Friday, 17 June 2011

Catholic News - hottest and latest - 17 June 2011

1. தமிழக, மற்றும் சத்திஸ்கர் மாநில ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

2. தமிழகத்தின் ஒரு ஆயரும், சத்திஸ்கர் மாநிலத்தின் மூன்று ஆயர்களும் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. வளர்ச்சியடைந்த மூல உயிரணுக்கள் (Adult Stem Cells) தொடர்பான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறும்

4. மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளை நியாயப்படுத்த முடியாது - அமெரிக்க ஆயர் பேரவை

5. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளுக்காக மூன்று நாட்கள் உண்ணா நோன்பு

6. ஒரிஸ்ஸாவில் திட்டமிடப்படும் இரும்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்கள் கைது - தலத்திருச்சபை கண்டனம்

7. காரித்தாஸ் மேற்கொண்ட முயற்சிகளால் இலங்கை மீனவர்கள் விடுதலை

8. ஐ.நா.அமைப்பின் ஆதரவுடன் Gaza பகுதியில் நடத்தப்படும் கோடைக்கால விளையாட்டுக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------

1. தமிழக, மற்றும் சத்திஸ்கர் மாநில ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

ஜூன் 17,2011. ஏக, பரிசுத்த, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்கத் திருச்சபை என்று நாம் விசுவாச அறிக்கையிடும் திருச்சபையின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பது ஆயர்களின் மிக முக்கியமான கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்தும், சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள அனைத்து ஆயர்களையும் இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், திருச்சபையின் ஒருமைப்பாட்டினை ஆயர்கள் எவ்விதங்களில் வளர்க்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்துவின் குருத்துவத்தைப் பல நிலைகளில் பகிர்ந்து கொள்ளும் ஆயர்களுக்கும், குருக்களுக்கும் இடையே நிலவும் முக்கியமான உறவு, திருச்சபையின் ஒருமைப்பாட்டை உலகிற்கு எடுத்துக் கூறும் ஒரு முக்கிய வழி என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, மறைமாவட்ட, மற்றும் துறவறக் குருக்களுக்கு ஆயர்கள் வழங்க வேண்டிய  ஆதரவு பற்றியும் எடுத்துரைத்தார்.
ஜாதி, மற்றும் இனம் ஆகிய பாகுபாடுகள் அல்லாமல், கடவுளின் அன்பு ஒன்றையே மையப்படுத்திய வண்ணம் ஆயர்களுக்கும், குருக்களுக்கும் இடையே உறவுகள் இருப்பதையே விசுவாசிகள் பெரிதும் விரும்புகின்றனர் என்று திருத்தந்தை கூறினார்.
இந்தியாவில் உள்ள பல துறவறச் சபைத் தலைவர்களுடன் ஆயர்கள் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறிய பாப்பிறை, துறவியரின் தேர்வு, பயிற்சி ஆகியவைகளில் காட்டப்பட வேண்டிய கவனம், மற்றும் துறவியரின் தொடர்ந்த பயிற்சிகள் ஆகியவை குறித்தும் பேசினார்.
திருச்சபையின் தனிப்பட்ட பாராட்டுக்களுக்கு உரியவர்கள் இந்தியாவில் பணி புரியும் பெண் துறவிகள் என்பதைக் கூறிய திருத்தந்தை, பலரது கவனத்தை ஈர்க்காமல் அவர்கள் செய்து வரும் உயர்ந்த பணிகள் கடவுளின் அரசைக் கட்டியெழுப்புகின்றன என்று கூறினார்.
பெண் துறவிகளின் அழைத்தல்களை ஊக்குவிக்கவும், இறைவனுக்கும், மக்களுக்கும் பணி செய்ய விழையும் இளம்பெண்களை துறவு வாழ்வைப் போன்ற பிற அர்ப்பணம் நிறைந்த வாழ்விலும் உற்சாகப்படுத்தவும் ஆயர்கள் முன்வர வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
திருச்சபையின் தாயான மரியன்னையின் பரிந்துரை வழியாக தன் சகோதர ஆயர்கள் அனைவரையும் தான் சிறப்பாக ஆசீர்வதிப்பதாகக் கூறி, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.


2. தமிழகத்தின் ஒரு ஆயரும், சத்திஸ்கர் மாநிலத்தின் மூன்று ஆயர்களும் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன் 17,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்தும், சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள அனைத்து ஆயர்களுக்கும் திருத்தந்தை தன் உரையை வழங்குவதற்கு முன், தஞ்சாவூர் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், அம்பிகாபூர் ஆயர் பத்ராஸ் மின்ஜ், ஜஷ்பூர் ஆயர் எம்மானுவேல் கெர்கெட்டா, ரைகர் ஆயர் பால் டொப்போ ஆகியோரை ஒரு குழுவாகச் சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவருடனும் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.


