Wednesday, 29 June 2011

Catholic News - hottest and latest - 27 June 2011

 
1. ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை

2.தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்கிறார் திருத்தந்தை

3.உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை திருநற்கருணை என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்

4. மத உரிமைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை கடிதம்

5. போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அழைப்பு விடுக்கிறது கோவா தலத்திருச்சபை

6. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால்

7. உலகில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை

ஜூன் 27, 2011.   புனிதர்களாக அறிவிப்பதற்கான படிகளுக்கென ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 இறையடியார்களின் பெயர்களை இத்திங்களன்று பெற்று அதற்கான தனது ஒப்புதலையும் வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனிதர்படிநிலைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவிடம் இருந்து இப்பெயர்களுக்கானப் பரிந்துரைகளைப் பெற்ற திருத்தந்தை நான்கு இறையடியார்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள், மறைசாட்சியாக உயிரிழந்த மூன்று இறையடியார்களின் பெயர்கள், வீரத்துவ பண்புகளுக்காக எட்டு இறையடியார்களின் பெயர்கள் ஆகியவைகளை ஏற்று ஒப்புதல் வழங்கினார்.
வணக்கத்துக்குரிய இறையடியார்கள், இத்தாலியின் Mariano Arciero, பிரான்சின் Giovanni Giuseppe Lataste, மெக்ஸிகோவின் Maria Agnese Teresa, ஜெர்மனியின் Ildegarda Burjan ஆகியவர்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள் திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ள‌ப்பட்டன.
மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பெயினின் இறையடியார்கள் Salvio Huix Miralpeix, Giuseppa Martínez Pérez, ஆஸ்திரியாவின் இறையடியார் Carlo Lampert ஆகியவர்களின் பெயர்களுடன், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக, இந்தியாவின் Matteo Kadalikattil, இத்தாலியின் முத்திப்பெற்ற‌ Giovanni Marinoni, இறையடியார்கள் Raffaele Dimiccoli, Maria Giuseppina Benvenuti, Laura Meozzi, Luigia Tincani, இஸ்பெயினின் Giuseppe Maria García Lahiguera போலந்தின் Sofia Czeska-Maciejowska ஆகியோர்களின் பெயர்களும் புனிதர் பட்ட நிலைக்கானப் படிகளுக்கென திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.

2.தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்கிறார் திருத்தந்தை

ஜூன் 27, 2011.   மேற்கத்திய நாடுகள் மூழ்கிப்போயிருக்கும் மற்றும் உலகம் முழுமையும் பரவிப்போயிருக்கும் தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருச்சபை எனும் மறையுடலுக்கு வாழ்வை வழங்கும் இதயம் திருநற்கருணையே என இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, திருநற்கருணையின்றி திருச்சபையால் உயிர் வாழமுடியாது என்றார்.
திருநற்கருணை எனும் இந்த அருட்சாதனமே மனிதகுல ஐக்கியத்தைக் கொணர்கிறது ஏனெனில், இறைவனை உலகிற்கு கொணரவும் உலகை இறைவனிடம் கொணரவும் இதனாலே முடியும் என்றார்.
தனியுரிமைக்கோட்பாட்டால் மூழ்கிப்போயிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும், அதன் பாதிப்பை அனுபவித்து வரும் உலகிற்கும் எதிர்மருந்தாகச் செயல்படும் திருநற்கருணை, ஐக்கியம், சேவை, பகிர்தல் போன்றவைகளை வழங்குகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை.

3.உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை திருநற்கருணை என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்

ஜூன் 27, 2011.   திருநற்கருணையால் பலன்பெறுபவர்கள் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஏனெனில் அது உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருநற்கருணையின் வல்லமை குறித்து 'ஒக்தாவோ தியேஸ்' என்ற தன் வாராந்திர தொலைக்காட்சித்தொடரில் உரை வழங்கிய குரு லொம்பார்தி, பிரிவினைகளை மேற்கொள்ளவும், இறைவனின் வாழ்வுடனான ஒன்றிப்பை நோக்கி நம்மை அழைத்து வரவும், சுய‌நலப்போக்குகளில் இருந்து நம் தனிப் பண்புகளுக்கு விடுதலை அளிக்கவும் திருநற்கருணையின் சக்தி உதவுகிறது என்றார்.
உலகமயமாக்கல் கோட்பாடு பரவி வரும் இன்றையக் காலக்கட்டத்தில் சகோதரத்துவமும் நீதியும் ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கானக் கிறிஸ்தவர்களின் முயற்சியில், திருநற்கருணை எனும் அன்பு திருச்சபையிலும் உலகிலும் பரவி உதவுகிறது என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் உண்மையான அன்பின் இருப்பிற்கு அழைப்பு விடுத்தார் குரு லொம்பார்தி.

