Saturday, 25 June 2011

Catholic News - hottest and latest - 24 June 2011


1. மத்தியக்கிழக்கு நாடுகளில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறு திருத்தந்தை அழைப்பு

2. மொந்தேநெக்ரோ பிரதமர், திருத்தந்தை சந்திப்பு

3. திருத்தந்தை: திருநற்கருணை, கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு உதவுகிறது

4. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 93 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக திருநற்கருணை பவனி நடைபெறவுள்ளது

5. அருட்பணியாளர்களுக்கானச் செபமாலை பக்தி முயற்சிக்குத் திருத்தந்தை செபம்

6. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்குக் கத்தோலிக்க இளையோர் உறுதி

7. விதவைகளுக்கு ஆதரவு காட்டுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்

8. உடம்பில் பட்டவுடனே போதையை ஏற்படுத்தும் புதுவித போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக ஐ.நா.எச்சரிக்கை


----------------------------------------------------------------------------------------------------------------

1. மத்தியக்கிழக்கு நாடுகளில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறு திருத்தந்தை அழைப்பு

ஜூன்24,2011. மத்தியக்கிழக்கு நாடுகளில் வன்முறை ஒழிக்கப்பட்டு சமூக நல்லிணக்கமும் அமைதியான ஒருங்கிணைந்த வாழ்வும் ஏற்படுவதற்குத் தேவையான எல்லாவகையான முயற்சிகளும் எடுக்கப்படுமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கீழைரீதி திருச்சபைகளுக்கு உதவுவதற்கானக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 80 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வட ஆப்ரிக்க நாடுகளிலும் மத்தியக்கிழக்குப் பகுதிகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
இந்த நாடுகளின் தற்போதைய நிலைமை உலகெங்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும், இந்நாடுகளில் துன்புறும் மக்களோடு தான் ஆன்மீக ரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று தான் தனது 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டு நாளை நினைவுகூருவதாகவும், அந்நாளில் நல்ல ஆயராம் கிறிஸ்துவுக்குத் தான் நன்றி சொல்வதாகவும், இந்நாளை முன்னிட்டுத் தனக்காகச் செபிக்கும் மற்றும் தனக்கு வாழ்த்துக் கூறும் அனைவரையும் நன்றியோடு நினைவுகூருவதாகவும் கூறினார் திருத்தந்தை. மேலும், அந்நாளில் திருச்சபைக்கும் உலகுக்கும் எண்ணற்ற ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளர்களைக் கொடுக்குமாறு அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவேன். என்னோடு சேர்ந்து நீங்களும் செபியுங்கள் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

2. மொந்தேநெக்ரோ பிரதமர், திருத்தந்தை சந்திப்பு

ஜூன்24,2011. இவ்வெள்ளிக்கிழமை முற்பகலில் மொந்தேநெக்ரோ பிரதமர் Igor Luksic, திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
அதன்பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளுக்கானச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மொந்தேநெக்ரோ பிரதமர்.
இச்சந்திப்பில் மொந்தேநெக்ரோ குடியரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான அடிப்படை ஒப்பந்தம் குறித்துப் பேசப்பட்டது.
மேலும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் அதன் நிறுவனங்களின் சட்டரீதியான இருப்பு, அந்நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டிற்கும்  திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவுகள், தற்போதைய சர்வதேச நிலவரம், பல மதத்தவர் மத்தியில் நல்லிணக்க வாழ்வை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களும் பேசப்பட்டன.

3. திருத்தந்தை : திருநற்கருணை, கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு உதவுகிறது

ஜூன்24,2011. திருநற்கருணை, மனிதனை இயேசுவின் இறைவாழ்வில் ஐக்கியமாக்குகிறது மற்றும் அவன் இயேசுவின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்செல்லவும் பிறருக்குக் கொடையாக மாறவும் உதவுகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஉடல் மற்றும் திருஇரத்தத்தின் பெருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, நாம் கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு திருநற்கருணை உதவுகிறது என்றார்.
இந்த மாற்றம் தற்போதைய உலகுக்கு மிகவும் தேவைப்படுகிறது  என்றும், இது விண்ணக அரசை நமக்குத் திறந்து வைக்கின்றது என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்து, அன்பின் காரணமாக அனைத்துத் துன்பங்களையும் வன்முறையையும் ஏற்று சிலுவைச் சாவை ஏற்றார், இந்தத் தியாக அன்பே கிறிஸ்தவ வாழ்வுக்கானக் கிறிஸ்துவின் மேல்வரிச்சட்டமாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலியானது தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை நடைபெற்றது. அதன்பின்னர் அப்பசிலிக்காவிலிருந்து தூய மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருநற்கருணை பவனியும் இடம் பெற்றது. திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இப்பவனியில் பல்லாயிரக்கணக்கானப் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

4. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 93 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக திருநற்கருணை பவனி நடைபெறவுள்ளது

