Saturday 12 June 2021

திருஅவையில் பொதுநிலையினர் கழகங்களுக்கு விதிமுறைகள்

 அருங்கொடை இயக்கத்தினரின் பெந்தக்கோஸ்து திருவிழிப்பு வழிபாடு


பன்னாட்டு கத்தோலிக்க அமைப்புக்களின் தலைவர்கள், மற்றும், நிர்வாக குழுவினரின் பதவிக்காலம், தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குமேல் இருக்கக்கூடாது - திருப்பீட பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பன்னாட்டு கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்புகளில், தலைவர்களின் பதவிக்காலத்தை வரையறுப்பது குறித்த பொதுவான விதிமுறைகளை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு ஜூன் 11, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

பன்னாட்டு கத்தோலிக்க அமைப்புகளில் தலைமைப் பதவி வகிப்பவர்கள், குழுமத்திற்குப் பணியாற்றுகின்றவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், அப்பதவியில், தலைவர்கள், தங்களை முன்னிலைப்படுத்தும் ஆபத்துக்களையும், உரிமை மீறல்களையும் தவிர்க்கும் நோக்கத்திலும், இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பன்னாட்டு அமைப்புக்களின் தலைவர்கள், மற்றும், நிர்வாக குழுவினரின் பதவிக்காலம், தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குமேல் இருக்கக்கூடாது என்றும், பன்னாட்டு நிர்வாகக் குழுவுக்கு இடம்பெறும் தேர்தல் முறைகளில், அவற்றின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு கத்தோலிக்க அமைப்புகளின் தலைவர்கள், தங்களது பணிகளை உண்மையான சேவை மனப்பான்மையில் ஆற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள், இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும், இந்த விதிமுறைகள், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும், அந்த அவையால் உருவாக்கப்பட்ட 109 அமைப்புகளுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த 109 அமைப்புகள் தவிர, Neocatechumenal Way, உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கம், Cursillo உலகளாவிய இயக்கம் உட்பட சில அமைப்புகளும் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் அடங்கிய அறிக்கையில், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kevin Farrell அவர்களும், அந்த அவையின் செயலர், அருள்பணி Alexandre Awi Mello அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...