Wednesday, 15 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 14 பெப்ரவரி 2012

 
1. திருத்தந்தையின் இங்கிலாந்து திருப்பயணம், நெருங்கிய பிணைப்பை உருவாக்கியுள்ளது என்கிறார் இங்கிலாந்து அமைச்சர்

2. கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டிருந்த  கத்தோலிக்கக் கோவில் மீண்டும் வழிபாட்டுத் தலமாக மாற்றம் பெறுகிறது

3. ஆயர்கள், சமரசங்களைப் பேசும் அரசியல்வாதிகள் அல்ல, மக்களை வழிநடத்தும் மேய்ப்புப் பணியாளர்கள்

4. சிரியா இன்னொரு ஈராக்காக மாறும் ஆபத்து உள்ளது என்கிறார் அந்நாட்டு ஆயர்

5. கடவுளின் சாயலை முழுமையாக வெளிப்படுத்திய அன்னை மரியா தலை சிறந்த எடுத்துக்காட்டு - பங்களாதேஷ் ஆயர்

6. மியான்மாரில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு குழு கவலை

7. ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி உணவு நெருக்கடி குறித்து உயர் மட்ட ஆலோசனை

8. மணமுறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே என்கிறது ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் இங்கிலாந்து திருப்பயணம், நெருங்கிய பிணைப்பை உருவாக்கியுள்ளது என்கிறார் இங்கிலாந்து அமைச்சர்

பிப்.14,2012. 17 மாதங்களுக்கு முன்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இங்கிலாந்தில் மேற்கொண்ட திருப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருங்கிய பிணைப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார் அந்நாட்டு அமைச்சர் சயீதா வார்சி.
தட்பவெப்ப நிலை மாற்றம், மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் ஊக்குவிப்பு, அமைதி முயற்சிகள், ஏழ்மை அகற்றல்  போன்றவைகளில் வத்திக்கானும் இங்கிலாந்தும் ஒரே கொள்கைகளைக் கொண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் இதில் ஒன்றிணைந்து உழைக்க முடியும் எனவும் கூறினார் அமைச்சர் வார்சி.
மோதல்கள், பாகுபாட்டு நிலைகள் ஆகியவைகளைக் களைந்து, இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இங்கிலாந்தும் வத்திக்கானும் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இங்கிலாந்து அமைச்சர் வார்சி.
இப்புதனன்று பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் குழு ஒன்று, புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தையை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


2. கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டிருந்த  கத்தோலிக்கக் கோவில் மீண்டும் வழிபாட்டுத் தலமாக மாற்றம் பெறுகிறது

பிப்.14,2012. உக்ரைன் நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டிருந்த  கத்தோலிக்கக் கோவில் ஒன்றை மீண்டும் ஒரு வழிபாட்டுத் தலமாக மாற்றும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்நாட்டில் Dnipropetrovsk என்ற ஊரில் இருந்த புனித யோசேப்பு ஆலயம் கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டு, 1949ம் ஆண்டு ஒரு நூலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. கோவில் என்ற எண்ணத்தை அழிக்கும் ஒரு முயற்சியாக, அக்கோவிலின் முகப்பை அரசு மாற்றி அமைத்திருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளாக தலத்திருஅவைக்கும் அரசுக்கும் இடையே இக்கோவிலின் உரிமை குறித்து நிலவிவந்த வழக்கு தலத்திருஅவைக்குச் சாதகமாக முடிவடைந்ததால், கோவிலைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
'கம்யூனிசத்தின் நினைவுச் சின்னம்' என்று அரசால் அழைக்கப்பட்ட இக்கோவில் மீண்டும் திருஅவையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அடையாளம் என்று கப்பூச்சின் துறவு சபைத் தலைவரான அருள்தந்தை Grzegorz Romanowicz கூறினார்.
Aid to the Church in Need போன்ற பிறரன்பு நிறுவனங்கள் வழங்க முன்வந்துள்ள நிதி உதவிகளைக் கொண்டு இக்கோவிலின் முகப்பில் அரசு செய்திருந்த மாற்றங்களைக் களைந்து மீண்டும் இதனை ஒரு கோவிலாக மாற்றும் முயற்சிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று அருள்தந்தை Romanowicz எடுத்துரைத்தார்.
புதுப்பிக்கப்பட்டு வரும் புனித யோசேப்பு ஆலயம், 60,000 கத்தோலிக்கர்களைக் கொண்ட Kharkiv - Zaporizhia மறைமாவட்டத்தைச் சேர்ந்தது.


3. ஆயர்கள், சமரசங்களைப் பேசும் அரசியல்வாதிகள் அல்ல, மக்களை வழிநடத்தும் மேய்ப்புப் பணியாளர்கள்

பிப்.14,2012. ஆயர்களாக பணியாற்றும் நாங்கள் சமரசங்களைப் பேசும் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக, மக்களை வழிநடத்தும் மேய்ப்புப் பணியாளர்கள் என்று நியூயார்க் பேராயரும், இவ்வார இறுதியில் கர்தினாலாக உயர்த்தப்பட உள்ளவருமான பேராயர் Timothy Dolan கூறினார்.
அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவின் தலைமையில் அமெரிக்க அரசு அறிவித்துள்ள நலவாழ்வு திட்டத்தில் கத்தோலிக்க மக்களின் மனசாட்சிக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பை அடுத்து, இத்திட்டத்தில் மாற்றங்களை உருவாக்கி, ஒரு சமரச முயற்சியில் ஒபாமா அரசு ஈடுபட்டது. அரசின் இந்த முயற்சிகள் இத்திட்டத்தில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் உருவாக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஆயர் அவையின் தலைவரான பேராயர் Dolan, மனசாட்சி சார்ந்த கொள்கைகளில் சமரசங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
இச்சனிக்கிழமை கர்தினாலாக உயர்த்தப்படுவதற்கு உரோம் நகர் வந்துள்ள பேராயர் Dolan கூறிய கருத்துக்களைப் போலவே, பிலடெல்பியா பேராயர் Charles Chaput, மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் முன்னாள் பேராயர் கர்தினால் Roger Mahony ஆகியோரும் ஒபாமாவின் சமரச முயற்சிகளுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.


4. சிரியா இன்னொரு ஈராக்காக மாறும் ஆபத்து உள்ளது என்கிறார் அந்நாட்டு ஆயர்

பிப்.14,2012. பகைமை மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவில் ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய பேச்சுவார்த்தைகள் ஊக்குவிக்கப்படவில்லையெனில் அந்நாடு இன்னொரு ஈராக்காக மாறும் ஆபத்து உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Antoine Audo.
வெவ்வேறு குழுக்களிடையே பழிவாங்கும் உணர்வுகளுக்கு ஊக்கமளிப்பதை கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமளிப்பது சர்வதேச சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டும் என்று கூறிய அலெப்போ மறைமாவட்ட கல்தேய ரீதி ஆயர் Audo, வன்முறைகள் பெருகியுள்ள போதிலும் குடிமக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றார்.
உயிரிழந்த இஸ்லாமிய குடும்பங்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கச் சென்ற இரு கிறிஸ்தவர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் ஆயர் Audo.
இனம், மதம் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து சிரிய மக்களும் வன்முறைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன் கவலையை வெளியிட்டார் ஆயர் Audo.


5. கடவுளின் சாயலை முழுமையாக வெளிப்படுத்திய அன்னை மரியா தலை சிறந்த எடுத்துக்காட்டு - பங்களாதேஷ் ஆயர்

