Thursday, 2 February 2012

கத்தோலிக்க செய்திகள்: 01 பெப்ரவரி 2012

 1. வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் புதிய முதுபெரும் தலைவர்

2. திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்கள்

3. இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்தைப் பற்றிய விவரங்கள்

4. காஷ்மீரில் Sharia நீதி மன்றம் விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது - கர்தினால் கிரேசியஸ்

5. பாகிஸ்தான் முன்னேறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் - ஆயர் Anthony Rufin

6. அமெரிக்க அரசுத் தலைவர் அண்மையில் வெளியிட்டுள்ள நலவாழ்வு திட்டங்களுக்கு அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு

7. ஹாங்காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், அருள்பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன

8. மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் பதவி விலகல்

------------------------------------------------------------------------------------------------------

1. வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் புதிய முதுபெரும் தலைவர்

பிப்.01,2012. இத்தாலி நாடும், ஐரோப்பாவும் தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடியை வெறும் பொருளாதார நெருக்கடியாகப் பார்ப்பதைக் காட்டிலும் ஒரு கலாச்சார மற்றும் மனித இன நெருக்கடியாகப் பார்ப்பது முக்கியம் என்று இத்தாலிய ஆயர் ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Francesco Moraglia, வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய ஒரு பேட்டியில், தன்னைத் திருத்தந்தை இப்பொறுப்பில் நிறுவியதைக் கேட்டதும் தனக்குள் உருவான அச்சத்தையும் குறிப்பிட்டார்.
375,000க்கும் அதிகமான கத்தோலிக்கர்களைக் கொண்ட வெனிஸ் உயர்மறை மாவட்டத்தின் பொறுப்பு, திருஅவையில் ஒரு முக்கியப் பொறுப்பு என்று கருதப்படுகிறது.
58 வயது நிரம்பிய ஆயர் Moraglia, இத்தாலியின் ஜெனோவாவில் பிறந்தவர். இவர் 1977ம் ஆண்டு குருவாகவும், 2008ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பத்தாம் பத்திநாதர், 23ம் ஜான், மற்றும் முதலாம் ஜான் பால் என்ற பெயர்களைத் தாங்கி, இருபதாம் நூற்றாண்டில் திருஅவையை வழிநடத்திய மூன்று திருத்தந்தையர் வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும் தலைவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


2. திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்கள்

பிப்.01,2012. வருகிற மார்ச் மாதம் 23 முதல் 29 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தின் விவரங்களை இச்செவ்வாயன்று வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மார்ச் 23 வெள்ளியன்று காலை உரோம் நகர் லியோனார்தோ த வின்சி பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து கிளம்பும் திருத்தந்தை, முதலில் மெக்சிகோ நாட்டிற்குச் செல்கிறார்.
மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள் மெக்சிகோவில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, மார்ச் 26 மாலையில்  க்யூபா சென்றடைகிறார். மார்ச் 27 மற்றும் 28 ஆகிய இருநாட்கள் அந்நாட்டில் திருப்பயணம் நிகழ்த்தியபின், 29ம் தேதி காலை மீண்டும் உரோம் நகர் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளின் திருப்பயணங்களில் திருத்தந்தை பத்து இடங்களில் உரையாற்றுவார் என்று தெரிகிறது.


3. இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்தைப் பற்றிய விவரங்கள்

பிப்.01,2012. இந்திய சமுதாயத்தை முன்னேற்றும் முயற்சிகளில் கத்தோலிக்கத் திரு அவை பெருமளவில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்தியாவில் தற்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையையும், மருத்துவ முறையையும் நிறுவிய பெருமை திருஅவையையேச் சாரும் எனவும் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
'சிறந்ததொரு இந்தியாவை உருவாக்க திரு அவையின் பங்கு' என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று பெங்களூருவில் ஆரம்பமாகியுள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 30வது பொதுக்குழு கூட்டத்தைப் பற்றி இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் கிரேசியஸ், இப்பேரவையின் விவரங்களை வெளியிட்டார்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், Misereor என்ற அகில உலக பிறரன்பு அமைப்பின் இயக்குனர் முனைவர் Josef Sayer, மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் Navin Chawla, ஆகியோர் உட்பட, பல அறிஞர்கள் வழங்கும் முக்கிய உரைகள் இடம்பெறும் என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
பெங்களூருவில் உள்ள புனித ஜான் மருத்துவ ஆய்வு தேசிய நிறுவனத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், கத்தோலிக்கத் திருஅவை இன்னும் என்னென்ன வழிகளில் இந்திய சமுதாயத்தை உயர்த்தமுடியும் என்ற விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் கிரேசியஸ் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.32 விழுக்காடே ஆயினும், இந்திய நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு தலத்திருஅவையின் பங்களிப்பு எவ்விதத்திலும் குறைவுபடாது என்று ஆயர் பேரவையின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.
நிருபர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெங்களூரு பேராயர் Bernard Moras, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலர் பேராயர் Albert D’Souza உட்பட பலரும் கலந்து கொண்டு பல தகவல்களை வழங்கினர்.


