Sunday, 5 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 04 பெப்ரவரி 2012

 
1. பிப்ரவரி 17, அனைத்துக் கர்தினால்களுடன் திருத்தந்தை செபம், சிந்தனை

2. ஊழலுக்கு எதிரான போராட்டம், நம்பிக்கையின் அடையாளம் - இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்

3. உரோமையில் ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர்கள் கூட்டம்

4. பிலிப்பீன்சில் 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி

5. பிப்ரவரி 4, அனைத்துலகப் புற்றுநோய் தினம்

6. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,600 கைதிகள் விடுதலை

7. 50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும், சிவகங்கையில் அறிவியலாளர் எச்சரிக்கை

8. ஐரோப்பாவில் கடும் குளிர், உக்ரைனில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

-------------------------------------------------------------------------------------------

1. பிப்ரவரி 17, அனைத்துக் கர்தினால்களுடன் திருத்தந்தை செபம், சிந்தனை

பிப்.04,2012. திருஅவையில் புதிய கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 18ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்துக் கர்தினால்கள் மற்றும் புதிதாகக் கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து, அதற்கு முந்தைய நாளை, செபம் மற்றும் சிந்தனை நாளாகக் கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 17ம் தேதி காலை 10 மணிக்குத் திருப்புகழ்மாலை செபத்துடன் ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு, திருப்புகழ்மாலை செபத்துடன் இந்நாள் நிறைவடையும்.
இன்று நற்செய்தி அறிவித்தல், திருஅவையின் மறை அறிவிப்பும் புதிய நற்செய்திப்பணியும் என்ற தலைப்பில் இச்செப நாள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாகக் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள 22 பேரில் ஒருவரான இயேசு சபை அருள்தந்தை Karl Josef Becker, உடல்நலம் காரணமாக, இம்மாதம் 18ம் தேதியன்று இடம் பெறும் நிகழ்வில் கர்தினாலாக உயர்த்தப்படமாட்டார், ஆனால் வேறொரு  நாளில் அவர் கர்தினாலாக உயர்த்தப்படும் திருவழிபாடு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஊழலுக்கு எதிரான போராட்டம், நம்பிக்கையின் அடையாளம் - இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்

பிப்.04,2012. இந்தியாவில் ஊழலை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென்று பொது மக்கள் மிகுந்த உறுதியுடன் வலியுறுத்தி வருவது, நம்பிக்கையின் அடையாளமாகத் தெரிகின்றது என்று இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது இவ்வாறு கூறினார் ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா.
இந்தியாவை அண்மை ஆண்டுகளில் உலுக்கியுள்ள ஊழல்களும் துர்மாதிரிகைகளும், பொது மக்கள் மத்தியில், அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கும் இத்தகைய சமூக மற்றும் அரசியல் விவகாரங்களுக்குத் திருஅவையும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறிய பேராயர் டி சூசா, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளைக் காப்பதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் திருஅவை எடுத்த செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டினார்.
170 ஆயர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டம், இம்மாதம் 8ம் தேதி முடிவடையும். 

3. உரோமையில் ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர்கள் கூட்டம்

பிப்.04,2012. இன்று நற்செய்தி அறிவித்தல் : ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே மேயப்புப்பணி ஒத்துழைப்பு. மனிதனும் கடவுளும் : கடவுளின் இருப்பையும் அன்பையும் அறிவிப்பதற்குத் திருஅவையின் பணி என்ற தலைப்பில் இம்மாதம் 13 முதல் 17 வரை உரோமையில் கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது.
ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தில், ஆப்ரிக்கா, ஐரோப்பா, திருப்பீடப் பிரதிநிதிகள், பிறரன்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என சுமார் 70 பேர் கலந்து கொள்வார்கள்.
2004ம் ஆண்டில், இவ்விரு கண்டங்களுக்கு இடையே தொடங்கிய மேயப்புப்பணி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இக்கூட்டம் இடம் பெறவிருக்கின்றது.
இவ்வாண்டு அக்டோபரில் தொடங்கவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாகவும் இக்கூட்டம் இடம் பெறவிருக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. பிலிப்பீன்சில் 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி

