Friday, 3 June 2011

Catholic News - hottest and latest - 03 June 2011


1. குரோவேஷியாவில் திருத்தந்தையின் இரண்டு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்தத் திருப்பயணம்

2. அமெரிக்கத் தொலைக்காட்சியில் திருத்தந்தையைக் குறித்து ஒளிபரப்பான நிகழ்ச்சி

3. Sendai மறைமாவட்ட மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும் 'புதுப் படைப்பு' திட்டம்

4. எகிப்தில் கிறிஸ்தவக் கோவில்கள், இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் கட்டப்படுவதற்குச் சமமான விதிமுறைகள்

5. உரோம் நகரில் மக்கள் திருப்பயணங்கள் குறித்த ஒரு புது வகை விழா

6. யாழ்ப்பணத்தில் கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள்

7. லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது நோவா பேழையை மக்களின் பார்வைக்கு வைக்கும் முயற்சிகள்

8. சீன அரசு மேற்கொண்டுள்ள அடக்கு முறைகள் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளன - Human Rights Watch அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. குரோவேஷியாவில் திருத்தந்தையின் இரண்டு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்தத் திருப்பயணம்

ஜூன் 03, 2011.இச்சனிக்கிழமை மற்றும் ஞாயிறன்று குரோவேஷியாவில் இரண்டு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்தத் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தனது 19வது மேய்ப்புப்பணிச் சார்ந்த வெளிநாட்டுத் திருப்பயணத்தையொட்டி குரோவேஷியாச் செல்லும் திருத்தந்தை, முதலில் அரசுத்தலைவர் Ivo Josipovicயை அரசுத்தலைவர் மாளிகையில் சென்று சந்தித்து உரையாடிய பின்னர், Zagrebன் திருப்பீடத்தூதரகத்தில் பிரதமர் Jadranka Koserயும் சந்தித்து உரையாடுவார்.
பின்னர் அந்நகரின் தேசிய அரங்கில் அரசியல், கல்வி, தொழில், க‌லாச்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்தோரையும், மதப்பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுகளின் அரசியல் தூதுவர்களையும் சந்திப்பார். சனிக்கிழமையின் இறுதி நிகழ்ச்சியாக திருத்தந்தை இளைஞர்களுடன் இணைந்து செப வழிபாட்டில் கலந்துக் கொள்வது இடம்பெறும்.
ஞாயிற்றுக்கிழமைக்கான திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், தேசியக் கத்தோலிக்கக் குடும்ப நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு தலைநகரில் திருப்பலி நிறைவேற்றுவது, குரோவேஷிய ஆயர்களுடன் மதிய உணவருந்தி உரையாடுவது, அந்நாட்டு ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், குருமடமாணவர்கள் ஆகியோருடன் செபவழிபாட்டில் கலந்துகொண்ட பின், அருளாளர் கர்தினால் Alojzije Stepinacன் கல்லறையைத் தரிசிப்பது ஆகியவை இடம்பெற உள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது.


2. அமெரிக்கத் தொலைக்காட்சியில் திருத்தந்தையைக் குறித்து ஒளிபரப்பான நிகழ்ச்சி

ஜூன் 03,2011. அமெரிக்காவின் NBC என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் 'Today' என்ற நிகழ்ச்சியில் திருத்தந்தையைக் குறித்த ஒளிபரப்பொன்று இவ்வியாழனன்று இடம்பெற்றது.
திருத்தந்தை ஒரு சராசரி நாளில் ஆற்றும் கடமைகள் பலவற்றை இந்த நிகழ்ச்சி படம்பிடித்து காட்டியது. காலைத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் திருத்தந்தையின் ஒவ்வொரு நாள் வாழ்வும், மாலையில் இத்தாலிய செய்திகளைப் பார்ப்பதுடன் முடிவதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியை நடத்திய Matt Lauer என்பவர், திருத்தந்தையை இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் சந்தித்தார் என்றும், அவருடன் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவரான நியூயார்க் பேராயர் Timothy Dolan உடனிருந்தார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இச்சந்திப்பின்போது, திருத்தந்தை அமெரிக்க மக்களுக்கு வழங்கக்கூடிய செய்தி என்ன என்று Matt Lauer கேட்டதாகவும், 'இறைவன் மீது நம்பிக்கையையும், கிறிஸ்துவின் மீது விசுவாசத்தையும் வளர்க்க வேண்டும்' என்று திருத்தந்தை கூறியதாகவும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


3. Sendai மறைமாவட்ட மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும் 'புதுப் படைப்பு' திட்டம்

ஜூன் 03,2011. ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி ஆகியவற்றைச் சந்தித்த Sendai மறைமாவட்டம், மக்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு 'புதுப் படைப்பு' என்ற பெயரிட்டுள்ளது.
மக்களின் குடியிருப்புகளையும் அவர்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் தலத்திருச்சபை புதியதொரு படைப்பாய் விளங்குவதும், அதன் வழியாக மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும் ஒரு சாதனமாகத் திகழ்வதுமே தங்கள் குறிக்கோள் என்று செண்டை ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில் கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் உதவிகள் வழங்கப்படுகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
அண்மைய மறைமாவட்டங்களான Niigata, Saitama, Sapporo மற்றும் Tokyo உயர்மறைமாவட்டம் ஆகியவைகளின் ஒத்துழைப்பும் 'புதுப் படைப்பு' என்ற இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ளதென்று ஆயர் Hiraga சுட்டிக் காட்டினார்.


4. எகிப்தில் கிறிஸ்தவக் கோவில்கள், இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் கட்டப்படுவதற்குச் சமமான விதிமுறைகள்

ஜூன் 03,2011. எகிப்தில் உள்நாட்டு முன்னேற்றத் துறை அண்மையில் உருவாகியுள்ள ஒரு சட்ட வரைவில், அந்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கான விதி முறைகளை வகுத்துள்ளது.
இந்தச் சட்டவரைவு கிறிஸ்தவப் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பெற அனுப்பப்பட்டுள்ளதென்றும், இதில் கூறப்பட்டுள்ளவை வரவேற்கத் தகுந்த ஒரு விடயம் என்றும் எகிப்து கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை Rafik Greiche கூறினார்.
தற்போதுள்ள சட்டவரைவின்படி, கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் இரண்டும் கட்டப்படுவதற்குச் சமமான விதிமுறைகளே வகுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறிய அருள்தந்தை Greiche, தற்போது சட்டவரைவாக உள்ள இந்த விதிமுறைகள் சட்டமாகும்போது என்ன மாற்றங்களைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.
முபாரக் ஆட்சி காலத்தில் இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் கட்டுவது மிக எளிதாகவும், கிறிஸ்தவக் கோவில்கள் எழுப்புவது மிகக் கடினமாகவும் இருந்ததைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Greiche, இப்புதியச் சட்டம் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது வரவேற்கத் தக்க ஒரு முயற்சி என்றார்.


5. உரோம் நகரில் மக்கள் திருப்பயணங்கள் குறித்த ஒரு புது வகை விழா

ஜூன் 03,2011. உலகின் வேறு எந்த நகரிலும் காண முடியாத ஒரு புது வகை விழா இவ்வியாழனன்று உரோம் நகரில் ஆரம்பமானது.
உலகில் மக்கள் திருப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய 31 இடங்களை விளம்பரப்படுத்தும் இந்த விழா, இவ்வியாழன் முதல் வருகிற ஞாயிறு வரை உரோமையில் நடைபெறும்.
ஆன்மாவின் பயணங்கள் விழா என்று பொருள்படும் The Journeys of the Spirit விழாவில் கலந்து கொள்ள, திருப்பயணங்களை நடத்தும் 120க்கும் அதிகமான நிறுவனங்கள் 31 நாடுகளிலிருந்து உரோம் நகர் வந்துள்ளன.
ஞாயிறு வரை நடைபெறும் இந்த விழா நாட்களில், உரோம் நகருக்கு ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் வரக்கூடும் என்று இந்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.
திருப்பயணங்களில் பொதிந்துள்ள அழகை மக்கள் உணர்வதற்கு 'திருப்பயணியின் வாழ்வுமுறை' என்ற கருத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று விழாக்குழுவின் செய்தித் தொடர்பாளர் Rosemaria Mancini கூறினார்.
உரோம் நகரில் இத்தகைய விழா இது மூன்றாம் முறையாக நடைபெறுகிறதென்றும், இது வெற்றிகரமாக அமைந்தால், ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற விழாவை ஏற்பாடு செய்யும் திட்டங்கள் உள்ளதென்றும் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.


6. யாழ்ப்பணத்தில் கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள்

ஜூன் 03,2011. இலங்கை யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு பங்குத் தளத்தில் கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருநகர் எனுமிடத்தில் உள்ள புனித ஜேம்ஸ் பங்கைச் சேர்ந்த குருக்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழுவொன்று வீடு வீடாகச் சென்று, மக்களின் பிரச்சனைகளைக் கேட்டு, அவர்களை கோவிலுக்கு வரும்படித் தூண்டி வருகின்றது.
உள்நாட்டுப் போர் முடிந்து இரு ஆண்டுகள் ஆகியும், 5000 பேர் கொண்ட புனித ஜேம்ஸ் பங்கில் கோவிலுக்கு வரும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக இக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கண்டியில் உள்ள ஒரு கத்தோலிக்க இளையோர் குழுவினர் இக்குழுவில் இன்னும் அதிகமான இளையோரைச் சேர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி மறைமாவட்டத்தில் 85,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும் இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் இளையோர் என்றும் கத்தோலிக்க இளையோர் குழுவின் அங்கத்தினர்கள் கூறினர்.


7. லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது நோவா பேழையை மக்களின் பார்வைக்கு வைக்கும் முயற்சிகள்

ஜூன் 03,2011. பழைய ஏற்பாட்டின் வெள்ளப்பெருக்கின்போது நோவா உருவாக்கிய ஒரு பேழையைப் போன்று ஒரு பெரிய பேழையை அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது Thames நதியில் மக்களின் பார்வைக்கு வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டச்சு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் Johan Huibers, நோவா அமைத்தப் பேழையைக் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, அதன் பயனாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் Rotterdam அருகில் Dordrecht என்ற நதியில் நோவா காலத்துப் பேழையை மீண்டும் உருவாக்கியுள்ளார்.
10 இலட்சம் பவுண்ட் அதாவது, 7 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேழை, ஏறத்தாழ நோவா காலத்தில் உருவான பேழையின் அளவில் உள்ளதென்றும் இதை இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது Thames நதியில் மிதக்க விடுவதற்கு இலண்டன் நகர் மேயர் Boris Johnson ஒப்புதலை கேட்டிருப்பதாகவும் பொறியியலாளர் Huibers ஆங்கிலக் கத்தோலிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார்.
நோவா காலத்துப் பேழையைப் பற்றி மக்களுக்கு, முக்கியமாக இளையோருக்குச் சொல்வதால், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை அவர்கள் மனதில் விதைக்க முடியும் என்றும் இதற்காகவே தான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் டச்சுப் பொறியியலாளர் Huibers மேலும் கூறினார்.
Thamesல் இந்தப் பேழை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டால், அப்போது நோவாவின் பேழையில் இருந்த மிருகங்களைப் போல் 'ரோபோ' வடிவில் அமைத்து, மக்களைக் கவரும் திட்டமிருப்பதாகவும் Huibers கூறினார்.


8. சீன அரசு மேற்கொண்டுள்ள அடக்கு முறைகள் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளன - Human Rights Watch அறிக்கை

ஜூன் 03,2011. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும், இருபது ஆண்டுகளுக்கு முன் Tiananmen சதுக்கத்தில் மக்கள் சந்தித்த அதே கொடுமைகளை இன்றும் சந்திக்க வேண்டியுள்ளதென்று மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் ஆசிய நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
1989ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி சீனாவின் தலைநகர் Beijingல் அமைந்துள்ள Tiananmen சதுக்கத்தில் பல ஆயிரம் இளையோர் மேற்கொண்ட போராட்டங்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டது.
வருகிற சனிக்கிழமை அந்த நாள் நினைவு கூறப்படும் வேளை, இன்றைய சீன அரசு அன்று நடந்து கொண்டதைப் போல் இன்றும் தன் அடக்குமுறைகளைத் தொடர்கிறதென்று மனித உரிமைகள் காவல் (Human Rights Watch) என்ற அமைப்பின் ஆசிய கிளையின் இயக்குனர் Sophie Richardson, UCAN செய்திக்கு அளித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tiananmen சதுக்கத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள Tiananmen அன்னையர் என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், சீனாவில் கடந்த சில மாதங்களில் சீன அரசு மேற்கொண்டுள்ள அடக்கு முறைகள் 1989க்குப் பிறகு தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...