Friday 23 October 2020

திருத்தந்தை பிரான்சிஸ் - முதலாம் பர்த்தலோமேயோ

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயோ


உரோம் நகரில் உள்ள அந்தோனியானும் பாப்பிறைப் பல்கலைக் கழகம், அக்டோபர் 21, இப்புதனன்று, முதுபெரும் தந்தை பார்த்தலோமேயோ அவர்களுக்கு, மெய்யியலில் கவுரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 22 இவ்வியாழன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயோ அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார்.

"எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை. அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில், அக்டோபர் 20, இச்செவ்வாயன்று உரோம் நகரின் Campidoglio குன்றில் நடைபெற்ற பன்னாட்டு, பல்சமய இறைவழிபாட்டிலும், பொதுக்கூட்டத்திலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பங்கேற்ற முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார் திருத்தந்தை.

இதற்கிடையே, உரோம் நகரில் உள்ள அந்தோனியானும் பாப்பிறைப் பல்கலைக் கழகம், அக்டோபர் 21, இப்புதனன்று, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு, மெய்யியலில் கவுரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்த விழாவில் உரையாற்றிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, வெறும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனை மட்டும் கிடையாது, மாறாக, அது, மதமும், நன்னெறியும் சார்ந்த ஒரு விடயம் என்றும், மனசாட்சியுள்ள, மத உணர்வுள்ள எவரும் இவ்வுலகம் சீரழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு மௌனம் காக்கமுடியாது என்றும் தன் ஏற்புரையில் கூறினார்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பாராட்டிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், படைப்பின் மீதும் சுற்றுச்சூழல் மீதும் காட்டிய ஈடுபாடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Laudato Si திருமடலுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தது என்று கூறினார்.

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்ட இந்நிகழ்வில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக், மற்றும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் ஆகியோரும் பங்கேற்று, முதுபெரும் தந்தைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...