Thursday 24 June 2021

ஒளிவுமறைவற்ற வத்திக்கான் பொதுப்பணி ஒப்பந்தங்கள்

 

49 விதிமுறைகள் அடங்கிய வழிமுறை எடு, வத்திக்கானில் வாங்கப்படும் பொருள்கள், பணிகள், மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் அனைத்திலும் ஒளிவுமறைவற்ற தன்மை விளங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் வழங்கப்படும் பொதுப்பணி ஒப்பந்தங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, வத்திக்கான் பொருளாதாரத் துறையின் தலைவர், அருள்பணி Juan Antonio Guerrero Alves அவர்கள், ஜூன் 22 இச்செவ்வாயன்று வெளியிட்டார்.

வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் பொதுப்பணிகளுக்கு உகந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென விடுக்கப்படும் விளம்பர அறிவிப்புக்கள், தெரிவு செய்யப்பட்ட முறைகள், ஒப்பந்தத்தின் அம்சங்கள் ஆகியவற்றில் வெளிப்படையான வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி திருத்தூது மடலொன்றை வெளியிட்டார்.

திருத்தந்தையின் தனிப்பட்ட சுயவிருப்பத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட motu proprio மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், இந்த விதி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளதென இயேசுசபை அருள்பணி Juan Antonio அவர்கள் கூறினார்.

49 விதிமுறைகள் அடங்கிய இந்த வழிமுறை எடு, வத்திக்கானில் வாங்கப்படும் பொருள்கள், பணிகள், மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் அனைத்திலும் ஒளிவுமறைவற்ற தன்மை விளங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பொருளாதார வழிகளில் தவறுகள் செய்ததாகக் கருதப்படும் எவரும், இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட அழைப்பு பெறமாட்டார்கள் என்பதையும், அருள்பணி Juan Antonio அவர்கள் தெளிவாக்கினார்.

இந்த 49 விதிமுறைகளுடன், ஏழு இணைப்புப்பகுதிகளைக் கொண்ட 91 பக்க விளக்கங்களும் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. இவை அனைத்தையும், மக்கள் அனைவரும் காண்பதற்கு உதவியாக, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...