Saturday, 12 June 2021

மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள மூன்று கத்தோலிக்க ஆலயங்கள்

 மியான்மாரில் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ள ஆலயம்


மியான்மாரில், இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர் ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், தற்போது, அந்நாட்டு இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதால், அண்மைய நாள்களில், கத்தோலிக்க கோவில்கள், இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டின் லோயிகா (Loikaw) மறைமாவட்டத்தின் பொறுப்பாளராக செயலாற்றிவரும், அம்மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் Celso Ba Shwe அவர்கள், இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் அண்மையத் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என்று கூறினார்.

இராணுவத்தினருக்கும், காயா என்ற மாநிலத்தில் உள்ள போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள, ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர், ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்று, அருள்பணி Ba Shwe அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த மூன்று வாரங்களில், திரு இருதய ஆலயம், புனித யோசேப்பு ஆலயம் மற்றும் அமைதியின் அன்னை ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களை இராணுவத்தினர் நேரடியாகவே குண்டு வீசித் தாக்கியுள்ளனர் என்று, அருள்பணி Ba Shwe அவர்கள் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

எந்த ஒரு போர்ச்சூழலிலும், ஆலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவை தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள பன்னாட்டு போர்க்கால விதிமுறைகள், மியான்மார் நாட்டில் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், ஏற்கனவே முறையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லோயிகா மறைமாவட்டத்தின் ஆயர் Stephen Tjephe அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, தன் 65வது வயதில் இறந்ததையடுத்து, அம்மறைமாவட்டத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றிவரும் அருள்பணி Ba Shwe அவர்கள், தன் மறைமாவட்ட மக்கள், ஒவ்வொரு நாளும், 7 மணிக்கு, மியான்மார் நாட்டின் அமைதிக்கென அன்னை மரியாவிடம் செபமாலை செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். (Fides/ UCAN)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...