மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலக அளவில், ஏறத்தாழ 8 கோடியே 24 இலட்சம் பேர், தங்கள் சொந்த நாடுகளில் எதிர்கொண்ட நெருக்கடிகளால் புலம்பெயர்ந்துள்ளவேளை, இந்த மக்களுக்குப் புகலிடம் அளிப்பது, ஐரோப்பாவில் ஒரு பெரும் பிரச்சனையாகவே நோக்கப்படுகின்றது என்று, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
ஜூன் 20, இஞ்ஞாயிறன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைப்பிடிக்கவிருப்பதை முன்னிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தவிர, ஐரோப்பிய நாடுகளில் எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும் அம்மக்கள் கடும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, குரோவேஷியா, மற்றும், போஸ்னியா-எர்செகொவினா நாடுகளின் எல்லைப் பகுதியில், புலம்பெயர்ந்தோர் இழிவுபடுத்தப்படுகின்றனர், ஆடைகள் களையப்படுகின்றனர், மற்றும், காடுகளில் கைவிடப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் அமைப்பு, இம்மக்கள், வரவேற்கப்பட்டு, பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று, புலம்பெயர்ந்தோர் உலக நாளில் விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளது.
வளரும் நாடுகள், தங்கள் சக்தியையும் மீறி, புலம்பெயர்ந்தோரில் 15 விழுக்காட்டினருக்கு அடைக்கலம் அளித்துள்ளன என்றுரைக்கும் காரித்தாஸ் அமைப்பு, உலக அளவில் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர், புகலிடம் தேடும் நாடுகளாலேயே அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் அவலத்தையும் காணமுடிகின்றது என்று கவலையுடன் கூறியுள்ளது.
1951ம் ஆண்டில், ஐ.நா. நிறுவனம் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதன் 50ம் ஆண்டின் நிறைவாக, 2001ம் ஆண்டில், அந்நிறுவனம், புலம்பெயர்ந்தோர் உலக நாளை உருவாக்கியது. ஜூன் 20, இஞ்ஞாயிறன்று, 20வது புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment