய்யும் என்று உறுதி கூறுகிறது.


2. ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைச் சந்திக்க உறுதியான மனம் தேவைப்படுகிறது - திருப்பீடப் பேச்சாளர்

பிப்.15,2012. தற்போது இத்தாலிய ஊடகங்கள் வத்திக்கானைக் குறித்து உருவாக்கியுள்ள குழப்பமான செய்திகளை நிதானமாக, அமைதியாகக் கண்ணோக்குவது அவசியம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கானில் இருந்து கசிந்துள்ளதாகக் கூறப்படும் அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தோன்றிவருவதைக் குறித்து இத்திங்கள் மாலை செய்தியாளர்களிடம் பேசிய இயேசுசபை குரு லொம்பார்தி, இன்றையச் சூழலில் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யாரையும் ஆச்சரியப்பட வைத்துவிடுகின்றன என்பதால், அவைகளைச் சந்திக்கும் உறுதியான மனம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
பொதுவாகவே ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கும் முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவதால், சரியான ஆதாரங்கள் இன்றி, ஆழமான சிந்தனைகளும் இன்றி செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதால், இவைகளைச் சரியான கண்ணோட்டத்துடன் காணவேண்டிய பக்குவத்தை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அருள்தந்தை லொம்பார்தி கேட்டுக் கொண்டார்.
வத்திக்கானையும், திருப்பீடத்தையும் குறித்து தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பல்வேறு நேரங்களில், பல்வேறு சூழல்களில் வெளியான செய்திகள் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, இச்செய்திகளின் சரியான பின்னணிகளை விளக்காமல், அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ள ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனவே தவிர, ஊடக தர்மத்துடன் செயல்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
திருஅவையில் அடுத்தத் தலைமைப் பொறுப்பைக் குறித்து போட்டிகள் உருவாகியிருப்பதாக ஊடகங்கள் கூறிவருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருப்பீடப் பேச்சாளர், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருஅவையை வழி நடத்திய திருத்தந்தையர்களின் தனிப்பட்ட வாழ்வைக் கண்ணோக்கும்போது, அவர்கள் எவ்வளவு மேன்மை  உடையவர்கள் என்பதையும், போட்டி, பூசல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அல்ல என்பதையும் நாம் உணரலாம் என்று வலியுறுத்திக் கூறினார்.
தூய ஆவியின் துணை வேறு எப்போதும் இல்லாத அளவு நமக்கு இன்று தேவைப்படுகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி தன் பேட்டியின் இறுதியில் கூறினார்.


3. கடந்த 30 ஆண்டுகள் வத்திக்கானில் தொடர்ந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

பிப்.15,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் தன் பணிகளைத் துவக்கி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்புதனன்று வெளியான இவ்விதழின் முதல் பக்கச் செய்தியாக திருத்தந்தையின் இந்த தொடர்ந்த சேவை விளக்கப்பட்டுள்ளது.
Munich உயர்மறைமாவட்டத்தின் பேராயராக இருந்த கர்தினால் ஜோசப் ராட்சிங்கர், அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப 1982ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அப்பொறுப்பிலிருந்து விலகி வத்திக்கான் வந்தடைந்தார் என்று இச்செய்தி எடுத்துரைக்கிறது.
திருப்பீடத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கர்தினால் ராட்சிங்கர், 2005ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேரும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றினார்.
1927ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருத்தந்தை, தன் 24வது வயதில் குருவாகவும், 50வது வயதில் Munich பேராயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். பேராயராகப் பொறுப்பேற்ற அதே 1977ம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தை முதாலாம் ஜான்பால், மற்றும் இரண்டாம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரைத் தெரிவு செய்த கர்தினால்கள் அவையில் கர்தினால் ராட்சிங்கரும் பங்கேற்றார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறையடி சேர்ந்தபின் நடைபெற்ற கர்தினால்கள் அவையில் கர்தினால் ராட்சிங்கர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16ம் பெனடிக்ட் என்ற பெயருடன் தற்போது திருஅவையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த 30 ஆண்டுகள் வத்திக்கானில் தொடர்ந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்று வத்திக்கான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


4. புனித அகஸ்தின் பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனிப்பட்ட வகையில் நிதி உதவி

பிப்.15,2012. திருஅவையின் புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவரான புனித அகஸ்தின் மட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள மரியாதையை உலகம் அறியும், அப்புனிதரின் பெயாரால் கட்டப்பட்ட  பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனிப்பட்ட வகையில் நிதி உதவி செய்துள்ளார் என்று ஆப்ரிக்க நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அல்ஜீரியா நாட்டில் 1900மாம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட புனித அகஸ்டின் பேராலயத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பமாயின.
திருத்தந்தையின் பெயரால் செயல்படும் அறக்கட்டளை, இப்பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு நிதி உதவிகள் செய்துள்ளபோதிலும், திருத்தந்தை தனிப்பட்ட வகையிலும் நிதி உதவி அளித்துள்ளார் என்று Constantine-Hippo மறைமாவட்டத்தின் ஆயரும் இயேசுசபையைச் சேர்ந்தவருமான ஆயர் Paul Desfarges S.J. வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
புனித அகஸ்தின் 4ம் நூற்றாண்டில் ஆயராகப் பணியாற்றிய Hippoவின் இடிபாடுகளுக்கு அருகே 1881ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1900மாம் ஆண்டு முடிக்கப்பட்ட புனித அகஸ்தின் பேராலயம் அரேபிய, மற்றும் உரோமைய கட்டிடக் கலைகளின் சங்கமமாக உள்ளது என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. நாட்டின் ஊழலைக் களைய, அருள்பணியாளர்கள் தங்கள் சொந்த வாழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் - மைசூர் ஆயர்

