Wednesday, 22 June 2011

Catholic News - hottest and latest - 22 June 2011

1. புதிய மறைப்பணி, நாம் ஒவ்வொரு நாளும் கடைபிடிக்கும் வாழ்வு முறை - ஐரோப்பிய ஆயர் பேரவை

2. இத்தாலி நாட்டின் நற்கருணை மாநாட்டின் இறுதி நாளன்று திருத்தந்தை அம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்

3. திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவப்பணி நிறைவையொட்டி, 60 மணி நேர நற்கருணை ஆராதனைக்கு அழைப்பு

4. குற்றங்களைக் குறைக்க, இளையோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உருவாக்க வேண்டும் - மெக்சிகோ நாட்டு கர்தினால்

5. அகில உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) முடிவை இந்திய ஆயர் பேரவை பெரிதும் வரவேற்றுள்ளது

6. சத்தீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழு கண்டனம்

7. ஐ.நா.வின் பொதுச்செயலராகத் தொடர்ந்து பணியாற்ற திருவாளர் பான் கி மூன் மீண்டும் தேர்வு


----------------------------------------------------------------------------------------------------------------

1. புதிய மறைப்பணி, நாம் ஒவ்வொரு நாளும் கடைபிடிக்கும் வாழ்வு முறை - ஐரோப்பிய ஆயர் பேரவை

ஜூன் 22,2011. புதிய மறைப்பணி என்பது ஒரு மந்திரப்பானம் அல்ல, அது ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடிக்கும் வாழ்வு முறை என்று ஐரோப்பிய ஆயர் பேரவை கூறியுள்ளது.
கடந்த வியாழன் முதல் இச்செவ்வாய் வரை லிதுவேனியாவின் Vilnius என்ற நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் செயலர்கள் மற்றும் பேரவைகளின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், புதிய மறைப்பணி குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
கடவுள் சிந்தனைகள், மதம் ஆகியவை குறித்த எண்ணங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதில் எழும் கேள்விகளுக்கு தகுந்த விடைகளைக் கண்டுபிடிக்க உதவுவதே திருச்சபையின் சிறப்பானப் பணியாக உள்ளதென்று இவ்வறிக்கை கூறுகிறது.
ஐரோப்பாவில் உள்ள 30 ஆயர் பேரவைகளின் செயலர்கள் மற்றும் பேச்சாளர்கள் என 60 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான மத உரிமைகள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஸ்பெயின் நாட்டு, மத்ரிதில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக இளையோர் நாள், வரும் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாடு, மற்றும் வரும் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறும் அகில உலக நற்கருணை மாநாடு என்ற      அகில உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கியமான மூன்று கூட்டங்கள் ஐரோப்பாவில் நடைபெற உள்ளதைக் குறித்து இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


2. இத்தாலி நாட்டின் நற்கருணை மாநாட்டின் இறுதி நாளன்று திருத்தந்தை அம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்

ஜூன் 22,2011. செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இத்தாலி நாட்டின் நற்கருணை மாநாட்டின் இறுதி நாளன்று திருத்தந்தை அம்மாநாட்டில் கலந்து கொண்டு திருப்பலி ஆற்றி, மாநாட்டை நிறைவு செய்வார் என்று வத்திக்கான் செய்தி அலுவலகம் கூறியுள்ளது.
"இறைவா, நாங்கள் யாரிடம் செல்வோம்? தினசரி வாழ்வில் நற்கருணை" என்ற தலைப்பில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை இத்தாலியின் Ancona நகரில் நடைபெறும் 25வது நற்கருணை மாநாட்டின் நிகழ்ச்சிகள் குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மாநாட்டின் இறுதி நாளான செப்டம்பர் 11 ஞாயிறன்று திருத்தந்தை Ancona நகரின் கப்பல் கட்டும் தளத்தில்  திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் அன்று மாலை இளையோரை அந்நகரின் திறந்த வெளி சதுக்கத்தில் சந்தித்து உரையாற்றுவார் என்றும் வத்திக்கான் செய்திக்குறிப்பு கூறுகிறது.
இத்தாலியின் சிறந்த ஓவியர்கள் நற்கருணை, திருவிருந்து ஆகிய கருத்துக்களில் வரைந்துள்ள பல ஓவியங்கள் இந்த மாநாட்டையொட்டி, ஒரு கண்காட்சியாக அமைக்கப்படும் என்றும், செப்டம்பர் 2ம் தேதி திறக்கப்படும் இந்த கண்காட்சி வரும் ஆண்டு சனவரி மாதம் 8ம் தேதி வரை Ancona நகரில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


3. திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவப்பணி நிறைவையொட்டி, 60 மணி நேர நற்கருணை ஆராதனைக்கு அழைப்பு

ஜூன் 22,2011. ஜூன் 29 வருகிற புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் குருத்துவப் பணியின் 60ம் ஆண்டை நிறைவு செய்வதையொட்டி, குருக்கள் 60 மணி நேர நற்கருணை ஆராதனையில் ஈடுபடுமாறு குருக்களுக்கானத் திருப்பேராயம் அழைப்பு விடுத்துள்ளது.
இத்திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenzaவும், செயலர் பேராயர் Celso Morga Iruzubietaவும் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த அழைப்பில்குருக்கள் தங்களை இன்னும் புனிதத்துவத்தில் வளர்க்கவும், குருத்துவப் பணியை மேற்கொள்ள இன்னும் பல இளையோர் முன் வரவும் இந்த ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராதனை நேரங்கள் தொடர்ந்த ஒரு முயற்சியாகவோ அல்லது இடைவெளி விட்டு மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவோ இருக்கலாம் என்றும், ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் ஜூலை மாதம் முதல் தேதி, குருக்களுக்கான செப நாளான இயேசுவின் திரு இருதயத் திருநாள் அன்று முடிவடைவது பொருத்தமாக இருக்கும் என்றும் இவ்வழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆராதனை வழிபாட்டின்போது, திருத்தந்தையின் உடல் நலம், மற்றும் அவரது மகிழ்வான சேவை ஆகியவைகளுக்காக வேண்டும் அதே நேரத்தில், திருச்சபையில் பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், தியாக்கொன்கள் மற்றும் நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் வேண்டும்படி கோரப்பட்டுள்ளது.


4. குற்றங்களைக் குறைக்க, இளையோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உருவாக்க வேண்டும் - மெக்சிகோ நாட்டு கர்தினால்

ஜூன் 22,2011. சட்டப்பூர்வமாக ஒருவரைக் குற்றவாளி என்று கூறுவதற்கான வயதை மெக்சிகோ அரசு குறைத்துள்ளதால் குற்றங்களைத் தடுக்கவோ, குறைக்கவோ முடியாது என்று அந்நாட்டு கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
குற்றங்கள் புரிவோர் சிறைக்கு அனுப்பப்பட அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வரம்பு 16 என்பது மெக்சிகோவில் நடைமுறையில் உள்ளது. அந்த வயது வரம்பைக் குறைத்து மெக்சிகோ அரசு 16 வயதுக்கும் உட்பட்டவர்களையும் சிறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதைக் குறித்து பேசிய Monterrey பேராயர் கர்தினால் Francisco Robles Ortega அரசின் இந்த முடிவால் குற்றங்கள் குறையப்போவதில்லை என்று கூறினார்.
குற்றங்கள் புரியும் இளையோர், பெரும்பான்மையான நேரங்களில், அந்தக் குற்றங்கள் செய்வதற்குப் பல வழிகளில் வற்புறுத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Ortega, இவ்விளையோரை குற்றங்கள் நிகழும் சூழல்களில் இருந்து வெளியேற்றும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உருவாக்குவதே இப்பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வாக அமையும் என்று கூறினார்.


5. அகில உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) முடிவை இந்திய ஆயர் பேரவை பெரிதும் வரவேற்றுள்ளது

ஜூன் 22,2011. இல்லங்களில் பணி புரிவோருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்குரிய உரிமைகளை வழங்கியுள்ள ILO எனப்படும் அகில உலக தொழிலாளர் அமைப்பின் முடிவை இந்திய ஆயர் பேரவை பெரிதும் வரவேற்றுள்ளது.
இல்லங்களில் பணி புரிவோருக்கான இயக்கங்களை இந்தியாவில் உருவாக்க கடந்த 26 ஆண்டுகளாக இந்திய ஆயர் பேரவை முயன்று வந்துள்ளது என்றும், ஆயர் பேரவையின் இந்த முயற்சிக்கு தற்போது அகில உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், இப்பேரவையின் தொழில் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை ஜோஸ் வட்டக்குழி கூறினார்.
கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் ILO வின் இந்த முடிவை ஆதரித்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்த முடிவை இந்தியாவில் நடைமுறைப் படுத்தி, இல்லப்பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் அவர்கள் உரிமைகளுக்கு போராடவும் உரிய வழிகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஆயர் பேரவை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று அருள்தந்தை வட்டக்குழி கூறினார்.
உலகெங்கும் இன்று 5 கோடியே 26 இலட்சம் இல்லப்பணியாளர்கள் உள்ளனர் என்றும், இவர்களில் ஆசியாவில் பணி செய்யும் ஒரு கோடியே 20 இலட்சம் பணியாளர்களில் 90 இலட்சம் பேர் பெண்கள் என்றும் ILO வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.


6. சத்தீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழு கண்டனம்

ஜூன் 22,2011. அமைதியாக இயங்கி வரும் ஒரு கிறிஸ்தவ சபை மீது நடத்தப்பட்ட வன்முறை, மத சார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரான ஒரு செயல் என்று இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழு அறிவித்துள்ளது.
இந்தியாவின்  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள Gurur என்ற இடத்தில் உள்ள அருள் கிறிஸ்தவ சபையைச் (Grace Church) சார்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டில் கலந்து கொண்டபோது, பஜ்ரங்தள் எனப்படும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளையோர் குழுவைச் சேர்ந்த 40 பேர் அந்த வழிபாட்டை நிறுத்தியதோடு, அங்கு இருந்த கிறிஸ்தவர்கள் விரைவில் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
எவ்விதக் காரணமும் இன்றி பஜ்ரங்தள் இளையோர் மேற்கொண்ட இந்த வன்முறை, எந்த ஒரு நாகரீக சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்று இந்திய கிறிஸ்தவர்களின் அகில உலகக் குழுவின் தலைவர் Sajan K. George கூறினார்.
இந்தியாவில் மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டிய George, இந்த ஒரு சட்டத்தைக் காட்டி, கிறிஸ்தவர்கள் பல வழிகளில் இந்த மாநிலத்தில் சிறைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.


7. ஐ.நா.வின் பொதுச்செயலராகத் தொடர்ந்து பணியாற்ற திருவாளர் பான் கி மூன் மீண்டும் தேர்வு

ஜூன் 22,2011. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவை, இச்செவ்வாயன்று இரவு ஐ.நா.வின் பொதுச்செயலராக தொடர்ந்து பணியாற்ற திருவாளர் பான் கி மூன் அவர்களை தேர்ந்தெடுத்தது.
இவ்வாண்டு ஜூன் 13ம் தேதி தன் 67வது வயதை நிறைவு செய்த பான் கி மூன், தென் கொரியாவில் பிறந்து, அந்நாட்டின் அயல்நாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் ஐ.நா.வின் எட்டாவது பொதுச் செயலராகப் பதவியேற்றார். இவருக்கு முன் இப்பதவியை வகித்த கோபி அன்னனுக்குப் பிறகு, 2007ம் ஆண்டு பான் கி மூன் இப்பொறுப்பை ஏற்றார். 2012ம் ஆண்டு சனவரியில் முடிவடையும் இவரது முதல் ஐந்து ஆண்டுகள், மேலும் ஓர் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இவர் 2012 சனவரி முதல் 2017 டிசம்பர் வரை ஐ.நா. பொதுச் செயலராக பணியாற்றுவார்.
தனக்கு இரண்டாம் முறையாக இப்பொறுப்பை வழங்கிய பொது அவை உறுப்பினர்களுக்குத் தன் நன்றியைக் கூறிய பான் கி மூன், இப்பணியில் இன்னும் தான் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார்.
மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகள் (Millennium Development Goals) 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நமது கனவு என்பதால், நமது பணிகளும் இன்னும் அதிக ஆர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் பான் கி மூன்.
பொது அவை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன், உலகத்திற்கு முன் இருக்கும் பல  சவால்களைச் சந்திக்க உலக நாடுகள், உலக அமைப்புக்கள், இன்னும் பல குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...