Tuesday, 22 June 2021

வசந்தகாலத்தை நோக்கி உக்ரைன் திருஅவை

 பேராயர் Mieczysław Mokrzycki


பேராயர் Mieczysław Mokrzycki : பல்வேறு இடர்களை சந்திக்க நேர்ந்தாலும், உக்ரைன் தலத்திருஅவை, மகிழ்வுடன் முன்னோக்கி நடைபோடுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

பல்வேறு இடர்களை சந்திக்க நேர்ந்தாலும், உக்ரைன் தலத்திருஅவை, மகிழ்வுடன் முன்னோக்கி நடைபோடுவதாக எடுத்துரைத்தார் அந்நாட்டின் Lviv இலத்தீன் வழிபாட்டுமுறை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Mieczysław Mokrzycki.

மதச்சார்பின்மை என்ற போக்கு அதிகரித்துவருகின்றபோதிலும், புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடும், புதிய பங்குத்தளங்கள் உருவாக்கல்களும் இடம்பெற்றுத்தான் வருகின்றன என்று கூறிய பேராயர் Mokrzycki அவர்கள், உக்ரைன் தலத்திருஅவை வசந்தகாலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இளையோர் சிரமமற்ற ஒரு வாழ்வைத் தேடி, புலம்பெயர முயன்றுவருவதாலும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆளுமை குறைந்துவருவதாலும், மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துவருவதாலும், தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக உரைத்த பேராயர் Mokrzycki அவர்கள், இளையோருக்கு உண்மையான மதிப்பீடுகள் காண்பிக்கப்பட்டு, அவர்கள் தவறான வழியில் சென்றுவிடாமல் இருக்க வழிகாட்டப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

2014ம் ஆண்டு முதல் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களின் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பேராயர் Mokrzycki அவர்கள், உயிர்களையும் உறவினர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளோருடன்  அருகில் இருக்க திருஅவை ஆவல் கொள்கிறது என தெரிவித்தார்.

புனித திருத்தந்தை இராண்டாம் யோவான் பவுல் அவர்களின் திருஉருவச் சிலைகள் உக்ரைன் நாட்டின் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும், பல கோவில்களும், வளாகங்களும், பூங்காக்களும் அவரது பெயரால் அழைக்கப்படுவதாகவும் உரைத்த பேராயர் Mokrzycki அவர்கள், அப்புனிதத் திருத்தந்தையின் படிப்பினைகள், நாட்டின் ஆன்மீக உருவாக்கலுக்கு மிகவும் உதவுவதாக உள்ளன என மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...