4. காஷ்மீரில் Sharia நீதி மன்றம் விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது - கர்தினால் கிரேசியஸ்

பிப்.01,2012. காஷ்மீரில் இருந்து கிறிஸ்தவ குருக்களும் போதகர்களும் வெளியேற வேண்டும் என்று Sharia நீதி மன்றம் விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
காஷ்மீரில் நிலவும் பதட்ட நிலை குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது, கர்தினால் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
மக்களை வலுக்கட்டாயமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவது கத்தோலிக்கத் திருஅவைக்கு புறம்பான ஒரு செயல் என்று விளக்கிய கர்தினால் கிரேசியஸ், அதே நேரம், மனமுவந்து ஒருவர் மதமாற்றம் அடைவதைத் தடுப்பதும் ஒருவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயல் என்று சுட்டிக் காட்டினார்.
Sharia நீதி மன்றம் எடுத்துள்ள இந்த முடிவு பிற மதங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றதல்ல என்றும், இது போன்ற அமைப்புக்களை வளரவிடுவது குடியரசு நாட்டின் அதிகாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.
கத்தோலிக்கத் திருஅவை அல்லாமல், பிற கிறிஸ்தவ சபைகளும் காஷ்மீரில் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கத்தோலிக்கக ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப், பிற சபைகள் மேற்கொள்ளும் மதமாற்ற முயற்சிகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை பொறுப்பேற்காது என்பதையும் எடுத்துரைத்தார்.


5. பாகிஸ்தான் முன்னேறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் - ஆயர் Anthony Rufin

பிப்.01,2012. சமுதாயத்தில் நடப்பவற்றை அறிவுப்பூர்வமாகவும், தெளிவாகவும் கண்டுணர கல்வி மிகவும் அவசியம் என்பதால், பாகிஸ்தான் முன்னேறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் ராவல்பிண்டி மறைமாவட்டத்தின் ஆயர் Anthony Rufin இவ்வாரம் முழுவதும் தன் மறைமாவட்டத்தில் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசி வருவதாக ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும் கலாச்சாரத்தைச் சரிவர புரிந்துகொள்வதற்கு கல்வி ஒரு முக்கிய கருவி என்பதால், நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் பயின்று, மற்றவர்களைப் புரிந்து கொள்வதற்கு கல்விக் கூடங்கள் மிகவும் அவசியம் என்று ஆயர் Rufin மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கூறி வருவதாக இப்பேட்டியில் குறிப்பிட்டார்.
சமுதாயத்தின் விளிம்பில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கல்வியின் அவசியம் மிக அதிகம் உள்ளது என்பதையும் ஆயர் Rufin வலியுறுத்தினார்.
18 கோடி மக்களைக் கொண்ட பாகிஸ்தானில், 2 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் கல்வி அறிவு பெறும் உரிமையை இழந்துள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. அமெரிக்க அரசுத் தலைவர் அண்மையில் வெளியிட்டுள்ள நலவாழ்வு திட்டங்களுக்கு அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு

பிப்.01,2012. அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அண்மையில் வெளியிட்டுள்ள நல வாழ்வு பேணும் திட்டங்கள் கத்தோலிக்க மனசாட்சிக்கு எதிரானவை என்றும் இவைகளை அரசு மாற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவர் என்றும் நியூயார்க் பேராயர் Timothy Dolan தெரிவித்தார்.
அமெரிக்க அரசு அண்மையில் வெளியிட்டுள்ள இத்திட்டத்தில் கருக்கலைப்புக்குத் தேவையான முறைகளும், மருந்துகளும் மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவதால், இது கத்தோலிக்கர்களின் மனசாட்சிக்கு எதிராக அமைந்துள்ளது என்பதை அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Dolan சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவின் 197 மறைமாவட்டங்களில் உள்ள ஆயர்களில் இதுவரை 126 ஆயர்கள் இத்திட்டத்திற்கு எதிராகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவின் American Papist blog என்ற வலைத்தளம் கூறியுள்ளது.


7. ஹாங்காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், அருள்பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன

பிப்.01,2012. ஹாங்காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையும், அருள்பணியில் ஈடுபட முன்வருவோரின் எண்ணிக்கையும் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன என்று அண்மையில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.
ஹாங்காங் கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளி விவரங்களின் படி, 1954ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றும் தெரிகிறது.
2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங் பகுதியில், 350,000 பேர் கத்தோலிக்கர்கள் என்றும், பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து அங்கு பணிகள் செய்வதற்கு வந்திருப்போரையும் சேர்த்தால், இவ்வெண்ணிக்கை 5,30,000 ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அருள்பணியில் இணையும் இளையோரின் எண்ணிக்கை கூடினாலும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ற அளவு திருப்பணியாளர்கள் இல்லை என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


8. மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் பதவி விலகல்

பிப்.01,2012. இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடுநிலையோடு, அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால், தான் இந்தத் தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக மெண்டிஸ் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார்.
மனித உரிமைகளுக்கான மிகச்சிறந்த ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கை அரசுத்தலைவரின் கோரிக்கையின் பேரில் தான் ஆணைக்குழுவில் இணைந்து கொண்டதாகவும், ஆனால் அந்த இலக்கை அடைய முடியாதபடி பல்வேறு இடையூறுகள் தனக்கு இருந்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆணைக்குழுவுக்குள் இருக்கும் தன்னால் பெயர் குறிப்பிட்டுக் கூற முடியாத நபர்களின் செயல்பாடுகளே தனது பணிகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் தனது பதவி விலகல் அரசுத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...