3. வளர்ச்சியடைந்த மூல உயிரணுக்கள் (Adult Stem Cells) தொடர்பான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறும்

ஜூன் 17,2011. வளர்ச்சியடைந்த மூல உயிரணுக்கள் (Adult Stem Cells) தொடர்பான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை  வருகிற நவம்பர் மாதம் வத்திக்கானில் நடத்தவிருப்பதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலாச்சாரத்திற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi தலைமையில், இவ்வியாழனன்று வத்திக்கானில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் இக்கருத்தரங்கைக் குறித்து அறிவிப்புக்கள் வெளியாயின.
"மூல உயிரணுக்கள்: மனிதர் மற்றும் கலாச்சாரத்தின் அறிவியலும், எதிர்காலமும்" என்ற தலைப்பில் வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தக் கருத்தரங்கு நடைபெறும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை Tomasz Trafny செய்தியாளர்களிடம் கூறினார்.
கலாச்சாரத்திற்கானத் திருப்பீட அவை, அண்மைக் காலங்களில், அறிவியலுக்கும் மெய்யியல் மற்றும் இறையியலுக்கும் இடையே கலந்துரையாடல்களை ஆதரித்து வருகிறது என்றும், அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாக இந்த கருத்தரங்கு அமையும் என்றும் அருள்தந்தை Trafny எடுத்துரைத்தார்.
மூல உயிரணுக்கள் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் NeoStem என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து திருப்பீட அவை நடத்தும் இந்தக் கருத்தரங்கில் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளின் அறிஞர்கள் மட்டுமல்ல, மாறாக, இறையியல், கலாச்சாரம் ஆகிய துறைகளின் அறிஞர்களும் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளை நியாயப்படுத்த முடியாது - அமெரிக்க ஆயர் பேரவை

ஜூன் 17,2011. மரணம் தனிமனித வாழ்வில் அச்சத்தை உருவாக்கும் ஒரு நிலை என்பதால், அந்த அச்சத்திற்கு பதில் அளிக்கும் முறையாலேயே ஒரு சமுதாயத்தின் உயர்வோ தாழ்வோ கணிக்கப்படும் என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
அமெரிக்காவின் Seattle நகரில் இந்த வாரம் தன் ஆண்டுக்கூட்டத்தை நடத்தி வரும் அமெரிக்க ஆயர் பேரவை, "வாழும் ஒவ்வொரு நாளும் மதிப்புடன் வாழ" என்ற தலைப்பில் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளின் வரலாற்றை ஓரளவு அலசும் இந்த அறிக்கை, எக்காரணம் கொண்டும் இந்த மருத்துவ முயற்சிகள் நியாயப்படுத்த முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வாழ்வில் பல காரணங்களால் சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள் மீது சமுதாயம் தனிப்பட்ட கரிசனை காட்டுவதே அந்த சமுதாயத்தின் மேன்மையைக் காட்டும் என்று கூறும் ஆயர்கள், சக்தியற்று இருக்கும் மனிதர்கள் தற்கொலையைத் தேடும்போது, அவர்களை மீண்டும் வாழும் நிலைக்குக் கொணர்வதே சமுதாயத்தின் கடமை என்பதையும் இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கருணைக் கொலை என்ற பெயரை வழங்கி, இந்த மருத்துவ முயற்சிகளை நியாயப்படுத்துவது நன்னெறிக்கும், விசுவாசத்திற்கும் புறம்பானது என்று ஆயர்களின் இவ்வறிக்கை கூறுகிறது.


5. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளுக்காக மூன்று நாட்கள் உண்ணா நோன்பு

ஜூன் 17,2011. இந்தியச் சட்டத்தில் பிற தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, வருகிற ஜூலை மாதம் 25 முதல் 27 முடிய மூன்று நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும்படி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
"தலித் உரிமைகளுக்கு ஆம் என்று சொல்வோம், புது டில்லி நோக்கிச் செல்வோம்" என்ற முழக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த உண்ணா நோன்பில் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைய வேண்டும் என்று NCCI எனப்படும் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, NCCI தலித் உரிமைகளுக்காகப் பல முறை போராடி வந்துள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய தலித் தலைவர்களில் முக்கியமான மாயாவதியும், ராம்விலாஸ் பாஸ்வானும் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதங்கள் எழுதியிருப்பதாக UCAN செய்தி கூறுகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய முக்கியமான அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கடிதங்கள் அனுப்பியுள்ளன என்று UCAN செய்தி மேலும் கூறுகிறது.