பிப்.15,2012. நற்செய்திப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும், சமுதாயத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பதாக இருந்தாலும், இந்திய அருள்பணியாளர்கள் முதலில் இவற்றைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
CDPI என்று அழைக்கப்படும் மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவையின் பத்தாவது பொதுக் கூட்டத்தை இச்செவ்வாயன்று மும்பையில் துவக்கிவைத்துப் பேசிய மைசூர் ஆயர் தாமஸ் வாழப்பில்லி இவ்வாறு கூறினார்.
நாட்டில் நிலவும் ஊழல்களைக் குறித்து பேசும்போது, பொதுவாக அரசியலில் உள்ளவர்களையும் மற்றவர்களையுமே அதிகம் நினைத்துப் பார்க்கிறோம், ஆனால், தனக்கு குறிக்கப்பட்டுள்ள பணிகளைச் சரிவர செய்யாத ஆசிரியர்கள், மருத்துவர்கள், திருப்பணியாளர்கள் அனைவருமே ஊழல் பரவுவதற்கு வழியாக அமைகின்றனர் என்று ஆயர் வாழப்பில்லி எடுத்துரைத்தார்.
நாட்டின் ஊழலைக் களைய ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் வாழப்பில்லி, நற்செய்திப் பணியும் இதைப்போலவே ஒவ்வொரு திருப்பணியாளரின் தனிப்பட்ட வாழ்விலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்று கூறினார்.
இச்செவ்வாயன்று ஆரம்பமான மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவை கூட்டம் இவ்வியாழனன்று நிறைவு பெறுகிறது.


6. மனித உயிரை மதிக்காத அரசின் முயற்சிகளை விசுவாசிகள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - Costa Rica ஆயர்கள்

பிப்.15,2012. கருகலைப்பு மற்றும் ஓரினத் திருமணம் ஆகியவற்றை சட்டமயமாக்க Costa Rica நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகள் மனித உயிரை மதிக்காத ஒரு போக்கு என்றும், இம்முயற்சிகளை விசுவாசிகள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றும் அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மையில் Costa Ricaவின் ஆயர்கள் பேரவை நடத்தி முடித்த ஆண்டு கூட்டத்தின் இறுதியில் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையில், அரசு மேற்கொண்டு வரும் இம்முயற்சிகள் மக்கள் வாழ்வை எவ்வகையிலும் மேம்படுத்தப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.
தனி மனித உயிர், இயற்கைவழி அமையும் குடும்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுப்பப்படும் ஒரு சமுதாயமே உறுதியாக இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூறிய ஆயர்கள், இந்த நன்னெறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் தங்கள் எதிர்ப்பு உண்டு என்பதை எடுத்துரைத்தனர்.
பள்ளிகளில் சொல்லித் தரப்படும் பாலியல் கல்வியில் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டிய ஆயர் பேரவையின் இவ்வறிக்கை, வளரும் தலைமுறைக்கு நன்னெறிகளை தகுந்த முறையில் கற்றுத்தருவது இன்றைய தலைமுறையின் முக்கிய கடமை என்பதையும் கூறியது.
மார்ச் மாதத்தில் திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளில் மேற்கொள்ளும் திருப்பயணம் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திற்குமே ஓர் ஆன்மீக மறுமலர்ச்சியாக அமைய வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


7. இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் கர்தினால் மால்கம் இரஞ்சித் சந்திப்பு

பிப்.15,2012. இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை எதிர்த்து, போராட்டங்களைத் துவக்கிய மீன்பிடித் தொழிலாளிகளை கர்தினால் மால்கம் இரஞ்சித் மற்றும் பிற திருஅவை அதிகாரிகள் சந்தித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேசிய கர்தினால் இரஞ்சித், அவர்களது கோரிக்கைகளுக்குத் தலத் திருஅவையின் ஆதரவு உண்டு என்றும், தான் அரசு அதிகாரிகளுடன் பேச முயற்சிகள் செய்வதால், அவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இலங்கை அரசு துயர் துடைப்பையும் சலுகைகளையும் வழங்குவதற்குப் பதில், எரிபொருளுக்கு நியாயமான விலைகளை நிர்ணயிப்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீன்பிடித் தொழிலாளிகள் ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினர்.
Negombo, Kochchikade, Wennappuwa, Marawila, Chilaw, Mannar, Colombo ஆகிய நகரங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறியது.


8. அமெரிக்க உயர் அரசு அதிகாரி : ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்

பிப்.15,2012. இலங்கையில் போருக்கு பின்னர் அரசுத்தலைவரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகளை அமல்படுத்த இலங்கைக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் வரும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான சார்நிலைச் செயலர் மரியா ஒட்டேரா கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதைத் தெரிவித்தார்.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளை பாராட்டியுள்ள ஒட்டேரோ, அக்குழுவின் பரிந்துரைகளில் சில குறைபாடுகள் இருக்கின்ற போதிலும், பல முக்கிய விடயங்களில் அது கவனம் செலுத்தியிருப்பதாகவும், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, இராணுவ மயமாக்கலை குறைப்பது மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் போன்ற விடயங்களில் அது கணிசமான பரிந்துரைகளைச் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசுத்தலைவர் தம்மிடம் கூறியுள்ளதாகவும் ஒட்டேரோ குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் காலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிக உயர்ந்த அமெரிக்க அரசு அதிகாரி மரியா ஒட்டேரோ என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment