கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரியவந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும், மன்னரால் அறிவிக்கப்பட்டது.
ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார். வழியில் ஒரு நகை கிடப்பதைப் பார்த்து எடுத்தார். அது பற்றி விசாரித்தபோது, அது அரசியின் நகை என்பதும், அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.
மன்னர் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால், அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல், அந்த நாள் கடந்ததும் மன்னரிடம் கொண்டுபோய் கொடுத்தார்.
மன்னர் முழு விபரமும் கேட்டுத் தெரிந்துகொண்டு, ''நகை கிடைத்த உடனே நீங்கள் கொடுத்திருந்தால், பரிசு கிடைத்திருக்கும். இப்போது உங்களுக்கு மரணதண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார். தாமதத்திற்குக் காரணமும் கேட்டார்.
ஞானியோ மன்னரை நோக்கி, ''நகை கிடைத்ததும் வந்து கொடுத்திருந்தால், நான் பரிசுக்கு ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில், எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை. மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சி, நான் கொடுக்காமலே வைத்திருந்தால், நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள். எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை. நகையை அப்படியே வைத்துக்கொண்டால், அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள். எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை. அதனால் இப்போது கொண்டுவந்து கொடுத்தேன்'' என்றார்.
மன்னரோ, ''இப்போது உங்களுக்கு மரணதண்டனை கிடைக்க உள்ளதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு ஞானி, ''தர்ம வழியில் நடக்கும் ஒருவனைத் தண்டிக்க அரசன் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று சொல்லியபடி, கம்பீரமாக அங்கிருந்து நடந்தார். மன்னர் வணங்கி விடை கொடுத்தார்.
No comments:
Post a Comment