ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட் 19 பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், இலாபத்தைக் காட்டிலும், மக்களை மையப்படுத்தும் துணிவுமிக்க பொருளாதாரத்தைக் கொண்டு, வர்த்தக உலகை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கூறினார்.
ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், ஜூன் 14 முதல் 16 முடிய வியென்னாவில் நடைபெற்ற கூட்டங்களில், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
மனித வர்த்தகத்தின் வேரைக் களைதல்
"தேவைகளை எதிர்கொள்ளுதல்: மனிதர்களை வர்த்தகம் செய்வதன் வேராக விளங்கும் காரணத்தை களைதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற நான்கு அமர்வுகளில், அருள்பணி Urbańczyk அவர்கள், கட்டாயத் தொழில், பாலியல் கொடுமைகள் என்ற பல்வேறு கருத்துக்களில் தன் எண்ணங்களை பதிவுசெய்தார்.
உலகின் 96 விழுக்காட்டு அரசுகள், மனித வர்த்தகத்தை சட்டப்பூர்வமாகத் தடைசெய்துள்ளபோதிலும், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக, இந்த பெருந்தொற்றின் காலத்தில், மனித வர்த்தகம் கூடியுள்ளது என்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அருள்பணி Urbańczyk அவர்கள் எடுத்துரைத்தார்.
வறுமை ஒருபுறம், இலாபம் மறுபுறம் மோதல்...
மனிதர்களின் வறுமை, மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ஒருபுறமும், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் மறுபுறமும் இருப்பது, மனித வர்த்தகத்தை வளர்த்துவருகிறது என்று, அருள்பணி Urbańczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொழில் உலகில் கோவிட் 19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பெரும் பாதிப்புக்களை ஜூன் 15ம் தேதி நடைபெற்ற அமர்வில் குறிப்பிட்ட அருள்பணி Urbańczyk அவர்கள், இந்த பாதிப்புக்களால் மிக அதிக அளவில் துன்புற்ற வறியோர், வேறு வழியின்றி, வர்த்தகப் பொருள்களாக மாறினர் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
வறியோர் சார்பில் கத்தோலிக்கத் திருஅவை
இத்தகையத் துயரச் சூழலில், கத்தோலிக்கத் திருஅவை, குறிப்பாக, தலத்திருஅவைகள், நலிவுற்ற மக்களுக்கு புகலிடங்கள் வழங்கி, அவர்கள் மீண்டும் மாண்புடன் பணியாற்ற வழியமைத்து கொடுத்துள்ளன என்பதை, அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
கோவிட் 19 பெருந்தொற்றினால் 2020ம் ஆண்டு, 11 கோடியே 50 இலட்சம் மக்கள் மிகக் கொடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டு 15 கோடியாக உயரும் என்றும் உலகவங்கி வெளியிட்ட ஒரு தகவலை, தன் உரையில் குறிப்பிட்ட அருள்பணி Urbańczyk அவர்கள், வளர்ந்துவரும் இக்கொடுமையைக் களைவது அனைத்து அரசுகளின் அவசரப்பணி என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
மனித வர்த்தகத்தின் மிகப்பெரும் கொடுமை, பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் மற்றும் சிறாரின் நிலை என்று சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், மனித உடலை, குறிப்பாக, பெண்களில் உடலை, ஒரு வர்த்தகப் பொருளைப்போல காணும் கண்ணோட்டத்தை, இவ்வுலகிலிருந்து, குறிப்பாக, இளைய சமுதாயத்திடமிருந்து அகற்றுவது, நம் அனைவருக்கும் உள்ள முக்கிய கடமை என்று கூறினார்.
No comments:
Post a Comment