பிப்.04,2012. பிலிப்பீன்சைத் தாக்கும் எல்லாவிதமான இயற்கைப் பேரிடர்களின் போது, செயல்படும் முறை குறித்து கற்றுக் கொடுப்பதற்கென, 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கு அந்நாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் திட்டமிட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம் 143என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சித் திட்டத்தின்கீழ், அந்நாட்டின் 42 ஆயிரம் கிராமங்களிலிருந்து, ஒவ்வொரு கிராமத்திற்கும் 44 தன்னார்வப் பணியாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவசரகாலப்பணி செய்யக் கற்றுக் கொடுக்கப்படுவார்கள் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது
2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை, பிலிப்பீன்சின் 60 விழுக்காட்டு கிராமங்களில், தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
2011ம் ஆண்டில் மட்டும் 33 இயற்கைப் பேரிடர்கள், பிலிப்பீன்சைத் தாக்கியுள்ளன.

5. பிப்ரவரி 4, அனைத்துலகப் புற்றுநோய் தினம்

பிப்.04,2012. புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால், அந்நோயினால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் இடம் பெறும் சுமார் 80 இலட்சம் இறப்புக்களைக் குறைக்க முடியும் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
பிப்ரவரி 4ம்தேதியான இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலகப் புற்றுநோய் தினத்தையொட்டி இவ்வாறு தெரிவித்த WHO நிறுவனம், நலமாக வாழ்வோருக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையை எளிதாக்க முடியும் என்றும் கூறியது.
உலகில் இடம் பெறும் இறப்புக்களில் சுமார் 13 விழுக்காட்டிற்குப் புற்றுநோய் காரணம் எனவும், 2008ம் ஆண்டில், 76 இலட்சம் பேர் புற்றுநோயால் இறந்தனர் எனவும் WHO கூறியது.
ஒன்று சேர்ந்தால் இயலக்கூடியதேஎன்ற தலைப்பில், WHO நிறுவனமும், அதனோடு தொடர்புடைய பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனமும் சேர்ந்து இவ்வுலக நாளைக் கடைபிடித்தன.

6. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,600 கைதிகள் விடுதலை

பிப்.04,2012. இலங்கையின் 64வது சுதந்திர தினமான இச்சனிக்கிழமையன்று 1,600 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அறிவிக்கப்ப்டடுள்ளது.
சிறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும், 70 வயதுக்கு மேற்பட்ட சில கைதிகளும் அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளை மூடி அதற்குப் பதிலாக மறுவாழ்வு மையங்களை அமைப்பதே அரசுத்தலைவரின் நோக்கமாக உள்ளதாகவும், சிறைக் கைதிகளின் மறுவாழ்விற்காக இருபது கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தத் துறை அமைச்சர் Chandrasiri Gajadeera தெரிவித்துள்ளார்.

7. 50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும், சிவகங்கையில் அறிவியலாளர் எச்சரிக்கை

பிப்.04,2012. "அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில், 20 நாடுகள், உலக வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என அறிவியலாளர் ராம்ஜி எச்சரித்தார்.
"கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை'  என்ற தலைப்பில் சிவகங்கையில் நடைபெற்ற பயிற்சிப் பாசறையில் உரையாற்றிய, மாநில சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் தலைவரான  ராம்ஜி இவ்வாறு பேசினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது எனவும், இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன எனவும், அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது, இவற்றில் இந்தியா உட்பட 16 தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடங்கும் என்று பேசிய ராம்ஜி, கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன என்று கூறினார்.

8. ஐரோப்பாவில் கடும் குளிர், உக்ரைனில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிப்.04,2012. ஐரோப்பாவில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் காலநிலை, மைனஸ் 35 செல்சியுஸ் டிகிரியாக இருப்பதால், கடும் குளிரினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
உக்ரைனில் மட்டும், நூற்றுக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 64 பேர் தெருக்களில் இறந்து கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் குடியிருப்பு வசதி இல்லாதவர்களே அதிகம் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இன்னும், போலந்து, சைபீரியா, பல்கேரியா மற்றும்பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இறப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment