Wednesday 16 June 2021

அனைத்து மதத்தினரையும் மதிக்கும் அரசியலமைப்பு அவசியம்

 நைஜீரியாவின் கத்தோலிக்க ஆயர்கள்


நைஜீரியாவில், 1999ம் ஆண்டின் அரசியலமைப்பு, 12 வடமாநிலங்களில் ஷாரியா சட்டப்படி ஆட்சி நடத்த வழியமைத்துள்ளது. இது முஸ்லிம் அல்லாதவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்கின்றது - ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் அமைதி, மற்றும், ஒற்றுமை நிலவுவதை உறுதிப்படுத்தவேண்டுமெனில், அந்நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் உகந்த முறையில் அரசியலைமப்பு சீரமைக்கப்படவேண்டும் என்று, தலத்திருஅவை கூறியுள்ளது.

நைஜீரியாவின் அரசியலமைப்புச் சீரமைப்பு குழுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டில் அனைவரும் அமைதியிலும், ஒற்றுமையிலும் வாழ்வற்கு, அரசியலமைப்பில், இஸ்லாம் மதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இரத்துசெய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசியலமைப்பில் இஸ்லாம் மதம் பலதடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளவேளை, கிறிஸ்தவமோ அல்லது வேறு எந்த மதமோ, ஒரு தடவைகூட குறிப்பிடப்படவில்லை என்று, தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், 1999ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பில், இராணுவத்தின் தலையீடு இருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நைஜீரியாவில், 1999ம் ஆண்டின் அரசியலமைப்பு, அந்நாட்டின் 12 வடமாநிலங்களில் ஷாரியா இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடத்தவும், அச்சட்டப்படி முஸ்லிம்களுக்கு நீதிமன்றங்கள் அமைக்கவும் வழியமைத்துள்ளது என்றும் ஆயர்கள் உரைத்துள்ளனர்.

இத்தகைய சூழல், முஸ்லிம் அல்லாதவர்களின் மனச்சான்று சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு பாகுபாட்டு நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ள ஆயர்கள், ஒரு நாட்டில், ஓரினம் மட்டும் ஒரு சட்டத்தைக் கொண்டிருக்க இயலாது என்று, தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். (Fides)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...