Thursday, 24 June 2021

திருத்தந்தையைச் சந்தித்த சிலந்திமனிதன் மத்தியா

 

மகிழ்வையும், புன்னகையையும் குழந்தைகளுக்குத் தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Spider-man போன்று, ஒரு Super-heroதான் – சிலந்திமனிதன் மத்தியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆங்கிலத் திரைப்படங்கள், மற்றும் நாளிதழ்கள் வழியே புகழ்பெற்ற சிலந்தி மனிதனைப்போல் (Spider-man) உடையணிந்து வந்த ஓர் இளைஞர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜூன் 23, இப்புதனன்று சந்தித்தார்.

வத்திக்கான் புனித தமாசோ சதுக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறைக்கல்வி உரை வழங்கிய பின்னர், மக்களைச் சந்தித்த வேளையில், சிலந்திமனிதன் உடையணிந்த இளைஞரைச் சந்தித்துப் பேசினார்.

கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து விடுதலை பெற்ற 95 வயதான தன் பாட்டியுடன் திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்த மத்தியா வில்லர்தீத்தா (Mattia Villardita) என்ற பெயர்கொண்ட 28 வயது இளைஞர், சிலந்தி மனிதனின் முகக்கவசத்தை, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார்.

மரபணு தொடர்புடைய குறைபாடுடன் பிறந்த மத்தியா அவர்கள், கடந்த 19 ஆண்டுகளாக சிலந்தி மனிதனின் உடையணிந்து வருவதாகவும், நோயுற்று மருத்துவமனைகளில் படுத்திருக்கும் குழந்தைகளை மகிழ்விப்பது, தன் பொழுதுபோக்குப் பணி என்றும் வத்திக்கான் செய்தித்துறையிடம் கூறினார்.

கோவிட் பெருந்தொற்றினால் விதிக்கப்பட்ட முழு அடைப்புக் காலத்தில், மருத்துவ மனைகளுக்குச் செல்ல இயலாதச் சூழலில், மருத்துவமனையில் படுத்திருக்கும் குழந்தைகளுடன், இணையத்தின் வழியே, காணொளி வடிவில், 1400க்கும் மேற்பட்ட சந்திப்புக்களை தான் மேற்கொண்டதாகவும், மத்தியா அவர்கள் குறிப்பிட்டார்.

தான் குழந்தைகளைச் சந்திக்கும்போது, அவர்கள் முகத்தில் புன்னகையைக் காண்பது தனக்கு பெரும் நிறைவை அளிப்பதாகவும், அதே மகிழ்வையும், புன்னகையையும் குழந்தைகளுக்குத் தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப்பொருத்தவரை, Spider-man போன்று, ஒரு Super-heroதான் என்றும், மத்தியா அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.


No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...