Thursday, 2 June 2011

Catholic News - hottest and latest - 31May 2011

1.    தேவ அழைத்தலுக்கான 60 மணி நேர திருநற்கருணை ஆராதனை வழிபாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.

2.    ஹங்கேரியில் 6 நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்த பயணம் மேற்கொள்கிறார் பேராயர் வேலியோ

3.    வெளிநாட்டு வீட்டுப்பணியாளர்களுக்காகக் குரலை எழுப்பியுள்ளது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு

4.    கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது பிஜேபி அரசு.

5.    இயேசுவை இறைவாக்கினராக மட்டும் காட்டும் ஆஸ்திரேலிய விளம்பரம் அகற்றப்படுமாறு ஆயர் விண்ணப்பம்

6.    இலங்கைப் போர்க்குற்ற காட்சிகள் உண்மையே, ஐ.நா உரைக்கிறது

7.    புகையிலைப் பயன்பாட்டால் ஆண்டுக்கு 60 லட்சம் மரணம்

8.    உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் 2030ம் ஆண்டில் இரண்டு மடங்காகும்

----------------------------------------------------------------------------------------------------------------
1.    தேவ அழைத்தலுக்கான 60 மணி நேர திருநற்கருணை ஆராதனை வழிபாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.

மே 31, 2011.   திருத்தந்தை 16ம் பெனடிக்டின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் அறுபதாம் ஆண்டு நிறைவு இந்த ஜூன் மாதம் 29ந்தேதி இடம்பெற உள்ளதை முன்னிட்டு உலகக் கத்தோலிக்கர்கள் அனைவரும், தேவ அழைத்தலுக்கான 60 மணி நேர திருநற்கருணை ஆராதனை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் ஜூன் மாதம் முழுவதும் திருநற்கருணை முன் தேவ அழைத்தலுக்கென செபவழிபாடுகள் இடம்பெறும் எனவும், அது இயேசுவின் திரு இதய விழாவும் குருக்களுக்கான உலக செப நாளுமான ஜூலை முதல் தேதி நிறைவுக்கு வரும் எனவும் ஆயர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் எடுத்துக்காட்டு மற்றும் பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குருக்களுக்காகவும் தேவ அழைத்தலுக்காகவும் செபிப்பதாகவும் ஜூன் மாத ஆன்மீகக் கொண்டாட்டங்கள் இருக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.

2.    ஹங்கேரியில் 6 நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்த பயணம் மேற்கொள்கிறார் பேராயர் வேலியோ

மே 31, 2011.   இப்புதன் முதல் ஆறு நாட்களுக்கு ஹங்கேரியில் மேய்ப்புப்பணிச் சார்ந்த பயணத்தை மெற்கொள்ள உள்ளார் குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ.
இவ்வியாழனன்று, பூடாபெஸ்டில் இடம்பெறும் கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாமியர் இடையேயான கருத்தரங்கில் உரையாற்ற உள்ள பேராயர், அதற்கு மறு நாள் 'ஐரோப்பாவிற்கான புதிய நற்செய்தி அறிவிப்பில் திருத்தல‌ங்களின் பங்கு' என்பது குறித்து உரை வழங்குவார்.
சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் Mariapocs  திருத்தலத்தில் 'நாடோடி இனத்தவரின் குடும்பங்கள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலிலும் கலந்து கொள்வார் பேராயர் வேலியோ.
ஞாயிறன்று அந்நாட்டில் நிறைவேற்ற உள்ள திருப்பலியில் நாடோடி இனத்தைச்
சேர்ந்த 33 குழந்தைகளுக்குப் புது நன்மை வழங்குவார்.

3.    வெளிநாட்டு வீட்டுப்பணியாளர்களுக்காகக் குரலை எழுப்பியுள்ளது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு

மே 31, 2011.   பணக்கார நாடுகளில் வீட்டுவேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கும் வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் என அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.
ஜூன் மாதம் முதல் தேதி, இப்புதன் முதல் ஜூன் 17 வரை ஜெனிவாவில் இடம்பெற உள்ள அனைத்துலகத் தொழிலாளர் கருத்தர‌ங்கில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, வீட்டுப்பணியாளர்களாக வெளிநாடுகளில் வாழ்வோரின் உரிமைகளைக் காக்க வேண்டியது அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கட‌மை என்றது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படாமல் பாதுகாப்பது, வீட்டுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கானக் கல்வியை உறுதி செய்தல், பணியாளர்கள் சட்ட உதவியைப் பெற வழி செய்தல், போன்றவைகளுக்கான விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.

4.     கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது பிஜேபி அரசு.

மே 31, 2011.   கர்நாடகாவின் சிறுபான்மைக் கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அம்மாநிலத்தின் பிஜேபி அரசு.
கிறிஸ்தவச் சபைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கென 15 கோடியை ஒதுக்குவதாக உரைக்கும் கர்நாடக அரசு, கிறிஸ்தவர்களுக்கானச் சமூக மையங்கள் கட்டுவதற்கும், ஏழை மாணவர்களுக்கான நிதியுதவிகளுக்கும், கிறிஸ்தவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கும் என 35 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறது.
2011-2012ம் ஆண்டிற்கான மாநில நிதித்திட்டத்தில் 50 கோடியைக் கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்கென கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளதென செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

5.       இயேசுவை இறைவாக்கினராக மட்டும் காட்டும் ஆஸ்திரேலிய விளம்பரம் அகற்றப்படுமாறு ஆயர் விண்ணப்பம்

மே 31, 2011.   'இயேசு, இஸ்லாமியரின் இறைவாக்கினர்' என்ற வாசகத்துடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
இஸ்லாமும் இயேசுவை ஓர் இறைவாக்கினராக ஏற்று அவரை நம்புகிறது என்பதை வெளிப்படுத்தி இருதர‌ப்பினரிடையே உறவை வளர்க்கவே இத்தகைய விளம்பரத்தை வைத்ததாக இஸ்லாமியக் குழு ஒன்று அறிவித்துள்ள போதிலும், இந்த வாசகங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக உள்ளதாக அறிவித்தார் சிட்னியின் துணை ஆயர் ஜூலியன் போர்தெயோஸ் (Julian Porteous).
இறைமகனாகிய இயேசு, ஆண்டவரும் மனித குல மீட்பருமாக நோக்கப்படுவதை மறுப்பதாக இவ்விளம்பர வாசகம் உள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார்.

6.       இலங்கைப் போர்க்குற்ற காட்சிகள் உண்மையே, ஐ.நா உரைக்கிறது

மே 31, 2011.   இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக, பிரிட்டனின் "சேனல்-4' வெளியிட்ட வீடியோக் காட்சிகள் அத்தனையும் உண்மையே  என, ஐ.நா., மனித உரிமைகள் விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்திங்கள் துவங்கியுள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் 17வது அவைக்கூட்டம் மூன்று வாரங்களுக்கு இடம்பெற உள்ள நிலையில்,  ஐ.நா. மனித உரிமைகள் விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்டப் பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"சேனல்-4' வெளியிட்ட வீடியோக் காட்சிகளை, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தியதில் அவை அனைத்தும் உண்மை என்று உறுதியாகியுள்ளதாகவும், நடந்ததை நடந்தபடி அந்த வீடியோக் காட்சிகள் காட்டுகின்றன எனவும் கூறினார்.
மக்களை நிர்வாணமாக நிற்க வைத்து, இலங்கை இராணுவ வீரர்கள் சுட்டுத் தள்ளியக் கொடூரக் காட்சிகள் அடங்கிய, ஐந்து நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ குறித்துப் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார் ஹெய்ன்ஸ்.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா., அமைத்த மூவர் குழு, பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளது பற்றி ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தின் துவக்க உரையில் குறிப்பிட்ட அதன் தலைவர் நவிநீதம் பிள்ளை,  மூவர் குழு கவனத்துக்கு கொண்டு வந்துள்ள இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து,  ஐ.நா அவை கட்டாயமாக பரிசீலிக்கும் எனவும், தன் மீதானக் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு விரைவில் நம்பத்தகுந்த பதில்களை அளிக்க வேண்டும்  எனவும் கூறியுள்ளார்.

7.       புகையிலைப் பயன்பாட்டால் ஆண்டுக்கு 60 லட்சம் மரணம்

மே 31, 2011.   ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் உயிரிழப்பதில், 70 விழுக்காட்டினர்  வளரும் நாடுகளில் உள்ளனர்  என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார் எனக்கூறும் இவ்வமைப்பு, புகையிலை மற்றும் சிகரெட்டால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழப்பது, 2030க்குள் 80 இலட்சத்திற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எனவும் கணித்துள்ளது.
மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், நீரழிவு நோய், பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, இரத்தக்கொதிப்பு ஆகியவைகளுக்குக் காரணமாக இருக்கும் புகையிலைப் பயன்பாடு, மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கியக் காரணியாக உள்ளது.

8.        உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் 2030ம் ஆண்டில் இரண்டு மடங்காகும்

மே 31, 2011.   உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் 2030ம் ஆண்டில் இரண்டு மடங்காகும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது  OXFAM எனும் பிறரன்பு அமைப்பு.
உலக அளவிலான உணவு அமைப்பு முறைகளில் நல்ல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லையெனில், இருபது ஆண்டுகளில் உணவுப்பொருட்களின் விலை இரு மடங்காகும் என எச்சரிக்கும் இவ்வமைப்பு, இதற்கான பாதி காரணம் தட்ப வெப்ப நிலை மாற்றமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் போதிய உணவை வழங்க இவ்வுலகால் இயலும் எனினும், மொத்த மக்கள் தொகையில் ஏழுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இன்று மக்கள் பசியால் வாடுவது கவலை தருவதாக உள்ளது எனவும் கூறுகிறது OXFAM பிறரன்பு அமைப்பு.
உலகில் உணவுப்பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 36 விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment