1. திருத்தந்தை: விசுவாசத்தை எடுத்துரைப்பதும், வளர்ப்பதும் அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை
2. ஐரோப்பியக் குடியேற்றதாரர் இணைப்புக் கூட்டத்தில் பேராயர் Antonio Maria Veglio
3. ‘வர்த்தக உலகில் நன்னெறி’ என்ற மையக்கருத்தில் வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு
4. திருப்பீடத்திற்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையேயான நிரந்தரப் பணிக்குழுவின் நிறையமர்வுக் கூட்டம்
5. சிரியாவைக்குறித்த தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க கிறிஸ்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - ஆயர் Antoine Audo
6. அயல்நாட்டுத் தொழிற்சாலையை அமைக்க ஒரிஸ்ஸா மாநில அரசு மக்களின் நிலங்களை அபகரித்துள்ளது
7. பாகிஸ்தானில் நிலத்தின் குத்தகையாளர்கள் உரிமையாளர்களாய் ஆகும் வழிமுறைகளைக் கூறும் ஆலோசனை மையம்
8. ஆசியாவில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை விரும்புவதால் பிரச்சனைகள் - ஐ.நா.நிறுவனங்கள் கவலை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை: விசுவாசத்தை எடுத்துரைப்பதும், வளர்ப்பதும் அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை
ஜூன் 15,2011. இவ்வுலகில் விசுவாசம் தானாகவே நிலைபெறாது; அதனை அறிக்கையிடுவதாலும், அதனை ஒவ்வொரு தலைமுறைக்கும் சொல்லித் தருவதாலுமே விசுவாசம் இவ்வுலகில் வளர முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்செவ்வாய் முதல் விழாயன் வரை நடைபெறும் உரோம் மறைமாவட்டத்தின் 2011ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை இத்திங்கள் மாலை புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் துவக்கிவைத்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
‘விசுவாசத்தை வளர்ப்பதில் நாம் பெறும் மகிழ்ச்சி’ என்ற மையக் கருத்தைக் கொண்டு நடத்தப்படும் இந்தhd பொதுக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்காகத் திருத்தந்தை சென்றிருந்தபோது, புனித ஜான் லாத்தரன் பேராலயம் நிறைந்திருந்ததாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்துவை நம்பி, அவர் மீது அன்பு கொள்ளும் உள்ளத்திலிருந்தே விசுவாசம் பயனுள்ள வகையில் வெளிப்பட முடியும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
இன்றைய உலகில் இயேசுவை வெறும் மனிதராக, ஒரு இறைவாக்கினராக கருதும் எண்ணங்கள் அதிகம் பரவி வருகிறதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, விசுவாசத்தை எடுத்துரைப்பதும், வளர்ப்பதும் திருச்சபையின் ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள பணி அல்ல, மாறாக, அது அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை என்பதை தன் துவக்க உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. ஐரோப்பியக் குடியேற்றதாரர் இணைப்புக் கூட்டத்தில் பேராயர் Antonio Maria Veglio
ஜூன் 15,2011. இப்புதனன்று உரோம் நகரில் இடம்பெற்ற ஐரோப்பியக் குடியேற்றதாரர் இணைப்புக் கூட்டத்தில், குடியேற்றதாரர்களிடையே திருச்சபை ஆற்றிவரும் மெய்ப்புப் பணிகள் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார் பேராயர் Antonio Maria Veglio.
1800ம் ஆண்டுகளிலேயே குடியேற்றதாரர்களிடையே திருச்சபையின் பணி மிகத் தீவிரமாக இருந்தது என்று கூறிய குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மேய்ப்புப் பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Veglio, இரண்டாம் உலகப் போர் காலத்தில் இப்பணி உச்சகட்டத்தை அடைந்தது என்று கூறினார்.
அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் மத்தியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து திருமறை ஏடுகள் எடுத்துரைத்துள்ளது பற்றியும் சுட்டிக் காட்டிய பேராயர், சில நாடுகளில் பிரச்சனைகளால் மக்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, அவர்கள் குடியேறும் நாடுகளிலும் உருவாகும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கி, ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பல்வேறு கலாச்சாரங்கள் சந்திப்பதன் வழியாக ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்பதும் பேராயர் Veglioவால் எடுத்துரைக்கப்பட்டது.
3. ‘வர்த்தக உலகில் நன்னெறி’ என்ற மையக்கருத்தில் வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு
ஜூன் 15,2011. இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் ‘வர்த்தக உலகில் நன்னெறி’ என்ற மையக்கருத்தில் வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே துவக்க உரையாற்றி, ஆரம்பித்து வைக்கிறார்.
இக்கருத்தரங்கின் அமைப்பாளரும் திருப்பீடத்தின் அமைதி மற்றும் நீதிப் பணிக்குழுவின் தலைவருமான கர்தினால் பீட்டர் டர்க்சன், மற்றும் கர்தினால் வெலாசியோ தெ பவோலிஸ் ஆகியோரும் ஆரம்ப அமர்வில் உரையாற்றுகின்றனர்.
இரு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளின் பெரும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உரோமைக்கு வந்துள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியுட்டுள்ள 'Caritas in Veritate' என்ற சுற்று மடலைச் சார்ந்து விவாதங்கள் நடைபெற உள்ளன.
அண்மைப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவந்துள்ள வர்த்தக உலகம் சந்திக்கவிருக்கும் சவால்களும், இச்சவால்களை நன்னெறி முறையில் சந்திப்பதற்கான வழிகளும் இக்கருத்தங்கின் விவாதங்களில் இடம்பெற உள்ளன.
4. திருப்பீடத்திற்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையேயான நிரந்தரப் பணிக்குழுவின் நிறையமர்வுக் கூட்டம்
ஜூன் 15,2011. திருப்பீடத்திற்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான நிரந்தரப் பணிக்குழுவின் நிறையமர்வுக் கூட்டம் வத்திக்கானில் இச்செவ்வாயன்று இடம்பெற்றது.
இஸ்ரேல் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் Danny Ayalon தலைமையில் 13 பேர் அடங்கியக் குழுவும், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் உறவுகளுக்கான வத்திக்கான் துறையின் நேரடிச் செயலர் Mons. Ettore Balestrero தலைமையில் இஸ்ரேலுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Franco உட்பட 9 பேர் அடங்கிய குழுவும் இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து விவாதித்தன.
இவ்விரு குழுக்களுக்கிடையே அடுத்தக் கட்டப் பேச்சு வார்த்தைகள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல்தேதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. சிரியாவைக்குறித்த தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க கிறிஸ்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - ஆயர் Antoine Audo
ஜூன் 15,2011. சிரியாவில் தற்போது உறுதியற்ற நிலையை உருவாக்கவும், அந்நாட்டை ஓர் இஸ்லாமியச் சூழலுக்கு மாற்றவும் முயன்று வரும் சக்திகளை அரசு அடக்க முயல்வது சரியான ஒரு வழியே என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சிரியாவின் அரசுத்தலைவர் Bashar al-Assad அந்நாட்டில் ஆரம்பமாகியுள்ள கலவரங்களை அடக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரித்து, சிரியாவில் மக்களிடையே நன்மதிப்பு பெற்றுள்ள ஆயர் Antoine Audo இவ்வாறு தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் உருவாகியிருக்கும் கலவரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஊடகங்கள், அரசுத் தலைவரின் முயற்சிகள் குறித்து தவறான செய்திகளைக் கூறுவதாகவும் ஆயர் Audo கூறினார்.
Aleppo என்ற கால்தீய ரீதி மறைமாவட்டத்தில் பொறுபேற்றிருக்கும் இயேசு சபையைச் சார்ந்த ஆயர் Antoine Audo, ஊடகங்களின் பொறுப்பற்ற செயல்களைக் குறை கூறினார்.
அரசுத் தலைவர் Assad பதவி விலகினால், சதாம் உசேன் காலத்து ஈராக்கைப் போல் சிரியாவும் உறுதியற்ற நிலையையும், இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆயர் Audo எச்சரிக்கை விடுத்தார்.
சிரியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என்று ஊடகங்கள் சொல்லி வருவது தவறான செய்திகள் என்றும், இத்தகைய கருத்து பரவுவதைத் தடுக்க சிரியா நாட்டு மக்களும், கிறிஸ்தவர்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆயர் Audo வேண்டுகோள் விடுத்தார்.
6. அயல்நாட்டுத் தொழிற்சாலையை அமைக்க ஒரிஸ்ஸா மாநில அரசு மக்களின் நிலங்களை அபகரித்துள்ளது
ஜூன் 15,2011. அயல்நாட்டுத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குவதற்கென்று, ஒரிஸ்ஸா மாநில அரசு மக்களின் நிலங்களை அபகரித்துள்ளதை எதிர்த்து, ஒரிஸ்ஸா தலத்திருச்சபையும் மனித நல ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஒரிஸ்ஸாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் POSCO என்ற தென் கொரிய நாட்டு நிறுவனத்தின் இரும்புத் தொழிற்சாலையை அமைக்க, அப்பகுதியில் வாழ்ந்துவரும் விவசாயிகளின் நிலங்களை, தகுந்த ஈட்டுத்தொகையைக் கொடுக்காமல் அரசு பறித்துக் கொண்டுள்ளதென்றும், இதை எதிர்த்த மக்களை அடக்க, இராணுவத்தை அப்பகுதியில் பயன்படுத்தியுள்ளதென்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொகையை அளிக்காமல், அரசு இராணுவத்தின் மூலம் அடக்கு முறையைக் கையாண்டிருப்பது மக்களரசு என்பதையே கேலிக்குரியதாக மாற்றுகிறது என்று கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமூகத்தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை சந்தோஷ் திகால் கூறினார்.
இதற்கிடையே, பழங்குடி, மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இம்மக்களுக்கு உரிய நீதியை வழங்காமல், அவர்கள் மீது வன்முறையைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் என்று நாடு தழுவிய கிறிஸ்துவ சபைகளின் தேசியக் குழு ஒரிஸ்ஸா அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
7. பாகிஸ்தானில் நிலத்தின் குத்தகையாளர்கள் உரிமையாளர்களாய் ஆகும் வழிமுறைகளைக் கூறும் ஆலோசனை மையம்
ஜூன் 15,2011. கிறிஸ்தவ மறையின் நீதி குறித்த படிப்பினைகள் சொல்லித் தரும் வழிகளில் செல்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
நிலத்தின் குத்தகையாளர்கள் அந்த நிலத்திற்கு உரிமையாளர்களாய் ஆகும் போராட்டத்தில் அவர்களுக்குத் தகுந்த வழிமுறைகளைக் கூறும் ஓர் ஆலோசனை மையத்தின் அடிக்கல்லை இத்திங்களன்று நாட்டிய பைசலாபாத் ஆயர் Joseph Coutts இவ்வாறு கூறினார்.
1947ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் பத்து மாவட்டங்களில் உள்ள நிலக் குத்தகைக்காரர்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.
1999ம் ஆண்டு முதல் இந்த போராட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன என்றும், அப்பகுதியில் உள்ள 27,518 ஹெக்டேர் நிலப்பகுதிக்காக இந்தப் போராட்டம் நடைபெறுகிறதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அப்பகுதியில் உள்ள கிராமத்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குரிய உரிமைக்காகப் போராடி வருவதால், இந்த மையத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தலத் திருச்சபை செய்யும் என்று அப்பகுதியில் பணிபுரியும் பங்குத்தந்தை James Archangelus கூறினார்.
8. ஆசியாவில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை விரும்புவதால் பிரச்சனைகள் - ஐ.நா.நிறுவனங்கள் கவலை
ஜூன் 15,2011. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை ஆசியாவின் பல நாடுகள் விரும்புவதால், அந்நாடுகள் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளைக் குறித்து ஐ.நா.வின் ஐந்து முக்கிய நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளன.
சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஆசியாவின் பல நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பெருகி வருகின்றன என்றும், அவற்றில் வருங்காலத்தையும் பாதிக்கக்கூடிய ஓர் அநீதி பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் உலக நலவாழ்வு நிறுவனமான WHO, குழந்தைகள் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான UNICEF, மனித உரிமைகளின் உயர் கழகமான OHCHR உட்பட ஐந்து ஐ.நா.நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளன.
பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் தகுந்த பராமரிப்பின்றி ஒதுக்கப்படுதல் ஆகிய சமுதாயக் கொடுமைகளால் பல ஆசிய பகுதிகளில் ஒவ்வொரு 130 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகளே உள்ளனர் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்த அநீதியான சூழ்நிலையினால், பெண்களை பாலின நடவடிக்கைகளில் அடிமைகளாகப் பயன்படுத்துவது உட்பட, இன்னும் அதிகமான கொடுமைகளுக்கு பெண்கள் உட்படுத்தப்படுவர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நிலவும் பல தவறான கலாச்சாரக் கருத்துக்களை இன்னும் ஆழமாக ஆய்ந்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அவசரமான ஒரு தேவை என்பதை ஐ.நா.வின் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
No comments:
Post a Comment