Saturday, 12 June 2021

குஜராத் மதசிறுபான்மை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

 குஜராத் மாநில பள்ளி மாணவர்கள்


அரசின் நிதியுதவி பெறும் கத்தோலிக்க பள்ளிகளில் முதல்வரையும் ஆசிரியர்களையும் அரசே நியமித்து நடத்தினால், அக்கல்வி நிலையத்தின் கத்தோலிக்கத் தனித்தன்மை காணாமல் போகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறுபான்மையினருக்குரிய கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் புதிய கட்டுப்பாடுகளைக் கொணர்ந்துள்ள குஜராத் அரசின் புதிய சட்டங்கள் குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர், இந்திய கிறிஸ்தவர்களும், ஏனைய மத சிறுபான்மையினரும்.

சூன் மாதம் முதல்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள, மேல்நிலைப்பள்ளி சட்டம், அகற்றப்படவேண்டும் என, குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள மத சிறுபான்மையினர், தங்கள் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தங்களிடமிருந்து முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக எடுத்துரைத்துள்ளனர்.

சிறுபான்மை மதத்தவர்க்கென அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இப்புதிய சட்டத்தின் வழியாக பறிக்கப்பட்டுள்ளன என்று கூறிய, குஜராத் கத்தோலிக்க கல்வித்துறையின் செயலர், அருள்பணி தெலஸ் பெர்னாண்டஸ் அவர்கள், பள்ளி ஆசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் நியமித்தல், மாணவர்களின் நலனை மனதில் கொண்டு நன்னெறி விதிகளை அமைத்தல், என பல்வேறு அதிகாரங்கள் அரசால் தற்போது பறிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

அரசிடமிருந்து நிதியுதவி பெறும் சிறுபான்மையினரின் பள்ளிகளின் நிர்வாகம் முற்றிலுமாக அரசின் கீழ் செல்லும் ஆபத்து உள்ளது என்ற கவலையையும்,  வெளியிட்டார் அருள்பணி பெர்னாண்டஸ்

அரசின் நிதியுதவி பெறும் கத்தோலிக்க பள்ளிகளில் முதல்வரையும் ஆசிரியர்களையும் அரசே நியமித்து நடத்தினால், அக்கல்வி நிலையத்தின் கத்தோலிக்கத் தனித்தன்மை காணாமல் போகும் என்ற கவலையை வெளியிடும் சிறுபான்மை மதத்தவர், குஜராத் அரசின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், பாஜக ஆட்சிபுரியும் ஏனைய மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்படும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர்.

குஜராத்தில் உள்ள 181 கத்தோலிக்க பள்ளிகளுள், 63 பள்ளிகள் அரசின் நிதியுதவியைப் பெற்றுச் செயல்படுகின்றன.

கடந்த 26 ஆண்டுகளாக, பிஜேபி கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்துவரும் குஜராத் மாநிலத்தில், ஒரு குழந்தையை ஆசிர்வதிப்பதோ, அல்லது, கல்விக்கு நிதியுதவி வழங்குவதோகூட, மதமாற்ற முயற்சியாக நோக்கப்பட்டு, பத்தாண்டுகள்வரை தண்டனை வழங்கும், மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது. (UCAN)

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...