6. ஒரிஸ்ஸாவில் திட்டமிடப்படும் இரும்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்கள் கைது - தலத்திருச்சபை கண்டனம்

ஜூன் 17,2011. ஒரிஸ்ஸாவில் தென் கோரிய நிறுவனம் ஒன்று அமைக்கவிருக்கும் இரும்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்திருப்பதைத் தலத்திருச்சபை வன்மையாக கண்டனம் செய்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த POSCO என்ற நிறுவனம் ஒரிஸ்ஸாவில் 2900 ஏக்கர் காட்டுப்பகுதி நிலம் உட்பட, 4004 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பெரும் இரும்பு ஆலையை கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் பல்லாயிரம் மக்கள் தங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசு அளித்துள்ள இந்த உத்தரவை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களில் 200 பேருக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மற்றும், அப்பகுதி மக்களை இடம்பெயரச் செய்வதற்கு அரசு பல்வேறு அடக்கு முறைகளையும் கையாண்டு வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரிஸ்ஸாவின் தலைநகர் புபனேஸ்வரில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த ஆலை 12 பில்லியன் டாலர், அதாவது, 1200 கோடி டாலர் மதிப்பில் கட்டப்படும் ஓர் ஆலை என்றும், இதுவரை இந்தியாவில் அந்நிய நாட்டிலிருந்து நேரடியாக முதலீடு செய்து கட்டப்படும் ஆலைகளில் இதுவே மிக அதிக மதிப்பில் கட்டப்படுகிறதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


7. காரித்தாஸ் மேற்கொண்ட முயற்சிகளால் இலங்கை மீனவர்கள் விடுதலை

ஜூன் 17,2011. சொமாலியா நாட்டுக் கடற்கொள்ளைக் காரர்களால் தாக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசின் காவலில் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நான்கு இலங்கை மீனவர்கள் காரித்தாஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அண்மையில்  விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை, மற்றும் இந்தியக் காரித்தாஸ் அமைப்பைச் சார்ந்தவர்களின் உதவிகள் இல்லையெனில் சிறைப் படுத்தப்பட்ட இந்த மீனவர்களின் விடுதலை மிகவும் கடினமாகியிருக்கும் என்று இலங்கை காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான S.P.அந்தோணிமுத்து கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறு பேர் கொண்ட ஒரு மீனவப் படகை, சொமாலியா நாட்டைச் சார்ந்த கடற்கொள்ளைக் காரர்கள் தாக்கி, அவர்களைப் பிணைக் கைதிகளாக எடுத்துச் சென்றனர். இந்த அறுவரில் நான்கு பேரை அவர்கள் விடுவித்தபோது, அவர்களை இந்திய கடற்படையினர் டிசம்பர் மாதத்தில் கைது செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களாய் காரித்தாஸ் இந்திய அரசுக்கு எழுதி வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள், மற்றும் தொலைப்பேசி அழைப்புக்கள் ஆகிய முயற்சிகளின் பலனாக இந்த விடுதலை கிடைத்துள்ளதென்று அந்தோணிமுத்து கூறினார்.
இச்செவ்வாயன்று இலங்கை வந்தடைந்த நால்வரும் காரித்தாஸ் உதவி இன்றி தாங்கள் இன்னும் சிறையிலேயே இருந்திருப்போம் என்றும், காரித்தாஸுக்கு தாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றும் கூறினர்.


8. ஐ.நா.அமைப்பின் ஆதரவுடன் Gaza பகுதியில் நடத்தப்படும் கோடைக்கால விளையாட்டுக்கள்

ஜூன் 17,2011. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைக்குரிய Gaza பகுதியில் ஐ.நா.அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்படும் கோடைக்கால விளையாட்டுக்கள் இவ்வியாழனன்று ஆரம்பமானது.
UNRWA எனப்படும் ஐ.நா.அமைப்பினால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் இந்த விளையாட்டு விழா அப்பகுதியில் வாழும் 2,50,000 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு என்றும், இவ்விளையாட்டுக்கள் ஜூலை மாத இறுதி வரை நடைபெறும் என்றும் ஐ.நா.வின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
பிரச்சனைகளும், போர்ச்சூழலும் எப்போதும் நிலவி வரும் Gaza பகுதியில் வாழும் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்தவர்கள் என்றும், இவர்களுக்கு மீண்டும் தங்கள் குழந்தைப் பருவ மகிழ்வைத் தருவதே இந்த விளையாட்டுக்களின் முக்கியக் குறிக்கோள் என்றும் இவ்விளையாட்டுக்களின் அமைப்பாளரான ஐ.நா.அதிகாரி Christer Nordhal கூறினார்.
அகில உலகெங்கும் மனித உரிமைகள் போற்றப்பட வேண்டும் என்பதில் தனி ஆர்வம் கொண்டுள்ள ஐ.நா. அமைப்பு, இக்குழந்தைகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதன் வழியாக, தங்கள் தனிமனித மாண்பையும் உணர்ந்து கொள்ள இவ்விளையாட்டுக்கள் வாய்ப்பளிக்கின்றன என்று ஐ.நா. அதிகாரி  மேலும் கூறினார்.
இவ்வியாழன் முதல் ஏறத்தாழ நாற்பது நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுக்களில் உலகச் சாதனைகளும், கின்னஸ் சாதனைகளும் உருவாகும் வாய்ப்புக்கள் உண்டு என்று ஐ.நா.செய்திக் குறிப்பு கூறுகிறது.
 

No comments:

Post a Comment