மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பயங்கராவாத்த்தில் ஈடுபட்டதாக, பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, அநீதியாய் மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்ட 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில், மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை காலத்தை நீட்டிப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் 28ம் தேதியிலிருந்து மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல்நிலை மோசமடைந்துவருவதை முன்னிட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகின்றது என்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சிகிச்சை காலத்தை, வருகிற ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மும்பை டலோஜா சிறையில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தான் சிறைக்கு வந்தவேளையில் ஓரளவு நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும், சிறை வாழ்வில் தனது, உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றதென்றும், இதனால் தனக்கு பிணையல் வழங்கப்படவேண்டுமென்றும், மே 21ம் தேதி மும்பை உயர்நீதி மன்றத்தில், இணையம்வழியாக நடைபெற்ற விசாரணையில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, பிணையல் வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கப்படும் மனுக்களை, நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. (AsiaNews)
No comments:
Post a Comment