4. மத உரிமைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை கடிதம்

ஜூன் 27, 2011.   ஒருவர் தான் தேர்ந்து கொள்ளும் மதத்தைப் போதிப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், அது குறித்து எடுத்துரைப்பதற்கும் இருக்கும் உரிமையை வலியுறுத்தி இந்தியாவின் மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை அம்மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மாநிலத்தின் அமைதிக்கும் இணக்க வாழ்வுக்குமான தன் உறுதியான அர்ப்பணத்தை மாநில முதல்வர் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ள‌து குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள கத்தோலிக்க அவையின் இக்கடிதம், மாநில அரசின் பல்வேறு திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்படுவதான ஓர் எண்ணத்தைத் தருவதாகவும் குறைகூறியுள்ளது.
அனைத்து மதங்களும் சம உரிமைகளுடன் நடத்தப்படவேண்டும், மதசகிப்புத்தன்மை வேண்டும், எம்மதமும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பவைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பையும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய பிரதேச ஆயர்களின் கத்தோலிக்க அவை, அரசுப்பள்ளிகளில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்த பாடங்கள் இடம்பெறுவது, குறிப்பிட்ட ஒரு மதக்கல்விக்கென வரி விதிப்பது போன்றவை அரசியலமைப்பிற்கு எதிரானவை எனவும் தன் கடிதத்தில் கூறியுள்ளது.

5. போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அழைப்பு விடுக்கிறது கோவா தலத்திருச்சபை

ஜூன் 27, 2011.   கோவா மாநிலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என மாநில அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது அம்மறைமாவட்டத்தின் சமூக நீதி மற்றும் அமைதி அவை.
சட்ட விரோத போதைப்பொருட்கள் மற்றும் அளவுக்கு மீறிய மதுபானம் அருந்தல் போன்றவைகளைக் கட்டுப்படுத்த அரசு தவறியுள்ளதன் மூலம் சுற்றுலாப் பயணிகளிடையேயான போதைப்பொருள் தொடர்புடைய மரணங்களுக்கும் குடும்பப் பிரச்னைகளுக்கும் காரணமாகியுள்ளது எனக்கூறும் இந்தக் கத்தோலிக்க அவை, கோவா மாநிலமானது போதைப்பொருட்களின் புகலிடமாகவும் காவல்துறைக்கும் போதைப்பொருட்களுக்கும் தொடர்புடைய மாநிலமாகவும் செய்திகளில் வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலாவை ஊக்குவிக்கிறேன் என்ற போர்வையில் போதைப்பொருள் பயன்பாட்டையே அரசு ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டிய இந்த ‌சமூக நீதி மற்றும் அமைதி அவையின் உயர் செயலர் குரு மவெரிக் ஃபெர்னாண்டோ, இலாபத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மீட்புத் திட்டங்களில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

6. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால்

ஜூன் 27, 2011.   பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால் Keith Patrick O'Brien.
கடந்த இரண்டு மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 14 தாக்குதல்கள் இடம்பெற்றதற்கு பாகிஸ்தானின் தேவ நிந்தனைச்சட்டமே காரணம் எனக்கூறி அச்சட்டம் நீக்கப்பட் அழைப்பு விடுத்திருக்கும்  'Aid to the Church in Need' என்ற கத்தோலிக்க அமைப்பின் முயற்சிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார் கர்தினால்.
கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கத் தவறியுள்ள பாகிஸ்தான் அரசிற்கான உதவிகளை இருமடங்காக்கியுள்ள இங்கிலாந்து அரசின் செயல்பாட்டையும் குறைகூறியுள்ளார் கர்தினால் O'Brien.

7. உலகில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது

ஜூன் 27, 2011.   நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இலண்டனின் இம்பீரியல் கல்லூரியும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஹார்வார்டு பலகலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம், உலகம் முழுவதும் நீரழிவு நோய் பெருமளவில் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 1980ம் ஆண்டு 15 கோடியே 30 இலட்சமாக இருந்தது தற்போது 34 கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள‌து.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்கப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், உலகில் மருத்துவச் செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக இவ்வாய்வு மேலும் கூறுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளுக்கென தற்போது ஒவ்வோர் ஆண்டும் உலகில் செலவழிக்கப்படும் 2,200 கோடி பவுண்டுகள் என்பது 2015ம் ஆண்டில் 3000 கோடியாக உயரக்கூடும் என மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...