Friday, 3 June 2011

Catholic News - hottest and latest - 02 June 2011

1. குடிபெயர்தலால் ஏற்படும் தாக்கங்களில் மதங்களின் பங்கு குறித்து திருப்பீட அதிகாரி

2. ஆஸ்திரேலியாவிற்கான கவர்னர் ஜெனரல் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. ஒப்புரவிற்கானத் தேவையை வலியுறுத்துகிறார் பெரு நாட்டின் கர்தினால்

4. இஞ்ஞாயிறைப் 'பசுமை ஞாயிறாக'ச் சிறப்பிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்

5. சூடான் நாட்டு வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - உலக மதத் தலைவர்களின் விண்ணப்பம்

6. எல் சால்வதோரில் ஆறு இயேசு சபை குருக்கள் கொல்லப்பட்டதில் இருபது இராணுவ வீரர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு

7. மாற்றுத் திறன் கொண்ட இந்திய அருட்பணியாளருக்கு விருது

8. சீனாவில் நடத்தப்படும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கு உலக அமைப்புக்கள் நிதி உதவிகள் வழங்கக்கூடாது பெண்கள் அமைப்பின் தலைவர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. குடிபெயர்தலால் ஏற்படும் தாக்கங்களில் மதங்களின் பங்கு குறித்து திருப்பீட அதிகாரி

ஜூன் 02,2011. குடியேறுதல் என்பது, ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரத் தனித்தன்மைக்கான அச்சுறுத்தலாக பலரால் நோக்கப்படும் நிலையானது, மதிப்புடன் கூடிய பேச்சுவார்த்தைகள் மூலமான ஏனைய கலாச்சாரங்கள் குறித்த ஆழமான புரிந்து கொள்ளுதல் மூலம் மாற்றியமைக்கப்பட முடியும் என்றார் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மதத்தவரிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் இடம்பெறும் கருத்தரங்கில் உரையாற்றிய, குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் வேலியோ, பல்வேறு கலாச்சரங்கள் இடையேயான சந்திப்புகளில் ஒருவர் மற்றவரின் கலாச்சாரத்தை மதித்து அதில் நல்லவைகளை ஏற்று தேவையற்றவைகளை கைவிடுவதன் வழி நல்லதொரு இணக்க வாழ்வுக்கு வழிவகுக்கலாம் எனவும் கூறினார்.
கலாச்சாரப் பன்மைத்தன்மை என்பது நன்மை தரும் ஒரு கூறு என்ற மனநிலை வளரவேண்டும் என்ற அழைப்பையும் பேராயர் முன்வைத்தார்.
கலாச்சரங்கள் இடையேயான உரையாடல், மற்றும் குடியேற்றதாரர்களை வரவேற்பதில் உலகெங்கும் திருச்சபை ஆற்றி வரும் பணிகளையும் எடுத்தியம்பினார் பேராயர் வேலியோ.
ஒரு நாட்டில் அங்கு தொன்று தொட்டு வாழும் மக்களின் கலாச்சாரத்திற்கும் அங்கு குடியேறும் மக்களின் கலாச்சரத்திற்கும் இடையேயான உறவுகள் பற்றியும் எடுத்தியம்பிய பேராயர், சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சாரங்களிடையேயான கல்வி ஊக்குவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


2. ஆஸ்திரேலியாவிற்கான கவர்னர் ஜெனரல் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன் 02,2011. ஆஸ்திரேலியாவிற்கான கவர்னர் ஜெனரல் திருத்தந்தை 16ம் பெனடிக்டைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது, ஆஸ்திரேலியக் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் அகதிகள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
இங்கிலாந்து அரசியின் பிரதிநிதியாக ஆஸ்திரேலியாவில் செயல்படும் கவர்னர் ஜெனரல் Quentin Bryceக்கும் திருத்தந்தைக்கும் இடையே இப்புதனன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, ஆஸ்திரேலியத் தலத்திருச்சபை சமூகத்திற்கு ஆற்றிவரும் பணிகள், அந்நாட்டில் அகதிகள் நடத்தப்படும் விதம், இயற்கைப் பேரழிவுகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள், பல்சமய உரையாடல் மற்றும் சர்வதேச சூழல்கள் குறித்து விவதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகைத்துறையின் அறிக்கை கூறுகிறது.
திருத்தந்தையுடன் ஆன இச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீஸியோ பெர்த்தோனே, வெளிநாடுகளுடனான உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மெம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் கவர்னர் ஜெனரல் Bryce.


3. ஒப்புரவிற்கானத் தேவையை வலியுறுத்துகிறார் பெரு நாட்டின் கர்தினால்

ஜூன் 02,2011. வரும் ஞாயிறன்று பெரு நாட்டில் இடம்பெற உள்ள அரசுத்தலைவருக்கான இறுதிக்கட்டப் போட்டியில் வன்முறைகள் கைவிடப்பட்டு, ஒப்புரவு குறித்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு கர்தினால் ஹுவான் லூயிஸ் சிப்ரியானி.
வன்முறைகள் மூலம் எப்பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு, சுதந்திரமாக வாக்களிப்பதுடன், மற்றவர்களின் கருத்துக்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என தன் அறிக்கையில் கூறியுள்ளார் லீமா நகர் பேராயர் கர்தினால் சிப்ரியானி.
ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையில் நாம் கைக்கொள்ளவேண்டியது வன்முறையோ பகைமையோ அல்ல, மாறாக அமைதியும் சகிப்புத்தன்மையுமே என்று கர்தினால் சிப்ரியானி வலியுறுத்தினார்.
மதத்தின் பெயரால் வன்முறைகள் நியாயப்படுத்தப்பட முடியாது என்ற கர்தினால், நாட்டின் ஒப்புரவிற்கான முயற்சிகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


4. இஞ்ஞாயிறைப் 'பசுமை ஞாயிறாக'ச் சிறப்பிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்

ஜூன் 02,2011. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, இஞ்ஞாயிறை இந்தியக் கிறிஸ்தவர்கள் 'பசுமை ஞாயிறாக'ச் சிறப்பிக்க வேண்டும் என இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை அழைப்பு விடுத்துள்ளது.
ஜூன் 5ம் தேதி, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலகச் சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டங்களின் போது, சிறப்புச் செப வழிபாடுகள், போதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவேண்டும் என அவ்வவையின் அறிக்கை அழைப்பு விடுக்கின்றது.
'காடுகள்: உங்களுக்கானச் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் நாளின் போது, விளக்குகள் ஏந்திய செப வழிபாடுகள், விழிப்புணர்வுக் கட்டுரை விநியோகம், கண்காட்சிகள் போன்றவை கிறிஸ்தவசபைகளால் நடத்தப்படும் என்றார் தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர் கிறிஸ்டோபர் ராஜ்குமார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...