மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில், 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த, புகழ்பெற்ற "கறுப்பு நசரேன்" பக்திப் பேரணி, கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக இரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடி சூழலில், மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், பாரம்பரியமாக நடைபெறும் கறுப்பு நசரேன் பவனி, இரத்து செய்யப்பட்டிருப்பதாக மனிலா அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், வருகிற நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் இடம்பெறும் அனைத்துப் புனிதர்கள் மற்றும் இறந்தோர் நினைவு நாள்களில், மக்கள் கூட்டமாக கல்லறைகளைத் தரிசிக்கச் செல்வதைத் தவிர்க்கும் விதமாக, கல்லறைத்தோட்டங்களை மூடுவதற்கு ஆணையிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அந்நாள்களில், ஆலயங்களின் கொள்ளளவில், முப்பது விழுக்காட்டுப் பகுதியில் மட்டுமே விசுவாசிகள் இருப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்தால் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பெரிய திருவுருவம், 1607ம் ஆண்டில், அகுஸ்தீன் சபை அருள்பணியாளர்களால், இஸ்பெயின் நாட்டிலிருந்து மனிலாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைக் கொண்டுவந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், இத்திருவுருவம் கறுப்பு நிறமாக மாறியது என சொல்லப்படுகின்றது.
கறுப்பு நசரேன் பவனியில், பக்தர்கள் காலணி அணியாமல் பற்கேற்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு, சனவரி 9ம் தேதி, 22 மணிநேரம் நடைபெற்ற இந்த பவனி மற்றும், பெருவிழா நிகழ்வில், குறைந்தது ஐம்பது இலட்சம் பேர் பங்கேற்றனர் என்று சொல்லப்படுகிறது.
தற்போது பிலிப்பீன்ஸ் நாட்டில், ஏறத்தாழ 3,64,000 பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், அந்நோய்க்கு 6,783 பேர் பலியாகியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. முன்னாள் இஸ்பானிய மற்றும், அமெரிக்க காலனியாகிய பிலிப்பீன்சின் ஏறத்தாழ பத்து கோடியே எழுபது இலட்சம் மக்களில், எண்பது விழுக்காட்டினர் கத்தோலிக்கர் (AsiaNews / Agencies)
No comments:
Post a Comment