ஜூன்24,2011. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் 1918ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 93 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக திருநற்கருணை பவனி நடைபெறுவதற்கு அந்நகர மேயர் அனுமதியளித்துள்ளார்.
இத்தகவலை வெளியிட்ட மாஸ்கோ இறையன்னை உயர் மறைமாவட்டம்,  இந்தப் பவனியானது ஜூன்26, இஞ்ஞாயிறன்று அந்நகரின் முக்கிய சாலையான Prospettiva Nevsky Avenue வழியாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், லூத்தரன், அர்மேனியன் ஆகிய கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்கள் இந்தச் சாலையில் இருப்பதால் இச்சாலையானது கிறிஸ்தவ சபைகளின் சகிப்புத்தன்மை பாதைஎனப் பாரம்பரியமாக அழைக்கப்படுகிறது. 
மாஸ்கோ பேராயர் Paolo Pezzi இப்பவனியை முன்னின்று நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5. அருட்பணியாளர்களுக்கானச் செபமாலை பக்தி முயற்சிக்குத் திருத்தந்தை செபம்

ஜூன்24,2011. அருட்பணியாளர்களுக்காக உலக அளவில் செபிக்கப்படும் செபமாலை பக்தி முயற்சிக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது கைப்படச் செபம் எழுதியுள்ளார்.
இயேசுவின் திருஇதய பெருவிழாவன்று உலகின் அனைத்து அருட்பணியாளர்களுக்காகவும் உலகெங்கும் செபமாலை செபிக்கப்படுகின்றது.
இந்தியா, இலங்கை, சீனா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உட்பட சுமார் 35 நாடுகளின் ஏறக்குறைய 48 திருத்தலங்களில் அருட்பணியாளர்களின் தூய்மையான வாழ்வுக்காக வருகிற ஜூலை ஒன்றாந்தேதியன்று செபமாலைச் செபிக்கப்படும்.
அருட்பணியாளர்கள், தூய்மையான இதயத்தோடும் தெளிவான மனசாட்சியோடும் நற்செய்தியை அறிவிக்கவும், தூய்மை, எளிமை, மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாய் வாழவும் வேண்டுமென அவர்களின் தூய வாழ்வுக்காகச் செபிப்போம் எனத் திருத்தந்தை தனது செபத்தில் குறிப்பிட்டுள்ளார். 

6. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்குக் கத்தோலிக்க இளையோர் உறுதி

ஜூன்24,2011. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்குத் தாங்கள் முயற்சிக்கவிருப்பதாக அனைத்துலக கத்தோலிக்க இளையோர் உறுதி எடுத்துள்ளனர்.
புதுடெல்லியில் நடைபெற்ற 14வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் கலந்து கொண்ட இளையோர், உலகின் தற்போதைய மனித, பொருளாதார மற்றும் விசுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பரிசீலனை செய்தனர்.
அதேசமயம், தங்களுடைய முயற்சிகளுக்கு அரசுகளும் பொதுமக்கள் சமுதாயமும் உதவுமாறும் வேண்டுகோள்விடுத்தனர்.
இம்மாநாட்டில் ஏறக்குறைய 37 நாடுகளிலிருந்து சுமார் 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

7. விதவைகளுக்கு ஆதரவு காட்டுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்

ஜூன்24,2011. விதவைகளுக்கு மரபுரிமை, நிலவுரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பிற வாழ்க்கை வசதிகளை வழங்கி அவர்களுக்கு ஆதரவு காட்டுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான எல்லா வகையானப் பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளாலும் விதவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பான் கி மூன் கேட்டுள்ளார்.
ஜூன் 23, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட முதல் அனைத்துலக விதவைகள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உலகில் சுமார் 24 கோடியே 50 இலட்சம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 11 கோடியே 50 இலட்சம் விதவைகள் கடும் வறுமையில் வாழ்கின்றனர். 

8. உடம்பில் பட்டவுடனே போதையை ஏற்படுத்தும் புதுவித போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக ஐ.நா.எச்சரிக்கை

ஜூன்24,2011. கொக்கெய்ன், ஹெரோய்ன், கானபிஸ் போன்ற போதைப் பொருள்களின் புழக்கம் உலகளாவியச் சந்தைகளில் குறைந்தோ அல்லது அதிகரிக்காமலோ இருக்கும்வேளை, உடம்பில் பட்டவுடனே போதையை ஏற்படுத்தும் புதுவிதப் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் ஆண்டறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
உலக போதைப்பொருள் அறிக்கை 2011 என்ற தலைப்பில் அறிக்கை சமர்ப்பித்த ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டு அலுவலக இயக்குனர் Yury Fedotov, ‘designer drugs’ என்று சொல்லப்படும் அழகு சாதனப் பொருள்களில் சட்டத்துக்குப் புறம்பே பயன்படுத்தப்படும் போதைப் பொருள்கள் உலகச் சந்தைகளில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். 
உலகில் 15க்கும் 64 வயதுக்கும் உட்பட்ட சுமார் 21 கோடிப்பேர் அதாவது உலக மக்கள் தொகையில் 4.8 விழுக்காட்டினர் இந்த விதமானப் புதிய போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்று அவ்வறிக்கை எச்சரிக்கிறது.
இது குறித்துப் பேசிய பான் கி மூன், போதைப்பொருள்களுக்கு அடிமையாவது ஒரு நோயாகும், எனவே இந்நோயாளிகளை மருத்துவ நிபுணர்களும் உளவியல் ஆலோசகர்களும் கையாள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...