Tuesday, 17 May 2011

Catholic News - hottest and latest - 14 May 2011

1. திருத்தந்தை: நற்செய்தி அறிவிப்பு எதிர்பார்க்கும் அன்பும் சாட்சியமும்

2. நவீன உலகின் பிரச்சனைகள் குறித்து ஆராய திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம்

3. எகிப்தில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட அழைப்பு விடுக்கிறார் அந்நாட்டு ஆயர்

4. பிரிட்டன் கத்தோலிக்கரிடையே புலால் உணவற்ற வெள்ளிக்கிழமைகள் மீண்டும் அமுலுக்கு வருகின்றன

5. மக்களுக்கானப் பணிகளில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பிலிப்பீன்ஸ் தலத்திருச்சபை ஆர்வம்

6. இலங்கைப் போர்குற்றம்: .நா.வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: நற்செய்தி அறிவிப்பு எதிர்பார்க்கும் அன்பும் சாட்சியமும்

மே 14,2011. வளங்களும் செல்வமும் இருந்தும் நிச்சயமற்ற ஒரு வருங்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளிலும், உலகமயமாக்கல் கொள்கையால் பெரும்பாலும் ஏழைகளின் எண்ணிக்கையே அதிகமாகிவரும் நாடுகளிலும் புது நம்பிக்கைகளை விதைத்து, கிறிஸ்துவின் நீதி, அமைதி, சுதந்திரம் மற்றும் அன்பின் அரசை அறிவிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மறைப்பணிக்கான பாப்பிறைக் கழகத்தின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அனைத்து விதமான அடிமைத்தளைகளிலிருந்தும் மக்களை விடுவித்து உண்மையானச் சுதந்திரம் நோக்கி வழிநடத்திச்செல்லும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வமுடன் கிறிஸ்தவர்கள் நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட வெண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இறைவார்த்தையே நமக்கு மீட்பளிக்கும் உண்மை என்ற விசுவாச உறுதிப்பாடு நம் வாழ்வில் ஆழமாக வேர் விடும்போதுதான் அதனை அறிவிப்பதில் கிட்டும் அழகையும் இனிய உணர்வையும் நாம் பெறமுடியும் என மேலும் கூறினார் பாப்பிறை.
நற்செய்தி அறிவிப்பதிலிருந்து எவருக்கும் விலக்கு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நாம் எந்தப் பணியை மேற்கொண்டாலும் அதன் வழி நற்செய்தியை அறிவிக்க முடியும் என்றார்.
நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்ல, அது நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது, அது அன்புடன் சாட்சிய வாழ்வையும் எதிர்பார்க்கிறது, அவ்வன்பு மறைசாட்சிய வாழ்வுவரை நம்மை இட்டுச்செல்லக்கூடும் எனவும் உரையாற்றினார் பாப்பிறை.


2. நவீன உலகின் பிரச்சனைகள் குறித்து ஆராய திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம்

மே 14,2011. நவீன உலகின் உலக மயமாக்கல் மற்றும் அநீதிகளின் சூழலில் திருச்சபையின் சமூகக்கோட்பாடுகளின் பலம் குறித்து ஆராயும் நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் இத்திங்கள் முதல் உரோம் நகரில் இடம்பெற உள்ளது.
இன்றைய உலகின் பெரும் பிரச்சனைகள் குறித்து திருச்சபைக் குழுமங்கள் மற்றும் பல்வேறு பொதுநிலை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கவும், புதிய விழிப்புணர்வுகளை வழங்கவும் இக்கூட்டத்தின் தீர்மானங்கள் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் இத்திருப்பீட அவையின் செயலர் ஆயர் Mario Toso.
"நீதியும் உலக மயமாக்கலும் : 'Mater et Magistra' முதல் 'Caritas et Veritate' வரைஎன்ற தலைப்பில் இடம்பெற உள்ள இக்கூட்டம், திருச்சபையின் சமூகப்படிப்பினைகளின் ஒளியில் இன்றைய சமூகப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல உள்ளது.
நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்,  காங்கோ கர்தினால் லவுரென்ட் மொன்செங்வோ பசின்யா, ஹொண்டுராஸ் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிக்கஸ் மரதியாகா ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.


3. எகிப்தில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட அழைப்பு விடுக்கிறார் அந்நாட்டு ஆயர்

மே 14,2011. எகிப்தில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்படாமல், இன்றைய வன்முறைத் தாக்குதல் நிலைகள் தொடர்ந்தால், அரசு தலைமையற்ற கிளர்ச்சிகளின் நாடாக அது மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார் அந்நாட்டு ஆயர் Antonios Aziz Mina.
கடந்த வாரம் எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறநகர் பகுதியில் வன்முறைகள் தலைதூக்கியபோது, இராவணுவமும் காவல்துறையும் அச்சத்தை வெளிப்படுத்தி கால தாமதமாகவேச் செயல்பட்டதைக் காணமுடிந்தது எனக் குற்றம் சாட்டினார் ஆயர்.
சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டுவருவது மட்டும் முக்கியமல்ல, அமைதியையும் ஒப்புரவையும் பெற வேண்டுமானால் முதலில் குற்றவாளிகள் நீதியின் முன் கொணரப்படவேண்டும் எனவும் கூறினார் ஆயர் Aziz Mina.


4. பிரிட்டன் கத்தோலிக்கரிடையே புலால் உணவற்ற வெள்ளிக்கிழமைகள் மீண்டும் அமுலுக்கு வருகின்றன

மே 14,2011. சிலுவையில் தொங்கிய கிறிஸ்துவுடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை தோறும் அசைவ உணவுவகைகளைக் கைவிடும் பழக்கத்தைக் கத்தோலிக்கர்கள் மீண்டும் கொணரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்.
அண்மையில் முடிவுற்ற அவர்களின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் இதை அறிவித்த ஆயர்கள், இவ்வாண்டு செப்டம்பர் 16ந்தேதி முதல் இப்பழக்கம் அமுலுக்கும் வரும் எனவும் தெரிவித்தனர்.
இயேசு கிறிஸ்துவின் இறப்பு நாளான வெள்ளியன்று ஏதாவது ஒரு வகையில் உண்ணாநோன்பு அல்லது ஒறுத்தல் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என திருச்சபை எதிர்பார்க்கிறது என்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள், கத்தோலிக்க தனித்தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, வெள்ளிக்கிழமைகளில் காய்கறி உணவை உண்ணும் பழங்காலப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...