பிப்.14,2012. கடவுள் மனிதரிடையே தன் சாயலைக் காண விழைகிறார், கடவுளின் சாயலை முழுமையாக வெளிப்படுத்திய அன்னை மரியா நமக்கெல்லாம் தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.
பங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கருகே Diang என்ற இடத்தில் அமைந்துள்ள பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவைக் குறித்துப் பேசிய சிட்டகாங் மறைமாவட்டத் துணை ஆயர் Lawrence Subrata Howlader இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தத் திருப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Diangல் அமைந்துள்ள தலத் திருஅவை இயேசு சபை குருக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1602ம் ஆண்டு அங்கு அருள்பணி செய்த இயேசு சபை குரு Francesco Fernandez, அப்பகுதியைத் தாக்கிய கொள்ளைக் காரர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்.
1940களில் அப்பகுதியில் திருச்சிலுவை துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரர் Flavian Laplante பணிபுரிந்தபோது, பாத்திமா அன்னை திருத்தலத்தை உருவாக்கினார்.
1981ம் ஆண்டு மறைந்த அருள்சகோதரர் Laplanteஐப் புனிதராக்கும் முயற்சிகளின் ஆரம்ப கட்டமாக, அவர் ஓர் இறையடியாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


6. மியான்மாரில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு குழு கவலை

பிப்.14,2012. மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் மிகப்பெரிய அளவில் தொடர்வதாக அந்நாட்டில் அண்மையில் பயணம் மேற்கொண்டு திரும்பிய உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படுவது, பாலியல் வன்முறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாவது, வீடுகளும் கோவில்களும் சேதமாக்கப்படுதல் போன்றவை தொடர்ந்து இடம்பெறுவதாக அம்மாநில மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று CSW என்ற இந்த அமைப்பு அறிவிக்கிறது.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது, ஆங் சான் சூ கீயும் அவரின் கட்சியும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது போன்ற நல்ல மாற்றங்கள் இடம்பெறுகின்ற போதிலும், உரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக இக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மியான்மாரின் அனைத்து தேசிய இனங்களையும், மக்களாட்சி இயக்கங்களையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியானப் பேச்சுவார்த்தைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


7. ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி உணவு நெருக்கடி குறித்து உயர் மட்ட ஆலோசனை

பிப்.14,2012. வறட்சியாலும் உணவுப் பற்றாக்குறையாலும் பல இலட்சக்கணக்கானோரின் உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதியில் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்து இப்புதனன்று உரோம் நகரில் உயர்மட்ட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவன உதவி அமைப்புகள், மனிதபிமான நிறுவனங்கள் மற்றும் உதவும் நாடுகள் இணைந்து உரோம் நகரின் WFP என்ற உலக உணவு திட்ட நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்த உள்ள கூட்டம் குறித்து எடுத்துரைத்த அந்நிறுவனத்தின் உயர்மட்ட இயக்குனர் Josette Sheeran, சாஹேல் பகுதி மக்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவே என்றார்.
பருவம் தவறிய மழையாலும், மழையின்மையாலும் சாஹேல் பகுதியில் உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


8. மணமுறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே என்கிறது ஆய்வு

பிப்.14,2012. இன்றைய உலகில் மணமுறிவுகள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே என்கிறது அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று.
திருமணம் மற்றும் மதம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் அண்மையில் 'குழந்தைகளின் மீது மணமுறிவுகளின் பாதிப்பு' என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
மணமுறிவுகளால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவே முதலில் பாதிக்கப்படும் ஒன்று எனக்கூறும் இந்த ஆய்வு, மணமுறிவுப் பெற்ற தாயுடன் வாழும் குழந்தைகளுள் 40 விழுக்காட்டினர் பெருமளவில் இதன் பாதிப்புகளை அனுபவிப்பதாகவும், பாதிக்கப்படும் குழந்தைகளுள் பெரும்பான்மையினோர் தங்கள் விசுவாசத்தை இழப்பதாகவும் தெரிவிக்கிறது.
மணமுறிவு பெறும் பெற்றோரின் குழந்தைகள், கல்வியறிவு பெறுவதிலும் பின்தங்கியிருப்பதாக அண்மை ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின்படி, மணமுறிவு பெற்ற குடும்பங்களில் வாழும் குழந்தைகளுள் 33 விழுக்காட்டினரே கல்லூரி படிப்பை நிறைவு செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒரு சமூகத்தில் மணமுறிவுகளால் குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பம், திருச்சபை, பள்ளி, அரசு போன்றவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...